Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
ஆழிப் பேரலை நினைவாக
ஆழிப் பேரலைகள் (சுனாமி)

உன்னை சக்களத்தி என்று இகழாமல்
சிவனின் சிரத்தில் வைத்து நித்தம்
அழகு பார்த்து மகிழ்ந்ததால் தானா
அன்று நீ சினம் கொண்டு
சீறி எழுந்தாய்?

சீதையை சிறை வைத்த தேசத்தில்
எம் தமிழன் சிந்திய கண்ணீர்
உன்னில் உப்பாய் உறைந்தது
கண்டு மனம் வருந்தி தானோ
அன்றே கரை தாண்டி
கொதித்தெழுந்தாய் ?

வென்ற தோற்ற
காதல்களின் அடையாளமாக
மணல் வெளி எங்கிலும்
பாதச் சுவடுகள்

இயற்கை என்னும் மருத்துவச்சி
உன்னில் இருந்து பல செல்வங்களை
வெளிக்கொணர முயன்ற பிரசவம்
தோற்று போனதால் பிறந்து விட்ட
துயரத்தின் அடையாளச் சுவடு
தானா நீ?

எங்கள் பசிக்காக
உன் வளத்தை
சுரண்டி விட்டோம்
என்று கருதி நீ
வருடக் கணக்கில்
உண்ணாவிரதம்
இருந்தாயோ?

உன் அகோரப் பசிக்குப்
பருக்கையாய் எங்கள்
கரையில் ஒதுங்கிய
பிணங்கள்.

அழித்த நகரமும்
வளமும் போதாதா
உனக்கு?

வருடம் இரண்டு
கடந்த பின்னும்
கரை வேட்டியால்
கரை சேர்க்க
முடியாத வாழ்க்கையை
இன்னும் கரை ஓரம்
தேடுகின்றனர் சிலர்

குனிந்து கிளிஞ்சல் பொறுக்கும்
சின்னஞ்சிறு குழந்தை போல.

நாளைய பொழுதேனும்
நல்லதாய் விடியட்டும்
இனி எங்கள் வலைகளில்
மீன்கள் மட்டுமே தங்கட்டும்.

-- s.கிருஷ்ணன்
வருந்தாதே கடலே


வருந்தாதே கடலே
உன் அடிமடி பிளந்து
வெளிப்பிரசவமாகிய சுனாமிப் பயங்கரம் உன்
முதுகுமீதேறி அதிசவாரிசெய்தது.
நாம் அறிவோம்
வருந்தாதே கடலே
நீர்திருகி அலைதிரட்டி எம் வாழ்வின்
குரல்வளைவரை தாக்கியது.
உயிரோடு நீருள் புதையுண்டனர் மனிதர்கள்
சிதைவுகளுள் சொருகுண்டனர்
தப்பிப் பிழைத்தவர்கள் உறவறுந்துபோயினர்.
கதறினர் நினைவுகளை வீசி
அவர்தம் வரவை கேள்விக்குறிகளால்
வரைந்து தள்ளினர்.
வலிதாங்க முடியவில்லை.

எங்கள் குழந்தைகளும் சேர்ந்தே
காணாமல் போயினர், காவுபோயினர்.
மரணம் எம் மனிதர்களை
உனது மடியில்வைத்து
உயிர்கோதி உறங்கச் செய்த கதை
சொல்லிமாளா.
வலிதாங்க முடியவில்லை.

நீ மண்ணோடு பிணைந்ததனால் நாம்
உன்னோடு பிணைந்தோம் பார்.
வாழ்வளித்து வாழ்வளித்து
சலிப்படையா மனசுனக்கு.
நீ அளித்த வாழ்வின் பலிபீடம்
உன் பரப்பில் நாட்டப்பட்டிருந்ததுதான்
இன்னும் துயர் தருகிறது.
வலிதாங்க முடியவில்லை.

