Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
ஏமாற்றம்
ஏமாற்றம்

தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
தோன்ற வேண்டும் அதில்மாற்றம்
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக
ஆற்றல் வேண்டும் நம்பணியை-வெற்றி
அடைவோம் பரிசாம் நல்லணியை
மாற்ற மில்லா மனத்திண்மை-என்றும்
மனதில் கொண்டால் தருமுண்மை

முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
முயன்றால் தந்திடும் முன்னேற்றம
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானென பண்ணாதீர்
வயலாய் ஆகுதே பாலைநிலம்-முயற்சி
வழியால் வந்ததே அந்தவளம்
புயலாய் உழைக்க ஏமாற்றம்-நீங்கிப
போக வந்திடும் முன்னேற்றம்

எண்ணிச் செயலபடின் ஏமாற்றம்-வாரா
எதுவாய் இருப்பினும், முன்னேற்றம்
பண்ணுள் இசையிலை ஏமாற்றம்-அதைப்
பாடினால் வருவதும் ஏமாற்றம்
கண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்
கானல் நீரும ஏமாற்றம்
மண்ணில எவரே ஏமாற்றம் –அடையா
மனிதர் இருந்தால் பறைசாற்றும்

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24
ஏமாற்றம்...

எதிர்பார்ப்பு உரம் அதிகமானதால்
ஏமாற்றம் விளைச்சல் அமோகம்..
அதிலும்,
காதல் கழனியில்
கண்டுமுதல் அதிகம்தான்..
அங்கே,
கற்பனைச் சுவரோவியம்
ஏமாற்றமாம்
கல்லடியால் சிதைக்கப்படுகிறது..
விளைவு-
நாட்டிலெங்கும் நடைப்பிணங்கள்...!


-செண்பக ஜெகதீசன்...
ஏமாந்து நிற்கிறேன்!

கடந்துபோகும் பெண்களெல்லாம்
காதலி நீயோவென எண்ணி
மயங்குகிறேன்...
நடந்துபோகும் பாதையிலெல்லாம்
உன் காலடிதேடி
அலைகின்றேன்....
நாம் பார்த்த இடங்களிலெல்லாம்
நினைவுகளைக் கோர்த்துப்
பார்க்கிறேன்....
அதனால், நினைவு மலர்களும் உதிர்ந்து,
ஏமாந்து நிற்கிறேன்

-முத்துவிஜயன், கல்பாக்கம், சென்னை
(தமிழ்நாடு)

ஏமாற்றம்!

ஏர்கலப்பை தோள்சுமந்து
நம்பிக்கை உறுதியை
நெஞ்சில் நிறுத்தி,
வில்லாய் வளைந்து,
வியர்வை ஆறாய்ப் பெருக்கி,
சேறு குழப்பி, விதைகள் ஊன்றி,
பசுமை போற்றும்
விவசாயியென பெயரெடுத்து,
வாழையடி வாழையாய்,
விதைநெல்லும் மிஞ்சாத நிலையில்
வெறும் கையிருப்பு....
ஏமாற்றம்!

-கு. லட்சுமணன், புதுப்பட்டினம்
(தமிழ்நாடு)
ஏமாற்றமே!


மக்களின் கனவுகளை வளர்த்து
தேர்தலில்
மகத்தான வாக்குறுதிகளை அளித்து,
எவ்வாறேனும் பதவியிலமர்ந்து
ஏழை மக்களின் வயிற்றிலடித்து,
தேவைக்குமேல் சொத்து சேர்த்து,
மன்னராய் விளங்கவேண்டுமென்று
மனதில் ஆசைகளோடு,
இலவுகாக்கும் கிளிகளாய்
காத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு
என்ன சொல்லப்போகிறதோ....
எதிர்வரும் மே 13!

- கிரிஜா மணாளன், திருச்சி
(தமிழ்நாடு)
ஏமாற்றம்!

உன் சிறகுகளில் அமர்ந்திருக்கிறது
வானம்.
உன் விழிகளைத் திறந்து பார்!
ஒடுங்கிவிடும் வெளி!
உன் விரல்களின் சிட்டிகையொலி கேட்டு
பணிந்து நிற்கும் கோள்களெல்லாம்
உன் நிமிர்தலில் வந்து
அடி பணிந்து நிற்கும் பிரபஞ்சம்!
ஆம் தோழனே!
உன் அசைவில் ஐம்பூதங்களும்
ஆணைகேட்க
கைகட்டி நிற்கும்!
என்றெல்லாம் உசுப்பிவிட்டு,
தம்மை நிரப்பிக்கொள்வார்,
உன் உழைப்பை!
ஏமாந்தது போதும்,
எச்சரிக்கை!

