Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
அன்னைக்கு...
அன்னைக்கு
------------

-சக்தி சக்திதாசன்

அன்னைக்கு ஒரு
அன்பான கடிதம்
அலைமோதும் நெஞ்சுடன்
அன்பான மைந்தன்

நீயில்லை அம்மா இன்று என்னோடு
நீயில்லாத உலகம் பகலில் இரவு
நின் நினைவில்லாமல் இதயம்
நின்று விடுமே அம்மா

வந்த துனபங்கள் யாவையும்
வரவாக வைத்துக் கொண்டு
இன்பங்கள் அனைத்தையும்
இரைத்தாய் எமக்குச் செலவாய்

சேமிப்பாய் உன்னிடம் இருந்தவை
செல்வங்கள் எம்மீது நீ கொண்ட அன்பு ஒன்றே.. நீ
சேர்ந்து விட்ட இடம் தெரியாமல்
சோர்ந்து விட்டதம்மா என் மனமும்

கண்களிலே அன்பு ஒன்றை மட்டுமே
கண்டேன் அம்மா உன்னிடத்தில்
கவலைகளை மட்டும் ஏனொ நீயும்
காட்டாமல் மறைத்து விட்டாய்

எம்மிடம் நீ காட்டிய அன்பின்
எல்லையைக் காணமுடியாமல் நாம் ....
எங்கிருந்து அம்மா மீண்டும் எல்லையற்ற கடலாய் அன்பை
எடுத்தே தூவினாய் உன் பேரக்குழந்தைகள் மீது

இயற்கை என்பதே இறைவன் என்றால்
இறைவன் படைத்த பாத்திரங்களுள் அம்மா?
ஈடு செய்ய யாருமில்லை உன்னொருத்தியின்
இணையற்ற பாசமிகு பாத்திரத்தை

உன் நெஞ்சினில் ஈரம் கொண்டாய்
உன் கண்களில் கருணை கொண்டாய்
உன் கைகளில் ஆதரவு கொண்டாய்
உன் சொல்லில் கனிவு கொண்டாய்

ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினமாய்
உருண்டு கொண்டே போகின்றது
ஒன்பது வருடங்களாய் என் அன்னையர் தினங்கள்
ஒவ்வொன்றுமே வெறுமையாய் உருளுது

வாழும் போது வாழ்த்துக்கவிதை
வடிக்கச் சந்தர்ப்பம் கிட்டா மைந்தனிவன்
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
சிதறுகின்ற கவிதைப்பூக்களால் உன்னை
சீராட்டி அர்ச்சிக்கின்றேன் அம்மா

உன் நினவின் வழி நின்று
உன் அன்பின் துணை கொண்டு
உலகத்தின் அன்னஒயர் அனைவர்க்கும்
பாதந்தொட்டு வணங்கி வாழ்த்துக்கள் தூவுகின்றேன்

அன்னையரே நீவீர் வாழ்க
அன்னையைப் போலொரு தெய்வம் இல்லை
அன்னைகள் என்னும் உன்னத ஸ்தானத்தை
அடைந்த நீவிர் வானுறைத் தெய்வங்களே
அன்னைக்கு!
===========

தவமியற்றும் ஞானியர்க்கே
தன்னைக் காட்டும் தெய்வத்தைவிட,
தானிருக்கும் இடத்திலெல்லாம்
தயைபுரியும் தெய்வம்
தாய் அன்றி வேறில்லை!

படைக்கப்பட்ட மனிதர்களின்
பாவ புண்ணியங்களுக்கேற்றார்போல்
பலன் அருளும் தன்மையாம்
பகவானுக்கு.....

பத்துமாதம் கருவில் சுமந்தும்
பரிவும் பாசமும் ஊட்டி வளர்த்தும்
பாகுபாடு பாராத குணமன்றோ
நம் அன்னைக்கு!


- கிரிஜா மணாளன்,
திருச்சிராப்பள்ளி,
தமிழ்நாடு.
புரண்டு சிறிது படுத்தாலே
பிள்ளை வருந்தும் என்றெண்ணி இரவைப் பகலாய் ஆக்கிவிட்டே
இந்தச் சூரியன் தூங்காது..
மரத்துப் போன இதயங்களின்
மத்தியில் அன்பு நீரூற்று..
தரத்தில் இணையாய் அன்னைக்குத்
தரணியில் எதுவும்கிடையாதே...!

>செண்பக ஜெகதீசன்
சிலர்
முகத்தை பார்த்தார்கள்
சிலர்
அகத்தை பார்த்தார்கள்
அம்மா
மட்டும் தான்
பார்த்தாள்
வயிற்றை.

வீ.விஷ்ணுகுமார்,
அன்னைக்கு…..

நந்தவன இனிமை…..