கடலே,
உனை தழுவி எழும் காற்றுக்குச்
சொல்லிவிடு - வீழ்ந்த எம் வாழ்வை
சிலிர்ப்பிவிடு என.
எஞ்சிய எம் மனிதர்களை
நோய் பசி எடுப்பெடுத்து
மரணமேடைக்கு அழைத்துச் சென்றுவிடாதே
என்றேனும் சொல்லிவிடு.
வலிதாங்க முடியவில்லை.

ஏவியவன் இருக்க அம்பை நொந்தென்ன.
வருந்தாதே கடலே
உன்மீது வலைவிரித்து
அவர்கள் தம் வாழ்வைப் படர
மீண்டும் வருவர்.
நிலாச் சந்திப்பொன்றில்
காதலர்கள் ஒளிவீசி உன்
மணலில் புரண்டெழுவர்.
ஓயாது நீ பாறைகளில்
மோதுமோர் உயிர்ப்பொழுதில்
துயர்கரைத்து
இலேசாகிப்போக நான் வருவேன்.
ஓயாது மண்நுகரும் உன்
அலைநுனியின் குறும்பினில் எம்
குழந்தைகள் மகிழ்வெடுப்பர்.
அளைந்து அளைந்து
அழிவினதும் ஆக்கத்தினதும் புள்ளிகளில்
நம்பிக்கைகளை சலிப்பின்றி வரைவர்.
வருந்தாதே கடலே, நீ
வருந்தாதே!

- ரவி (சுவிஸ்)
சுனாமி - நல்ல தருணம்.

அழகிய அக்பர் கிராமம்
அன்பான மௌலானா வீட்டுத்திட்டம்
இன்னொரு இருபத்தைந்து மீனவர்திட்டம்
இன்றைய மக்பூலியாபுரம் (அன்றைய பஞ்சாப்) என

ஆண்டாண்டுகாலமாக எங்கள் முதியோர்
ஆதியில் தடம் பதித்த
சுவடுகளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்
சுருட்டி எறிந்து விட்டாய்.

பணம் நகை பாத்திரங்கள்
பத்திரப் படுத்திய ஆவணங்கள்
வீடுவாசல் எதுவும் வேண்டாமென
வீதிக்கு ஓடிவந்த எம்மக்களை,

உடுத்த உடைகள் கூட
உடலில் காக்க விடாமல்
உக்கிரமாய்ப் பிய்த் தெடுத்து
உள்வாங்கிக் கொண்டாய் நீ!

பிறக்கப் போகும் பிள்ளையையோ
இறக்கப் போகும் தறுவாயையோ
கண்டுகொள்ளாமல் குருவிக் கூட்டுக்குள்
குண்டு வைத்ததுபோல் ஆக்கிவிட்டாய்!

ஆக்குவதும் அழிப்பதும் நீதான்
அவனியிலே அதற்கு இணையில்லை
எனவுணர்த்தவா ஆழிப்படைகளை அனுப்பி
அரைமணிக்குள் ஆக்கிரமித்து விட்டாய்!

ஆகாயம் கடல் தரையென
அதி நவீன ஆயுதங்கள்
அதிலும் உயர் தொழிநுட்பம்
அத்தனையும் இருந்தென்ன பயன்?

கடல் ஆகாயம் தரைகளையே
படைகளாக்கி ஆட்டங் காணவைப்பேன்
என நீ உணர்த்திவிட்டாய் -
அகிலத்தையே நடுநடுங்க வைத்துவிட்டாய்.

கடலில் கால் பதித்து
அலைகளை அள்ளி முத்தமிட்டு
அணைத்து புரண்டு விளையாடி
ஆனந்தப் பட்ட நாங்கள்,

ஆலை என்றதும் அலறி அடித்துக்கொண்டு
ஏறுதற்கு இடம் தேடுவதையும்
ஓடுதற்கு வழி பார்ப்பதையும்
வேடிக்கை பார்ப்பதற்கா எங்களுயிர் காத்தாய்?

