Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
மே - 18
நெருப்புமிழ்ந்த மே 18...

இருப்பிழந்த இனத்தின் மேல்
பேரினவாதம்
நெருப்புமிழ்ந்த மே 18...
நிஜங்களைத் தொலைத்துவிட்டு
வலிகளை வாங்கிவந்த மே 18
முடக்கப்பட்டுவிட்ட
எம்மினத்தின்
முகவரிகளைத் தான் தேடியலைகின்றோம்..
ஒவ்வொருவரும்....
உறவுகளை இழந்து
உரிமைகளைத் தொலைத்து
ஊமைகளாக வாழ்கின்ற
எங்களைத் தழுவிச் செல்லும்
காற்றே.........
சற்று நின்று
இரத்தமும் சதையும் மக்கிப் போய்.
மண்ணோடு மண்ணான
எங்கள் உறவுகளின் தொகையை ஒரு முறை
உலகுக்குச் சொல்வாயா???

-ஸஹாரா
மேதினி போற்றும் மேதினமே-உன்
மேன்மைக்கே களங்கம் இத்தினமே
தேதியே ஆமது பதினெட்டே-ஈழர்
தேம்பி அலற திசையெட்டே
வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
வாய்கால் முற்றும சேறாக
நீதியில் முறையில் கொன்றானே-அந்த
நினைவு நாளே துக்கதினம்

உலகில் உள்ள தமிழரெங்கும்-அன்று
ஒன்றாய் கூடி அங்கங்கும்
அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
அமைதியாய் நெஞ்சில் துயரேந்தி
வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
வருந்த மக்கள் வழியெங்கும்
திலகம் வீரத் திலகமவர்-உயிர்
துறந்த தியாக மறவர்

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24
மே 18....!!!

எங்கள் தேசம் எரிந்து போனது..
எங்கள் உறவுகள் கருகிப்போனார்கள்..
எங்கள் கனவுகள் கலைந்து போயின...
எங்கும் சாவீட்டு சத்தமே காதில் விழுந்தது.

எத்தனை நாட்கள் வலி சுமந்தோம்!
எத்தனை நாட்கள் உயிர் கருகினோம்!
எத்தனை நாட்கள் பசியில் துடித்தோம்!
எத்தனை நாட்கள் கதறி அழுதோம்!

துண்டுதுண்டாய் சிதறிப்போனது சின்னப்பிஞ்சு
கண்முன்னே பிள்ளையின் உயிர் பிரிய கட்டியணைக்க கையில்லா அம்மா
குண்டு துளைத்து குடல் கிழிந்து தொங்கி குற்றுயிராய் குழறி அழுதாலும்
கண்கள் பிதுங்கி விழுந்து மரண ஓலம் எழுப்பினாலும்
நின்று துயர் தீர்க்க நேரம் இன்றி உயிரை மட்டும் கையில் கொண்டு ஓடினோமே!!!

முலையில் பால் வற்றி குருதி வடியும்
அதையும் பசியால் பிஞ்சு குடிக்க வலியால் துடித்த தாய்!!
கஞ்சிக்கும் வெளியில் கைநீட்ட வழியின்றி பதுங்கு குழியில் சுருண்டுகிடந்த உறவுகள்!!
பாதையோரம் உயிருக்குகாய் ஓலமிடும் உறவு
நின்று அவனை தூக்க முன் வந்து விழும் குண்டு
கண்முன்னே அவன் காலும் தலையும் வேறுவேறாய் !!!!

குண்டு மழைச் சத்தம் காதடைக்க குருதி சகதியில் உயிரைக்கையில் பிடித்து ஓடினோம்!
கொத்துக்கொத்தாய் உறவுகள் ரத்த வெள்ளத்தில் மிதந்து வர விலத்திவிட்டு ஓடினோம்!
எங்கள் மண்ணில் எங்கேனும் ஒருஇடத்தில் பாதுகாப்பு தேடி ஓடினோம்!
ஓடிக்கொண்டிருந்த போது ஒவ்வொன்றாய் முறிந்து விழுந்தன கால்கள்...
பசியால் வறண்ட கண்கள் பார்வை இழந்து போயின...
குண்டுச்சன்னங்கள் உயிர் துளைத்து பிணமாய் மண்ணில் சுருண்டு விழுந்தோம்.