- கா. அமீர்ஜான், திருநின்றவூர்
(தமிழ்நாடு)
ஏமாற்றம்!

கானலை நீரென்று எண்ணி,
காதலை வாழ்வென்று எண்ணி,
இலவசங்களை அதிசயமாய் எண்ணி,
பகல் கனவை முயற்சியாய் எண்ணி,
ஏமாற்றங்களையே காண்கிறது..
நம் மாற்றம்!

- வீ. உதயகுமார், வீரன்வயல்
(தமிழ்நாடு)
ஏமாற்றம்!

தேர்தல் முடிவின் தேதி
என்னவாக இருந்தாலும்,
வாக்களித்த வாக்காளர்களுக்கு
என்னவோ அது.....
‘ஏப்ரல் ஒன்று’தான்!

- சி. கலைவாணி, வேலூர்
(தமிழ்நாடு)
ஏமாற்றம்

எதிர்பார்ப்புகள் பொய்க்கும்போது
ஏற்படும் ஏமாற்றம்,
பலவீன மனதை எய்தி, தாக்கும்!
பயமுற்றோர் முன் இது,
தவிடுபொடியாகும்!
ஏமாற்றங்களை ஏமாற்றும்
ஒரே உத்தி,
எதுவரினும் அஞ்சோம்’ எனும்
மனவுறுதி!
ஊழல் நிர்வாகத்தால்
மக்கள் அடைவது ஏமாற்றம்!
உண்மைக்கு வாக்களித்தால்,
ஏற்படும் நல்மாற்றம்!

- தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி
(தமிழ்நாடு)
ஏமாற்றம்!

பிறந்தபோது ஆணாக இல்லையே என்று,
பள்ளியில் முதன்மையாக ஆசைப்பட்டு,
காதலில் வெற்றிபெற நினைத்து,
வேலைக்கு அரசை எதிர்பார்த்து,
மணவாழ்க்கையில் இனிமையாக வாழ
மக்கட்செல்வத்தில் மேன்மையுற சிந்தித்து,
கடவுளை வேண்டி........
இன்று பெற்ற பலன்....
ஏமாற்றம் மட்டுமே!

- எஸ். சுமதி, சேலம் (தமிழ்நாடு)
ஏமாற்றம்

உலர்ந்த உதடுகள்
தழர்ந்த தாடை
வளர்ந்த ரோமம்
இருப்பு கொள்ளாத இரு விழிகள்
சிரிப்பே இல்லாத புன்னகை
சிந்திக்க தெரியாத மூளை
தடுமாறும் சிறுநடை
ஆனாலும் -
வரிசையில் காத்திருக்கிறேன்
இன்னொரு முறை ஏமாறுவதற்கு.
வாக்குசாவடியில் நான்.

தாமரைசெல்வன், ஓசூர்
தமிழ்நாடு
ஏமாற்றம்

ஏற்றுக்கொள்ளா மனதிற்கு
விடைகொடுத்தப் பின்
எடுத்த
புதிய பரிணாமம்!


துர்கா
தமிழ்நாடு
ஏமாற்றம்
(நிலவும் அவளும்)

நான் பிறந்தேன் இந்தநாட்டினிலே சிறு
வீட்டினிலே அன்புக் கூட்டினிலே
நீயிருந்தாய் அந்த வானத்திலே வெகு
தூரத்திலே முகிலோரத்திலே
ஏன் நடந்தேன் அந்திநேரத்திலே நதி
யோரத்திலே மனப்பாரத்திலே
நீ நடந்தாய் ஒளி தான் பொழிந்தே அந்த
நீலத்திரை விரிமேகத்திலே

வானத்திலே நினைக் காண்கையிலே வரும்
மோகத்திலே நினைவானதிலே
கானத்திலே இழைராகமெனத் தினம்
காணும் இளையவள் போனதெங்கே?
மீனதிலே விழியானதென துள்ளி
மூடும் இமைகளைத் தானுடையாள்
தேனதிலே குளித்தேகும் மொழிகளைத்
தூவும் அவளினைக் காணவில்லை

சோலை மலர்களும் தூங்கியதே தென்றல்
ஏங்கியதே மணம் வாங்கியதே
மாலைவெயில் மஞ்சள் போயிடவே
மலர்மீதினிலே வண்டு தூங்கியதே
பாலையிலே உள்ள நீரெனவே இவள்
பார்வையிலே இருளானது ஏன்?
மேலையிலே ஒளி ஆதவனும் மேனி
மாழுவதாய் எண்ணம் போனதுமேன்?