இல்லையில்லை இது எச்சரிக்கை மட்டும்தான்
இன்னும் உன் தண்டனை இறங்கவில்லை!
இரவு பகலாகவும் பகல் இரவாகவும்
சூரியன் மேற்கிலும் விழிகள் உச்சியிலும்,

மாறும் நாள் வருவதற்குள் எங்களை
மாற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்
இது ஒரு நல்ல தருணமும்கூட
உன்னை நன்கு புரிந்து கொள்வதற்கு.

- எஸ். ஏ. ஹப்பார்
சுனாமி
----------------------
சுனாமியா
எமனுக்கு பினாமியா

சிற்றலையா பேரலையா
செய்யவந்தது பெருங்கொலையா

நிலையில்லா வாழ்க்கையென்று
அலையடித்துச் சொன்னாயா

அன்று
பொறுமை கடலினும் பெரிதென்றோம்
இன்று
எங்கள் துயரம் கடலினும் பெரிதென்போம்.
அன்று
பொறுமைக்கு உவமையாய் இருந்த கடல்
இன்று
மரணம் எனும் வெறுமைக்கு
உவமையாய் போனதேனோ.

உப்பிட்ட கடல் தாயே
உயிர் எடுத்து மகிழ்ந்தாயோ.
காற்று வாங்க வந்தவனை
கடல் கொண்டு போன கதை
காண வேண்டாம்
கேட்க வேண்டாம்
கடல் தாயே வேண்டுகிறேன்.

கடல் தாயே
உன் தண்ணீரால்
மரணம் வேண்டாம்
எனக் கண்ணீரால் வேண்டுகிறேன்.

உப்பிட்ட உன்னை
மறந்தோம் என்று
உயிர்களை நீயும் பறித்தாயோ
உலகுக்கு பாடம் கொடுத்தாயோ.

இயற்கையை மனிதன் வணங்கவில்லை
என்று
மரணத்தின் இறக்கையாய்
வந்து அழித்தாயோ
இரக்கமற்ற பாடம் கொடுத்தாயோ.

இயற்கையின் தாலாட்டு தான்
கடல் அலை என்றிருந்தோம்.
மரணத்தின் பாடல் அது
என்று மறைபொருளில் சொல்லிவிட்டாய்.

பலரின் கண்ணீரைப் பெற்றதால்தான்
உன் தண்ணீர்
உப்பு காரிக்கிறதா?

அஞ்சலி செய்ய உறவும் இல்லை
அடக்கம் செய்ய ஆளும் இல்லை.

வெட்டியான் வேலையை
நீ மொத்தமாக செய்துவிட்டாய்.

விளையாட சென்றவனை
கொலை போட வந்தாயோ
நடை பயில வந்தவன்
நடை பாதை பிணமானான்.

போதும் உன் கொலை வெறி
போய் உறங்கு கடல் தாயே.
எங்கள் கண்ணீர் வற்றி
போகும் முன்னே
உன் தண்ணீர் வற்றி
போகட்டும்.


-- மின்னல் இளவரசன்
இன்னமும் ஏதோவொன்றிற்காய்


இடி இடிக்க பூமி நடு நடுங்க
பித்தம் தலைக்கேறி
வாந்தியெடுத்தது வானம்

கிருதயுகம, திரேதயுகம், துவாபரயுகம்
எல்லாம் சுமூகமாக முற்றுப்பெற்றபோதும்
கலியுகத்தில் மட்டும்..
பூமாதேவியின்
கோரத்தனமான ஆட்டத்தில்
அண்டம் - ஆங்காங்கே சரிந்து
நிமிர்ந்தது

அச்சரிவுகளுக்கு அசைவுகொடுக்க முடியாமல்
ஏழுகடல்களும் ஆட்டம்கண்டு
கொடுங்கோபத்தோடு கொந்தழித்தது