பிணக்குவியலுக்குள்ளும் குருதிச் சகதியிலும் நின்று கதறி அழுதோம்!
கதறி அழுது அழுது கண்ணில் நீர் வற்றி குரல் வறண்டு குற்றுயிரானோம்!
எங்களுக்காகவும் குரல் கொடுங்களேன் என்று கெஞ்சிக் கதறினோம்!
எவனும் வரவேயில்லை! எங்களின் அவலக்குரலும் யாருக்கும் கேக்கவே இல்லை!
எங்களுக்காகவேனும் பேசுங்களேன் என்று கதறி அழுதோமே!
உயிர் வலி தாழாது ஒப்பாரி வைத்து குழறினோமே!
நடை பிணங்களாய் நாதியற்று நின்று நா குழற குரல் கொடுத்தோமே!
அப்போது எங்கள் அவலக்குரல் யாருக்கும் கேக்கவேயில்லையே...!
அப்போது எங்கள் உயிர்வலி யாருக்கும் புரியவேயில்லையே...!


நாங்கள் செய்த குற்றம் என்ன? பிழைதான் என்ன?
சொந்த மண்ணில் நிமிர்ந்து நின்றது தவறா?
விடுதலை பற்றி பேசியது தவறா?
அதற்காய் உயிர்விலை கொடுத்து வேள்வி செய்தது தவறா?
உரிமைகளை உணர்வோடு கேட்டது தவறா?
எங்கள் முற்றத்தில் தானே பூமரம் நட்டு வைத்தோம்
எங்களின் வீட்டு வாசலில் தானே கோலம் போட்டொம்
எங்களின் மண்ணில் தானே கிட்டிப்புள்ளு விளையாடினோம்
எங்களின் மண்ணில் தானே வயல் விதைத்தோம்.

எட்டி வைக்கும் ஒவ்வொரு அடியின் கீழும் உறவுகளின் உயிர்த்தடம்
காற்றோடு கலந்து வரும் கந்தக நெடியில் கருவேங்கைகளின் கனவுகள்
இடித்து தூளாக்கிய கற்குவியல்களாய் கல்லறைக்கண்மணிகளின் தியாகங்கள்
தமிழனாய் பிறந்தது குற்றமா?
தன்மானத்தோடு வாழ நினைத்தது குற்றமா?
தலை நிமிர்ந்து நின்றது குற்றமா?இல்லை
தமிழீழம் கேட்டதுதான் குற்றமா?
எது குற்றம்?

அப்புவும் ஆச்சியும் பூட்டனும் பூட்டியும் பொத்திப்பொத்தி வளர்த்த தேசம்
என் பேரன் ஏர் பூட்டி உழவு செய்து பச்சை வயல் கொண்ட தேசம்
நெத்தலியும் சூடையும் கரவலையும் ஏலேலோ பாட்டும் பாடிய நெய்தல் தேசம்

ஒடியற்கூழும் தனிப்பனைக்கள்ளும்
புட்டும் நண்டுக்கறியும்
வீச்சுவலை மீன்பொரியலும்
கரைவலை வாடிச்சொதியும்
பாலைப்பழமும் பனங்கிழங்கும்
நாவற்பழமும் பனம் பழமும்
எங்கள் தேசமும் எம் இனமும் என்றுதானே இருந்தோம்
வந்தோரையும் வாழவைக்கும் பூமியாகத்தானே வாழ்ந்தோம்

துயரம் என்றால் தோளும்
ஆபத்து என்றால் உயிரையும் கொடுக்கும் இனம் தானே தமிழினம்
எவனுக்கும் கேடு செய்யும் இனமல்லவே நாங்கள்
பகை கொண்டு வந்தவனை மட்டும் தானே படை எடுத்து விரட்டினோம்
எங்களின் தேசத்தை விட்டு எவனின் மண்ணிலும் ஒருபிடி கூட எடுக்கவில்லையே!

என்ன பிழை செய்தோம் ?எங்களை ஏன் அழித்தீர்கள்?