காரிருளே சுற்றிக்காணலிலே அவள்
காதலிலேமனத் தேடலிலே
நீரிலினிலே உள்ளதானலையே எனும்
நேரழகில் மனமானதுவே
தேரினிலே வரும் தேவியென அவள்
தீயெனக் காதலைத் தூண்டியவள்
ஏரெனவே இரு மார்பெழுதும் இள
ஏந்திழையோ என்னை ஏய்த்ததுமேன்

தேனெனவே வெள்ளிபாலெனவே அலை
தோன்றியதே மின்னியாடியதே
மானெனவே துள்ளி ஓடியதே ஒரு
மங்கையென்றே நதி பொங்கிடவே
தண்ணிலவே உனை எண்ணியதோ ஒரு
அல்லிமலர்ந் துள்ளம் ஏங்கியதே
எண்ணமதி லுனைத் தான்நினைத்தே பெரும்
ஏக்கமதில் நீரிலாடியதே.

இன்பம்தருங்குளிர் வீசியதே
உடல் கூசியதே மெல்ல ஆடியதே
சின்னதென இசை தென்றலிலே வந்து
தேனெனவே செவி பாய்ந்ததுவே
அன்பை இழந்தவன் நெஞ்சினிலே வந்து
பொங்கியதே இன்பம் உன்னொளியால்
நன்றிசொல உனைத்தேடிநின்றேன் அந்தோ
நாடி வந்த முகில் மூடியதேன்?

கிரிகாசன்
ஏமாற்றம்

எதையோ தேடி எதையோ பெற்று
இதைத்தான் தேடினேன் என்று
பொய் சொல்லி
அவர்களின் பொறாமையை
கொஞ்சம் ரசித்து
என் தோல்வியின் சோகத்திலிருந்து
விடுபட முயற்சி செய்வேன்
என்னையும் ஏமாற்றி
அவர்களையும் ஏமாற்றி
வாழும் வாழ்க்கை தேவையா எனக்கு ?

நிர்வாணி
ஏமாற்றம்!

தேசமக்களின் பலவீனம் தெரிந்து
தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள்
வாரிவிடும் வாக்குறுதிகளும்,
வகைவகையான அறிக்கைகளும்
வரலாற்றில் வாழ்கின்றன......
ஏமாற்றியதன் சான்றிதழ்களாய்!

- கார்த்திகேயன், நாமக்கல்,
(தமிழ்நாடு)
‘ஏமாற்றம்’

தேக்கிவைத்த ஆசைகள்
கதைகளைக் கட்டமைத்து,
பேரன் பேத்திகளிடம்
சொல்லத்துடிக்கும்,
முதியோர் இல்ல தாத்தா பாட்டிகளுக்கு
எப்போதும் மிஞ்சுவது....
‘ஏமாற்றம்’ மட்டுமே!

-ச. கோபிநாத். சேலம், (தமிழ்நாடு)
ஏமாற்றம்


எதையும் எதிர்பார்க்கக் கற்றுத்தரும்
ஏமாற்றத்திடம்,
எல்லோருமே ஏமாந்துபோகிறார்கள்!
ஒரு மாற்றம் வேண்டி நிற்கையில்,
வந்து நிற்கும் ஏமாற்றம்.....
‘போ’வென்று சொல்லவும் முடியாது,
‘வா’வென்று அழைக்கவும் முடியாது!
வாழ்க்கையின் புத்தகத்தில்,
கிழிந்துபோகும் பக்கங்கள்தான்,
ஏமாற்றம் எப்போதும்!

- வி. சிவசங்கர், கள்ளக்குறிச்சி
(தமிழ்நாடு)
ஏமாற்றம்!


நீ இல்லையென்பதற்கான
அடையாளம்
பூட்டியிருக்கும் வீடு,
இருப்பதற்கானது
திறந்துகிடக்கும் ஜன்னல்,
இழந்துகொண்டிருக்கிறேன்
ஏமாற்றத்தோடு.
எனக்கான அடையாளங்களை!