பெருக்கெடுக்கும் கடல்நீரை குடிமனைகள் மீது
உமிழ்ந்துகொட்டியது

வெறித்தனமான சூறாவளியின் வேகத்தில்
கட்டடங்கள்முதற்கொண்டு
மரங்கள், மனிதஉயிர்கள்
மற்றும் எல்லாஉயிரினங்களும்
ஒன்றாய் துவைக்கப்பட்டது
சாவுக்கஞ்சி அவை எழுப்பிய
கூக்குரல்கள்
வங்கம் முதல் வைகுண்டம்வரை
பேரதிர்வைக்கிளப்பியது-அதிர்வின் எதிரொலியில்
வானமும் பலதுண்டங்களாய் வெடித்துச்சிதறியது

மண்ஆசை
பெண்ஆசை
பொன்ஆசை கொண்டவர்கள்
கொள்ளாதவர்கள்
எல்லோரும் ஒன்றாய்
சாதி, மதம், இனம், பால்
வேறுபாடின்றி
ஒரேபடுக்கையில்
மூர்ச்சையடைத்துப்போய்ப்
பிணங்களாய்ப் பிரண்டுபோயினர்

சொற்ப இடைவெளிகளின் பின்
வெடித்துப் பிழந்த வானம்
இருளைமட்டுமே மெழுகியிருந்தது
ஆடிய ஆட்டம் எல்லாம் ஓய்ந்து போனபோது
அண்டம் - எங்கும் மௌன விரதத்துடன்
ஏதோவொன்றிற்காய்க் காத்துக்கிடந்தது.

-எதிகா (01.08.2004)
பேரலையின் முடிவினிலே

கலர்கலராய் என்ஜிஓக்கள்
காது குளிரும் வாக்குறுதிப் பொதிகள்
ஊருக்;குள்ளேயதன் முகவர் மட்டும்
மாடத்து வாசமுடன்
குளிர்பதன பவனிவர
நாங்கள் மட்டுமின்னும்
நலன்புரிநிலைய சாக்கடைக்குள்
தெருவோர எச்சில் பொறுக்கிகளாய்…

கிண்ணியா எஸ்.பாயிஸாஅலி
ஆழிப் பேரலை

கடல் தாயே வஞ்சனை பேயின்
வர்க்கமடி நீயும்
எம தன்னை என்றுதானே
தொழுது வந்தோம் உன்னை
கும்பிட்ட கரங்களை ஏனடி முறித்தாய்

பேரிடி இல்லை பெரும் புயல் இல்லை
யாரடி உன்னை ஆட்டி வைத்தார்
சுனாமியாய் எழுந்தே ஊர்மனை புகுந்து
லெட்சோப லெட்சம் ஜீவனின் உயிரை
அள்ளி உண்டாய்

ஒன்றா இரண்டா மாண்டவர் இங்கே
ஈராறு தேசத்தின் சேய்களடி
இரண்டரை லெட்சம் ஜீவனடி
பத்து மாதம் சுமந்தவளும்
பஞ்சுக் கால் பிஞ்சுகளும்
இளமைக் கால அரும்பும் பூவும்
முதுமைத் திரையை தொட்டவரும்
தெப்பம் என மிதக்கயிலே
தெய்வத் தாயென உனை யார் சொல்வார்

தாயினை இழந்து தந்தையை இழந்து
தவிக்கும் இந்த சேய்களை பார்
பிள்ளையை இழந்தும் பிரிவினை இன்றி
பித்துப் பிடித்துளரும் மாந்தரை பார்
மாடி எங்கே மனையும் எங்கே
நாம் கூடி வாழ்ந்த ஊரும் எங்கே

மயானம் என்று எப்படிச் சொல்வேன்
பிணத் தோப்புக் குவியலிலே
யாருக்கென நான் அழுவேன்
ஒத்திய பிணங்களை ஓரமாய்
கிடத்தி விட்டு
எஞ்சியோரை தேடுகிறது உறவு
எச்சம் ஏனும் கிடைக்காதோ என்று

பொழுது புலரும் வேளையிலே
அந்திமத்தை இறைத்தவளே
வேழ்வித் தீயில் விதைத்தவர் உயிரை
விடியல் பொழுதில் தோண்டி எடுப்போம்
கொடியவள் உன்னால் மாண்டவர் உயிரை
யார் மடி மண்ணில் தேடி எடுப்போம்.