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆணிவேர்விட்டு வாழ்ந்த பூமி
ஆலமரங்களாய் விழுது விட்ட அன்னை பூமி
பனைமரங்களாய் நிமிர்ந்து நின்ற தன்மானம்
முப்படை கொண்ட கரிகாலன் வேங்கைகள்
எவனையும் கையேந்தாத பொருண்மிய வளர்ச்சி
சிங்கபூரே மூக்கில் விரலை வைக்கும் நீதியும் நிர்வாகமும்
பிச்சைகாரனே இல்லாத தேசம்
காந்தி கண்ட கனவு தேசம்
நேதாஜியும் சுபாஸ் சந்திரபோசும் ஆசைப்பட்ட சுதந்திர தேசம்
பாரதி கண்ட புதுமைப்பெண்கள்
இப்படித்தானே தமிழீழம் இருந்தது

இதுவா உங்கள் கண்ணை குத்தியது?
என்ன பிழை செய்தோம்? ஏன் எங்களை அழித்தீர்கள்?

சிங்களவரோடு தமிழன் சேர்ந்துதான் வாழ்ந்தான்
அப்புகாமி வீட்டுக்கு கறுத்தகொழும்பானும்
கந்தப்பு வீட்டுக்கு ஈரப்பிலாக்காயும் கைமாறிய காலம் ஒரு காலம்
"பிற்றக்கொட்டுவவில்" இருந்து "யாப்பா பட்டுண"வுக்கு யாழ்தேவி போனது ஒரு காலம்
பொடி மெனிக்காவை பொன்னம்பலத்தார் கலியாணம் முடித்தது ஒரு காலம்
மடுத்திருவிழாவிலும் மன்னாரிலும் சில்வாவும் சின்னப்புவும் ஒன்றாய் உறங்கியது ஒரு காலம்

எப்போது தமிழனின் தலையில் இடி விழுந்தது?
எப்போது தமிழனின் அடிவயிற்றில் அடி விழுந்தது?

தமிழச்சியின் நெஞ்சு திறந்து சிறிலங்கா என்று சிங்களவன் தான் சூடு வைத்தான்!
கொதிக்கும் தாருக்குள் உயிரோடு தமிழனை போட்டு சிங்களவன் தான் எரித்தான்!
கட்டிய துணியோடு தமிழனை கப்பல் ஏத்தி சிங்களவன் தான் கலைத்தான்!
தமிழனின் உடமைகளையும் உரிமைகளையும் சிங்களவன் தான் தீயிட்டு கொழுத்தினான்!
தமிழச்சியின் கற்பை காமவெறிகொண்டு சிங்களவன் தான் சூறையாடியான்!
அவளை உயிரோடு துண்டுதுண்டாய் வெட்டி சிங்களவன் தான் சுடுகாட்டில் போட்டான்!
சின்னப்பிஞ்சு என்று பார்க்காமல் அதையும் சிதைத்து சிங்களவன் தான் சினம் காட்டினான்!
பள்ளிக்கூடம் செல்லும் சின்னப்பிள்ளையையும் காம பசிக்கு சிங்களவன் தான் கொன்று தின்றான்!
குஞ்சும் குருமனுமாய் கொத்துக்கொத்தாய் சிங்களவன் தான் கொன்றோழித்தான்!
ஆசுப்பத்திரிக்கும் ஆலயங்களுக்கும் குண்டு போட்டு சிங்களவன் தான் கொலைவெறியாடினான்!
இனவெறிப்போரை ஈழமண்ணின் மேல் சிங்களவன் தான் தொடுத்தான்!

எல்லாவற்றையும் எத்தனை நாட்களாய் தமிழனால் பொறுத்துக்கொள்ள முடியும்?

ஏன் என்று கேட்டோம்? எட்டி மிதித்தார்கள்?
மீண்டும் எதற்கு என்று உரத்து கேட்டோம்! ஏறி மிதித்தார்கள்!