எந்த உறவிலும் இல்லை இணை
இந்த உலகிலொரு தனிப்பெருமை
நந்தவன இனிமை நல் தாய்மை.
வந்தித்துப் போற்றல் நம் உரிமை.

அந்தமில்லா அரிய முதல் நேசம்.
நந்தாவிளக்கு நல் தாய்பாசம்.
சந்தத்தோடு பாடுவோம் தாயின் பாசம்.
சிந்தச் சிறக்கும் எம் சுவாசம்.

அவஸ்தைகளை மட்டும் தனக்குள்
ஆதரவுகளை எமக்காய் தந்தவள்.
சத்துக்களை மட்டும் எமக்குள்
சருகுகளைத் தானும் ஏந்துபவள்.

தன் சிறகின் கூடாரத்துள்
என் உயர்வை எண்ணியவள்.
என் சிறகின் கூடாரத்துள் - நானென்
கண்மணிகள் உயர்வை எண்ணுகிறேன்.

வாழையடி வாழையான உறவு.
தாய்மையடித் தாய்மையான தொடர்வு.
சுழலும் சக்கரமான வாழ்வு.
சுழன்று உய்த்திடுவோம் உயர்வு.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
17-05-2008.
என்ன சொல்லி எழுத முடியும்
அன்னைக்கான கவிதையை
'அன்னை' என்பதை விடவும்.

- இப்னு ஹம்துன்
கவித எழுத
தெரியாதடி...
உன்னை சுவாசிக்குற
எனக்கு.

முருகன் சுப்பராயன்
மும்பை
அன்னை…


ஆயிரம் பெண்களை விட
சிறந்தவள்
அன்னை…

இறைவன் படைப்பில்
நிறைவான படைப்பு
மனிதன்…
தாயின் கருவூலமே
இறைவனின்
ஆதாரம்…

தாயின் காலடியில்
சொர்க்கம்
‘தாஹா’ நபிகள் சொன்ன
சொக்கம்…

உதிரத்தை அமுதமாக்கி
உறவை அன்பாக்கி
உயிரை அடைகாக்கும்
களஞ்சியம்
அன்னை…

பிறப்புக்கும்
உறவுக்கும்
சான்றிதழ் அளிப்பவள்
அன்னை…

பிள்ளைகளின்
உழைப்பை விட
சரிரத்தின் நலனில் மட்டுமே
கவனம் கொள்ளும்
அகல் அன்னை…

லட்சங்களை சம்பாதித்தாலும்
தாயிடம் நேசமில்லை எனில்
வாழ்க்கையில் இல்லை
லட்சணம்…

தேடி தேடிச் சென்றாலும்
தேவையானதை தேடலாம்
ஆனால் அன்பை
அவள் மட்டுமே அளிக்கும்
அமுதசுரபி அன்னை…

தாயிடம் ச்சீ…என்ற
வார்த்தையை எவன்
உதிர்த்தானோ
அவன் நீசன் என்று கூறும்
அல் குர்ஆன்…

அன்னை
அரிச்சுவடி கற்றுத்தரும்
ஆசிரியை
நடைபயில வைக்கும் நாயகி
அறிவை புகட்டும் ஆசான்
நோய் தீர்க்கும் மருத்துவர்
அழகுபடுத்தி அழகு பார்க்கும்
கலைஞி
பசியை போக்கும் பயிர்…

அன்னைக்கு நிகர்
அவளே…!

-கிளியனூர் இஸ்மத், துபாய்..

அம்மா
நீ ஒரு
மூன்றெழுத்து
அதிசயம்
எட்டாவது உலக
அதிசயமெல்லாம்
ஏடுகளில் தான்
நீ மனதளவில்.


பந்தர் அலி ஆபிதீன்
பரங்கிப்பேட்டை.

முன்னூறு நாட்கள்
இன்பத்தால்
சுமந்து உனது உயிரால்
என்னை தரணியில் தவழ
வைத்த தாயே...!

உதிரத்தை பாலாக்கி
அன்பை உணவாக்கி
அரவணைப்பால் மடிமீது
தாலாட்டிய தாயே..

உனது அன்பால் நான்
இன்று புன்னகைக்கிறேன்
உனது கருணையால்
மனிதனாய் வாழ்கிறேன்
நிலவின்றி இரவிற்கு
வெளிச்சம் இல்லை
நீ இன்றி என் வாழ்வில்
வசந்தமே இல்லை..

என் உலகத்தில் பாசமலராய் நீ
வாழ்ந்ததால் கண்ணீர்
எனும் துன்பத்தில் நான்
இணை சேர்ந்ததில்லை..

எனது வாழ்விற்கு
புது புது அர்த்தங்களை
புதுபித்த தாயே...