வல்வை சுஜேன்,சுவிஸ்
ஆழிப் பேரலை

அப்பா அப்பா அப்பப்பா-ஜப்பான்
அழிந்த நிலையைப் பாரப்பா
தப்பா தப்பா தப்பப்பா-கடலை
தாயென அழைத்தது யாரப்பா
உப்பா உப்பா உப்பப்பா-ஆனால
உணவே உப்பா கூறப்பா
இப்பா இப்பா இப்பாவப்பா-என்
இதய வேதனை உணர்வப்பா

சொல்லில் அடங்கா காட்சியப்பா-எனில்
சொல்ல வேணுமா சாட்சியப்பா
வில்லில் விடுபடும் அம்பைவிட-இதன்
வேகம் ஆயிரம் மடங்குபட
கொல்லும் கொலைவெறி கூச்சலிட-காணில்
கூற்றனும் கூட‍ அச்சபட
புல்லும பூண்டும மிஞ்சவில்லை-அங்கே
போயின அனைத்தும ஏதுஎல்லை

குப்பைஅள்ளி கொட்டினபோல்-எங்கும்
குவிந்தது மனித உடலங்கே
தப்பை செய்தாய் தாயாநீ-எவரும்
தடுக்க இயலா பேயாநீ
செப்ப உவமை உனக்குண்டா-இனியும்
செப்பிட தாயென வழிவுண்டா
எப்போ எழவாய் வருவாயோ-என
ஏங்கும் நிலைதான தருவாயோ

அணுவின் உலையும் போயிற்றே-ஊர்
அனைத்தும இருளாய் ஆயிற்றே
கணுவில் துளிரும கருகிவிட-எங்கும
காணும் காட்சிகள கண்ணீரவிட
இனியும எதற்கு அழித்துவிடு-இவ்
உலகை உன்னுள் ஆழ்த்துவிடு
கனிவுடன் உன்னை வேண்டுகிறேன்-மனம்
கனிந்து உடனிதை செய்வாயா---

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24
சுனாமியின் நினைவால்...

ஆழிநீர் பொங்கியதால்
விழிநீர் தேங்கியதோ...!
வழிகாட்ட வருகிறான்! - புது
ஒளியேற்ற வருகிறான்
எம்மிளைஞன்!
சீற்றம் ஓய்ந்தாலும் - சுனாமியின்
தாக்கம் ஓயவில்லை!
துன்பம் வேண்டாம்
தமிழ்ச்சிங்கங்களே!
கவலை வேண்டாம்
கடலோரக் கவிதைகளே!!
நம்பிக்கைப்படகிலே
வியர்வைத்துடுப்பெடுத்து
முயற்சிவலை வீசி - சுனாமியின்
நினைவலைகள் தாங்கி - மன
மகிழ்ச்சிமீன்களை பிடித்து
தைமகளை வரவேற்போம்! - வருந்
தைமகளை வரவேற்போம்!!