- அ. பாலாஜி, எரிச்சூர்,
(தமிழ்நாடு)
ஏமாற்றம்

அம்மாக்கள் தினத்துக்கு
வாழ்த்த மறந்த பிள்ளை
ஏமாற்றம் அவளுக்கு

எதிக்கா
ஏமாற்றம்

அன்னையர் தினத்தில் கூட
தாயைப் பார்க்க மறந்த பிள்ளை
ஐயிரண்டு திங்கள் அங்கமெலாம்
நோ எடுக்க பெற்று வளர்த்த -பிள்ளையின்
வரவிற்காய் காத்திருக்கிறது
தாய் உள்ளம் காப்பகத்தின் வாசலில்.

பூரணி
ஏமாற்றம்!

ஏமாற்றம்
பெறவேண்டிய அனுபவம் - ஓர் நாள்,
பெறக்கூடும் அனுகூலம்.

ஏமாற்றம்,
நெருப்பாகி எரித்திடும் ஒளி பெறவே!
நெஞ்சவலிதன்னை கொடுத்திடும்
குணப்படவே!

ஏமாற்றச் சுவடுகளை
திரும்பிப்பார்க்கும்போதே - உன்னை
திருத்தியும் பார்க்கப்பழகு!
தோல்வியின் பாடம்
வெற்றிக்கு வழி சொல்லும்!

ஏற்றம் மட்டுமே
மாற்றமின்றி நிலைத்துவிட்டால்,
வாடுதலுக்கு வாய்ப்பில்லைதான்!

ஏற்றமும் மாற்றமும்
மாறி மாறி வரும்போதே
புதிதாய் தினமும் பூக்கக்கூடும்!

ஏமாற்றத்தை உணர்ந்தால்தான்
முன்னேற்றத்துடன் வாழக்கூடும்!

- இரா. சுமதி, பெரியகுளம்
(தமிழ்நாடு)
ஏமாற்றம்!

புலர்ந்த காலை பொழுது
சூரியனை மூடிய மேகங்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
இன்று இடியுடன் கூடிய
கன மழை பெய்யும் -என்று
வானொலியிலும், தொலைக்காட்சியிலும்
வானிலை அறிக்கை..!

குளிர் கூட்டி கருமேகங்கள் சூழ
வானம் இருண்டது- இது
இரவோ என எண்ணும் அளவுக்கு

சில நொடியில் வீசியது காற்று
விண்ணை அன்னார்ந்து பார்த்தால்
வெற்று வானம் சிரித்தது
வெளிச்சத்தில்

பாரதிமோகன்
ஏமாற்றம்

அன்பு பண்பு
அடக்கம் ஒழுக்கம்
நீதி நியாயம்
தர்மம் கர்மம்,
அனைத்தும் அளவாய்
கலந்து சமைத்து
பாலாக்கி சோறூட்டி
பாட்டாக்கி தாலாட்டி,
அருமை பெருமையாய்
போற்றி வளர்த்தாள்
கண்காணும் தெய்வமாய்
நடமாடும் தாய்.

கற்றதை செயலில்
காட்டும் தருணம்
போட்டாள் பெரிய
குழப்பக் கல்லணை -
கற்றவை அனைத்தும் உலகிற்கல்ல
உனக்கு வீட்டிற்கு
நமக்கு எனக்கு,
என்று.

பேரிடி விழுந்ததில்
பிழைத்து எழுவதற்குள்
‘சிந்திக்க விடக்கூடாதே’
மாதாவின் மெய்யறிவால்
மருமகளும் விழுந்தாள்.
இரண்டு காதுகளுக்கு
இருவேறு போதனைகள்
எல்லை பிரச்சினை
நிலமாக நான்.
இத்தனைக்கு மத்தியில்
இரண்டு குட்டி குழப்பங்கள்
வருகிறோம் வருகிறோம்..
சிரித்துக்கொண்டே வர.

சுமந்து பெற்று
வளர்த்து ஆளாக்கி
படிக்கவைத்து போதித்து,
புத்தி வந்ததோ இல்லையோ!
ம்…
வந்துதானே ஆகவேண்டும்.
திருமணம் முன் ஆனபின்
‘நம் குடும்பம்’ விளக்கத்தில்
ஒரு சிறிய மாற்றம்.
தாயாரின் குழப்பம்
தாரத்தால் தீர்ந்தது.
புரிந்தது
புத்தி தெளிந்தது.