ஆயுள் வரை உன்னுடன் நான்
இருக்கையில் மரணம்
என்னை நெருங்காது
ஒரு தெய்வத்திற்கு
சேயாய் வாய்க்கும் வரம்
ஒன்றை தந்த தாயே...

உனது பெருமை சொல்ல
இந்த வரிகள் போதாது...
மறுஜென்மத்தில் நீ எனக்கு
சேயாய் காய்தாலும் நான்
பட்ட கடன் தீராது............

உன்னை போன்ற
அன்னையை வெவ்வேறு
ஜென்மத்திலும் என்
கண்கள் காணாது....!

கருவறையில் உயிர்
தந்த தாயே...
எனது அன்பு கண்ணீரால்
எழுதுகிறேன்................!
அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!!!

- வீரமணி.v
அன்னைக்கு

கருவறையில் காத்த தாயே..!!!
கல்லறையில் உறங்கச் சென்றாயே -நான்
வரும்வரையில் படுத்திரு ; எனக்கும்
தருவர் குழி உனக்கு அடுத்தே
என்முகம் காணாமல் புதைத்த அன்று;
உன் அகம் எப்படி பதைத்தது என்று
கனவில் வந்து கதறினாயே; உன்னருகில்
அணைத்ததும் உதறினாயே..!!!
"இறந்தவரை கனவில் அணைத்தால்
இருப்பவர்க்காகாது ' என்பதைக் கூட
என்பால் நீ வைத்த
அன்பால் தானே இறந்தும் அப்படி
அக்கறைக் காட்டினாய்
"செத்தும் கொடுத்த" உன் அன்புக்கு
பித்தனாகி விட்ட என்னால்
என்ன வேண்டும் தாயே ....

கவியன்பன் கலாம்
அன்னைக்கு..

பத்து மாதம் என்னை சுமந்த என் அம்மா
ஏனோ என்னை பெற்ற ஒன்பதாம் மாதத்தில் ஒழிந்து கொண்டாய்
எப்படி அழுவது உனை நினைத்து நான்..
உன் புகைப்படம் பார்த்தேன் நானும்
அதில் என் இருப்பிடம் காணேனே என் அம்மா!!!

இருட்டில் இருந்த என்னை வெளிச்சத்தில் விட்டுவிட்டு
உச்சத்தில் இருந்து ஒய்யாரமாய் பார்க்கிறாய்
அம்மா உன்னைக் காண நான் கொடுத்து வைக்கவில்லை
அதனால் என்னையும் நீ காணவில்லை
பெருமிதம் அடைகிறேன் அம்மா நான் உன் பிள்ளையாய் ஆனதுக்கு!!!

ஏனம்மா என்னை விட்டு சென்றாய் தனியாக
உன் துணையாக நான் வந்திருப்பேனே அந்த அறியாத வயதினிலே
அன்று எத்தனை தடவை உன்னை அம்மா என்று அழைத்தேனோ தெரியாது
ஆனால் இன்று ஆயிரம் தடவை உச்சரிக்கிறேன் அம்மா அம்மா என்று
என் ஆசை தீர தீராது தாயே என் தாகம் உன் மீது கொண்ட பாசம்

அம்மா எனக்கு நீ வேண்டும் அம்மா மீண்டும் நீ வேண்டும் வருவாயா!
என் ஏக்கம் தீர்ப்பாயா தனிமையில் அழுகிறேன் உன்னை நினைத்து
அந்த இனிமையில் உறங்குகிறேன் உன் புடவைத்தலையணையினுள்
அம்மா என் உயிர் அம்மா இனிக்கிறது உன்னை உச்சரிக்க
அத்துடன் பனிக்கிறது என்ன கண் என்னை நச்சரிக்க.....


கல்முனையான்
அன்னைக்கு (தசை ரோபோ)

ஐயிரு பௌர்ணமிகள்
நான் விளைந்த பௌர்ணமி.
பைய நான் வளர
சோக சுயம் மறைத்த அமாவாசை.
செரிமானங்களை அமுதாய் மாற்றும்
அறிவியற்பொறி.
வையமிதில்
கற்கைகள் பலதொடர
கதிர் தெளித்த ஞாயிறு.
சேயென்னுயர்வின்
கூனிகளை மாய்க்கச் சீறிய
சுனாமி.
தன் நினைவகமதில்
தன்னலம் மட்டும்
பதிக்க மறந்த
தசைரோபோ.
காப்பும் பரிவும்
பாதமதில் சுவனமுஞ் சுமந்த
சுமைதாங்கி.
தன்னால் தொடமுடியாதுபோன
சிகரங்களுக்காய்
எனக்குள் ஏணிகள் வளர்த்த
விவசாயி.
தான் பறக்க நினைத்த
வானத்திற்காய்
எனக்குள் சிறகுகள் வரைந்த
தூரிகை.
இல்லம்-அலுவல்
இரண்டிலுமே யென்
சின்னச்சின்ன இடர்களையும்
இதமாய் களையும்
நேர்த்திமிக்க நிருவாகி.
சேவையே சுவாசமாய்
பரிவின் ஆசானாய்
பண்பின்உறைவிடமாய்
பாரினில் பவனி வரும்
அன்பின் அகராதி.