முனைவென்றி நா சுரேஷ்குமார்
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு
நம்நினைவில் சுனாமி!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!
கரைமீறும் கண்ணீர்தான் ஏழையின் பாடு!
ஆழிக்குள் பூகம்பத்தின் நினைவோடு
நம்நினைவில் நம்பிக்கைகீதம்பாடு!
நினைத்துப் பார்த்தால் சோகம்! - சுனாமியை
நினைக்கமறந்தால் பாவம்!!
கண்ணீர்வழி உருகியது தேகம்!
சுனாமியால் பழியான உயிர்கள் போதும்!
கடலையால் இயற்கையின் சீற்றம்!
காலம் கொடுக்குமே புதுப்புது மாற்றம்!!
போதும்கண்ணே நம்மனதில் ஏக்கம்!
விடியும்வரை தாய்மடியில் தூக்கம்!!
இனிமாறிவிடும் தமிழனின் துக்கம்!
துணிந்தால் வெற்றியெல்லாம் நம்பக்கம்!!முனைவென்றி நா சுரேஷ்குமார்,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு
ஆழிப் பேரலை நினைவாக

அட்டூளியங்களின் பினாமியே சுணாமி..
அநியாய அரசின்
அடாவடி ஆட்சிக்குள்
அல்லல் பட்டவர்
அழுது ஓய முன்
அலை கடல் எழுந்து
ஆடி முடித்து ஓய்ந்த
பொ்ழுதுகள் இன்னமும்
எங்கள் மனத் திரையில்
ரணங்களாய் நிலைக்க
அந்த மார்கழி 26ன்
இறுமாப்பு...
இன்று போல்
இ்தயத்தை இறுக்குது.
வருடா வருடம்
வருட மறக்கும்
மார்கழியே! உனக்கில்லை
வரவேற்ப்பு..
வலிகளுடன்

ரி.தயாநிதி..
ஆழிப் பேரலை நினைவாக

பொங்கிவரும் அலையது
கரைவந்ததும் சிறு
கிள்ளை என கால் தழுவி -
நின்றால் உள்ளமதில்
பொங்கும் மகிழ்வு -
ஏனோ இன்றில்லை...
சோகமும் பயமுமே
மனதை பிசைகின்றன....
அந்த நாள் மட்டும்
ஏன் உனக்கு அப்படியோர்
அகோரப் பசியோ??
உன் கரையதில்
ஆடி விளையாடி
களித்திட்டோர் எத்தனையோ...
இன்று உன்னால்
கண்ணீர் சிந்துவோரும்
எத்தனையோ....
நீயும் தான் ஆக்கிவிட்டாய்
திசம்பர் 26ஐ .......எண்ணினாலே
குலைநடுங்கும் நாளாய்-
அனைவரது மனதிலும்!!!

- பி.தமிழ் முகில்,USA
கண் இமைக்குள் உனை வைத்தே!
காலம் எல்லாம் வாழ்ந்தோம்
கடல் எங்கள் தாயென்றே- உன்
கால் ஓரம் கிடந்தோம்.
அலை கரத்தால் எம் உடலை
அன்போடு தொடுவாய்….
அதை எடுத்து எம் நெஞ்சின்
ஆழத்தில் புதைப்போம்.
உனை விட்டு ஒரு நாளும்
ஊர் தள்ளி போகோம்.
உன் வாழ்வில் எம் வாழ்வை
ஒன்றாகக் கலந்தோம்.
ஓர் இரவில் உன் உயரம்
ஓங்கியது ஏனோ?
உயிர் குடிக்க உந்தனுக்கு
தூண்டியது யாரோ?
தாயே தன் பிள்ளைகளின்
தலை கொய்யலாமோ?
தடை உடைத்து மதம் பிடித்து-எம்
தடம் அழிக்கலாமோ?
உன் மீது நாம் கொண்ட
உயிர் பாசம் எங்கே?
உணர்வறுந்து உயிர் குடித்த,
உலகோடு சேர்ந்தாய்……….!
இப்போதும் எம்காதில் நீ இரையும் சத்தம்
எம் உயிர்கள் பேசுவதாய் இருக்கிறது நித்தம்
கண்ணீர்தான் எம் இடத்தில்கடசிவரை மிச்சம்
கடல்தாயே?எனி வேண்டாம் எங்களுக்கோர் அச்சம்...

-பசுவூர்க்கோபி,Netherlands


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்