புத்தி !
‘நம் குடும்பம்’
சுயநலமென சொல்லாமல்
தாய் உணர்த்திய பாடம்.
தன்நலமென தெளிவோடு
தாரம் உணர்த்திய பாடம்.
பொய் - உண்மை.
ஒரு தாய்
பொய் சொல்லலாமா?
வைரக் கேள்வி!
இறுதியில் வழமைபோல்
உண்மையே வென்றது.

தினமும் தாய்க்கு
‘நரகம்’ காட்சிப்படம்.
தொலைக் காட்சி தொடர்களையும் வென்று
திரையின்றி காட்டப்பட,
சில நல்ல மகன்கள்
முதியோர் இல்லங்களை
தம் அன்னையர்க்கு சொந்தமாக்கினர்.

அன்று
யேவாள் ஏமாற்றியதால்
ஆதாமையும்
பிதா துரத்தியிருக்க,
இன்று
திருப்பி துரத்தப்பட்டனர்
‘யேதேன் தோட்டம்’ முதியோர் இல்லத்திற்கு
தங்கள்
சொந்த சுதன்களால்.

அந்த தோட்டம் :
இலவசமாய் முழு சுதந்திரம்
ஒரே ஒரு நிபந்தனை.
இந்த இல்லம் :
எதற்கும் கட்டணம்
எதிலும் நிபந்தனை
நன்கொடையில் மட்டும்
முழு சுதந்திரம்.
ஒரு வகையில்
இன்றைய நம் வாழ்வுலகம் போல்.


ந.அன்புமொழி
சென்னை.
ஏமாற்றம்...

எதிர் பார்ப்பவன்
ஏமாறுகின்றான்.
கனவு காண்பவனும்
ஏமாறுகின்றான்.
தன்னை நம்பாதவன்
ஏமாறுகின்றான்.
உழைக்க மறந்தவனும்
ஏமாறுகின்றான்.
ஏ மானிடா!
மாற்றம் வேண்டுமெனில்
ஏமாளியாக இருந்திடாதே!

தயாநிதி தம்பையா..
ஏமாற்றம்

தேடல்கள் மற்றும்
எதிர்பார்ப்புகளின்
எல்லைகள் பறந்து
விரியும் போது
ஏமாற்றம் என்பது
மனதில் பிறக்கும்
அநியாய ஆசைகளுக்கும்
பேராசைக்கும் ஓர்
தடைக்கல்லாய் அமைகிறது !!!

பி.தமிழ்முகில்
14.12.2011
பருவநிலை (ஏ)மாற்றம்

நெல்லு வயலுல புல்லு மொளையுது ...
புல்லு மொளையுது . புல்லு மொளையுது...
நெல்லு மொளையலையே ஆத்தா ..
நெல்லு மொளையலையே

கல்லை காட்டுல முள்ளு மொளைக்குது ...
முள்ளு மொளைக்குது முள்ளு மொளைக்குது
கல்லை கிடைக்கலையே ஆத்தா ...
கல்லை கிடைக்கலையே ..

பஞ்சு காட்டுல நெஞ்சு வலிக்குது
நெஞ்சு வலிக்குது ..நெஞ்சு வலிக்குது ...
பஞ்சு கிடைக்கலியே ஆத்தா
பஞ்சு கிடைக்கலையே


ஓபிலீ, தேனீ
திக் திக் இதயத்தோடு
திங்கள்தோறும்
தொட்டு உணர்ந்து
வந்துவிட்டதே என்று
கதறி அழும் எனக்கு
என். இதயத்தோடு
உன் குட்டி. இதயமும்
துடிக்க.....
உதிரத்தோடு உதிரமாய்
கலந்து .....
வெள்ளி. கொலுசொலியாய்
என். மடிமேல்
எட்டி உதையும்
வரம் தான் என்
செல்லமே.....
மலடி அவச்சொல்
போக்குவாயோ....
என் குலவிளக்கே.....

-சுல்தானா,இந்தியா
அன்று முதல்
இன்று வரை
ஒவ்வொரு தேர்தலிலும்
மாற்றம் வரும் என்று
நம்பி வாக்களிக்கும்
மக்களுக்கு
மிஞ்சுவது என்னமோ
ஏமாற்றமே!!!

-சேகர்,தமிழ்நாடு


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்