கிண்ணியா எஸ்.பாயிஸாஅலி
அன்னையே


சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்
அமைவாரே ஓய்வாக ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீரம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீ ரம்மா
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே

உண்ணுகின்ற உணவென்ன பார்துத்தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுதானே
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீரம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மாஅம்மா
மண்மூடிப் போனாலும் அந்தோஉன்னை-மனம்
மூட யியலாது வருந்தும் அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கேஎங்கே

புலவர் சா இராமாநுசம்
அரங்கராசபுரம் சாலை
சென்னை 24
தாயன்பைத் தேடி...

என் மூன்றரை வயதில்
என் கன்னத்தில் ஒன்று
என் வலது கன்னத்தில் ஒன்று
என் இடது கன்னத்தில் ஒன்று
என வாஞ்சையோடு
நீ கொடுத்த மூன்று முத்தங்கள்
நினைவுகளாய் இன்னுமும்
என் நியூரான்களில்
கண்ணீரோடு கலந்திருக்கிறது!

நான் சிரித்தபோது
நீ சிரித்தாய்!
நான் அழுதபோது
நீ அழுதாய்!
உன் உணர்வுகளை மறந்து
என் உணர்வுகளை மட்டுமே
உன் உலகமென நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!

என் செவிலித்தாயான
தமிழன்னையை
எனக்கு முதல்முதலில்
கற்றுக்கொடுத்த
தமிழாசான்
என் அன்னையே...
நீ தான்!

இலக்கணம் படித்ததில்லை! – உனக்குத்
தலைக்கனமும் பிடித்ததில்லை!! – தமிழ்
இலக்கியம் படித்ததில்லை! – உனக்கென
இலக்குகள் எதுவுமில்லை!!

நீ கற்றுக்கொடுத்த
தமிழ்மொழியால்
உன்மகனான நான் – தமிழ்
இலக்கியத்தில்
மூழ்கிக் கொண்டிருப்பதைப்
பார் அம்மா...!

பல ஆண்டுகளாய்
நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது
காலம்!

பிணந்தின்னும் கழுகுகள் போல்
பணம்பண்ணும எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!

பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தைத் துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!

மீசை முளைத்தபின்னும் – முகத்தில்
முடி முளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் –என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாய்ப்பாலைப்போன்ற
பரிசுத்தமான உன் அன்பைத்தேடும்
மூன்றரை வயதுப் பாலகன் நான்!!

முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
27.11.2011
தாயின் பாசம்
தாய் இருக்கும் போது
அறியாது
தாயை இழந்த பின்பு
எண்ணி வருந்தி
என்ன பயன்?
தாய்தான் நம் தெய்வம்
என்றால்
தரணியே நம் கரங்களில்!

-பெ.கந்தசாமி,சிரம்பான், மலேசியா
ஏலே தமிழா
இளம் ஏழைத்தமிழா
எழுந்து வாடா
ஏர் பிடிக்க நீதான்

உழவன் மட்டும்
இங்கு இல்லையென்றால்
உண்ண உணவு
உனக்கு உண்டா?

ஏழை உழவா
இன்று நீயும் உழ வா
தினம்தோறும் எழுந்து
உழைத்திட நீ வா

விவசாயி ஒருவன்
இங்கு இல்லையென்றால்
உண்ண உணவு
உலகிற்கு உண்டா?

அவனை நீயும்
இன்று மதிக்காவிட்டால்
பட்டிச் சாவு
உனக்கும் உண்டு!

ஏலே தமிழா
என் வீரத்தமிழா
உன் தடம் பதிக்க
எழுந்து எழுச்சி பெற்று
வெளியே வாடா
நீ எருது பிடிக்க!

ஓடி வாடா தினம் தேடி வாடா
சீறி வாடா இன்று பாய்ந்து வாடா
ஜல்லிக்கட்டு காளை போலே

முடியாததா?- உன்னால் முடியாததா?
முடிவானதா? இது முடிவானதா?
முற்றுப்புள்ளி இங்கு எதற்குமில்லை
அறிவுக்குதான் ஏது எல்லை?

விதியை நம்பி பயப்பிடாதே
மதி ஒன்று இருக்கு மறந்திடாதே
சும்மா நீயும் இருந்திடாதே
உழைக்க நீயும் மறுத்திடாதே! (ஏலே தமிழா

இவன்
தன்னம்பிக்கை தமிழன்
கவிஞர்.கிச்சா பாரதி


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்