Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
கட்டுரை

அம்பறாத்தூணி
-- ஜாவேத் அக்தர்

தமிழில்
மதியழகன் சுப்பையா


தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் கவிதைகள் உண்டு. தலைமுறைகளைத் தாண்டி வாழும் கவிஞர்கள் உண்டு. ஆனால் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து அடுக்கடுக்காக ஏழு தலைமுறைக்கும் எழுத்தாளர்களாகவோ அல்லது கவிஞர்களாகவோ இருப்பது வியப்பிலும் வியப்பு தானே!! அப்படியொரு கவிதைப் பரம்பறையில் பிறந்தவர்தான் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை-வசன எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஜாவேத் அக்தர்.

கவிஞர் ஜாவேத் அக்தர் ஜனவரி 17, 1945ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் கவிஞர் ஜன நிஷார் அக்தர் மற்றும் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ஷாபியா அக்தர் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

உருது கவிதையுலகில் மிகவும் போற்றப் பட்ட கவிஞர் மஜாஜ், ஜாவேத்தின் தாய்மாமன் ஆவார். மேலும் இவரின் தாத்தா முஜ்தர் கைராபாதி உருது இலக்கியத்தில் ஒரு மைல் கல்லாக கருதப் பட்டு வருகிறார். ஜாவேத்தின் உடன்பிறந்த இளைய சகோதரர் சல்மான் அக்தர் சைக்கோஅனலிஸ்டாக இருக்கிறார்.

இளம் வயதிலேயே தாயை இழந்தார் ஜாவேத். அவரின் தந்தை மும்பைக்கும் லக்னவுக்கும் இடையில் இடையறாது ஓடிக்கொண்டிருந்தமையால் ஜாவேத் தனது உறவினர்கள் வீட்டில் வளர்ந்தார். அலிகாட் முஸ்லீம் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் இயங்கிய கால்வின் தலுக்கார் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும் போபாலின் கைபியா கல்லூரியில் தனது இளங்கலை பட்டத்தையும் பெற்றார்.

படிப்பை முடித்த ஜாவேத் மும்பைக்கு வந்து சிறிய படக் கம்பெனிகளுக்கு நூறு ரூபாய் கூலிக்கு கதை வசனங்கள் எழுதிக் கொடுக்கத் துவங்கினார். இவர் பெரும்பாலும் துணை எழுத்தாளராகவே விளங்கி வந்தார். ஜாவேத் தனது எழுத்துப் பணிகளை உருது மொழியிலேயே செய்து வந்தார். அவை சில துணை எழுத்தாளர்களால் இந்தியில் எழுதப் பட்டது. பின் ஆங்கிலத்தில் டைப் செய்யப் பட்டது. துவக்க காலத்தில் ஜாவேத் தனது நண்பர் சலீம் கானுடன் இணைந்து பணியாற்றி வந்தார். இவர்கள் 1980 வரையில் இணைந்து பணியாற்றினார்கள். பின் ஜாவேத் திரைப்பட பாடலாசிரியர் பணியில் தீவிரமாகி விட்டார்.

ஜாவேத்திற்கு அவரது தந்தை 'ஜாதூ' (மந்திரம்) என்றுதான் முதலில் பெயர் வைத்தார். இந்த வார்த்தை ஜாவேத்தின் தந்தையும் கவியுமான ஜன் நிஷார் அக்தர் எழுதிய 'லம்பா, லம்பா கிசி ஜாதூ கா பஹானா ஹோகா' என்ற வரியிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது. பின் பதிவு செய்யப் படுகையில் ஜாவேத் என்று ஆகி விட்டது.

கவிஞர் ஜாவேத் அக்தர் இந்தி திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதும் ஹீனி இரானியை மணந்தார். இவர்களுக்கு பர்ஹன் அக்தர் மற்றும் ஜோயா அக்தர் என்று இரண்டு குழந்தைகள் பிறந்தது. பர்ஹன் அக்தர் இன்று பிரபல இளம் திரைப்பட இயக்குனர் ஆவார். ஹீனி இரானியுடன் திருமணம் நடக்க நண்பர் சலீம் காரணமாக இருந்திருக்கிறார். ஆனால் இரானியின் தாயாரிடம் ஜாவேத் குறித்து தவறாக சலீம் சில தகவல்களைச் சொன்னதாக கூறப் பட்டு அது பெரும் பிரச்சனையாகி ஜாவேத்-இரானி தம்பதி பிரிந்து விட்டது.

ஹீனி இரானியை மணவிலக்கு செய்த ஜாவேத் உருது மொழியின் பிரபலக் கவிஞர் கைபி ஆஜ்மியின் மகளும் பிரபல திரைப்பட நடிகையுமான சபானா ஆஜ்மியை மணந்தார். இன்று இந்தித் திரையுலகில் நல்ல தம்பதிகளாக மட்டுமன்றி நண்பர்களாக வலம் வருகின்றனர்.

ஜாவேத் அக்தருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய தேசிய விருது ஐந்து முறையும் பிலிம்பேர் விருது ஏழு முறையும் கிடைத்துள்ளது. 1999ம் ஆண்டு இந்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ பட்டமும் 2007ம் ஆண்டு பதமபூஷன் பட்டமும் வழங்கப் பட்டு கௌரவிக்கப் பட்டது. 2007ம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டு கௌரவிக்கப் பட்டது.

'தர்கஷ்' என்ற இவரது கவிதைத் தொகுதி பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இன்னும் சிறுகதைகளும் சினிமா குறித்த கட்டுரைகளும் எழுதியுள்ளார். கவிதையும் கஜலும் இவருக்கு வாய்த்த வரம் எனலாம். உருது மொழியின் மென்மை இவரது உச்சரிப்பாலும் கவிதையில் பயன்பாட்டாலும் இன்னும் மென்மையாகி விடுகிறது.
 
 
 
தமிழ்க் கவிதையில் சூழலியல் பதிவுகள்
வாமன விதையின் விருட்சம்
நளாயினியின் கவிதைநூல்கள் அறிமுகமும் இலக்கிய ஒன்றுகூடலும்
சிங்கபூரகத்தில் நடந்த கணையாழி விழா
சிங்கப்பூர் கணையாழி விருது-2006
தைத்திருநாள் விழா கவியரங்கம்
புதுக்கவிதைகளில் இளைஞர்கள்
தைத்திருநாள் விழா கவியரங்கம் - 2
புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 - 52 நூல்வெளியீடு
சிங்கப்பூர் வாசகர் வட்டம் - கதை விவாத நிகழ்வு
துபாய் கவிதைத் திருவிழா
26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு
கணையாழி விழா 2007
நேற்றிருந்தோம் 2007
இப்படிக்கு இவனும், இவனது கவிதையும் …
ஈழத்து நூல்க்கண்காட்சியும் அதன் அசைவுகளும்
துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் நிக‌ழ்ச்சி
கவிதை தொடர்பான கட்டுரைகள், நிகழ்வுகளைப் பதிவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள். தொடர்புகட்கு
நூல் விமர்சனம்
என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!
  - பெண்ணியா
கவிஞர், தன்னை உணர்ந்ததால் இந்த மனித வாழ்வின் மீதான பொய்மைத்தனங்களை நன்கு உணரக் கூடியவளாக இருக்கிறார்
என்.செல்வராஜா
மேலும்...            
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்