அதனால்தான் வேலுபிள்ளையின் மகன் வேலும் வாளும் தூக்கினான்
தூக்கிய வேலும் வாளும் எங்களின் உயிரைக்காப்பதற்கே
சிங்களவனின் உயிரை குடிப்பதற்கு அல்ல!!
எங்களின் வீட்டு வேலி பிரித்து முற்றத்தில் வந்தவனுக்குத்தானே அடித்தோம்
எங்கள் வயல் வெளி ஏறி மிதித்தவனைத்தானே அடித்தோம்
எங்கள் வானம் ஏறி வந்து குண்டெறிந்தவனைத்தானே குறி வைத்து அடித்தோம்
எங்கள் கடல் அன்னை மடியில் கைவைத்தவனைத்தானே வெடி வைத்து முடித்தோம்.

என்ன பிழை செய்தோம் நாங்கள்?எங்களை ஏன் அழித்தீர்கள்?

முள்ளிவாய்க்கால் வரை தமிழனை விரட்டி அடித்து முடித்து விட்ட காரணம் என்ன?
சிங்களவனை கேட்கவில்லை!!
நீதியை காக்கும் சர்வதேச சமூகமே உங்களைத்தான் .......பதில் சொல்?
என்ன பிழை செய்தோம்?ஏன் அழித்தீர்கள்?

முள்ளிவாய்க்காலில் நின்று வானம் அதிர குழறினோமே
ஐ.நாவின் காதுகளுக்கு விழவேயில்லையா?
அப்போது பான் கி மூனுக்கு என்ன காதில் கோளாறா?
ஆண்டுகள் ஆனாலும் நீதி சாகாது என்று கூறலாம்
அநியாயமாய் கொன்றொழித்த உறவுகள் திரும்பிவருவாரோ?
அறிக்கையும் ஆய்வுகளும் கண்டனங்களும் கண்துடைப்புகள் தானோ?
வெறும் வாய்பேச்சும் வீண் கதைகளும் பொய் வேசம் தானோ?

கொன்றொழித்து எரியூட்டி சாம்பலையும் இருந்த தடத்தையும் இல்லாதொழித்த பின்
எதை வைத்து குற்றவாளி என்பீர்?
போரே நடக்கவில்லை என்பான்!
குண்டே போடவில்லை என்பான்!
யாரையும் கொல்லவில்லை என்பான்!
சிறையில் யாரும் இல்லை என்பான்!
என்னை யாரும் புடுங்கேலாது என்பான்!
மகிந்தனை மயிர் நரைத்து கூன் விழுந்த பின்போ கூண்டில் ஏற்றுவீர்?

சிங்களவன் கொன்றது ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம் உறவுகளின் உயிர்கள்
அவன் இப்போதும் கொல்ல நினைப்பது
பலகோடி தமிழனின் தமிழீழ தாகத்தை......

சொந்த புத்தி இல்லாத வெறிநாய்கள் சிங்களவனின் குள்ளநரி கூட்டத்தோடு
சொந்த மன்ணில் வாழ்ந்த தமிழனை அழித்துவிட்டார்கள்
சோனியா என்ற வெறிநாய் ஆயிரமாயிரம் தமிழச்சிகளின் தாலி அறுத்து -அவள்
கட்டிய வெள்ளைச்சேலையை தந்துவிட்டாள்.
பாழ்படுவாள் முந்தானையில் இப்போதும் ஒழிந்திருக்கும் சூடு சுரணையில்லாத கோடாரிக்காம்புகள்...!!

என்ன பிழை செய்தோம் நாங்கள்?ஏன் எங்களை அழித்தீர்கள்??

முப்பது ஆண்டுகளாய் வலி சுமக்கும் தேசம்
விடுதலையே மூச்சாக வாழும் மக்கள்
காற்றோடு கலந்தாலும் கடலோடு கரைந்தாலும்
மண்ணோடு புதைந்தாலும் அடங்காது எங்கள் தாகம்
விழுதுகளை வெட்டி எறிந்தாலும் வேரோடு புடுங்கி எறிந்தாலும்
மீண்டும் துளிர் விடும் விடுதலை வேட்கை
காலத்தால் அழியாத வலி வரினும் வலிமை கொண்டெழும் தன்மான உணர்வு
இழப்புகளை கண்டு இடிந்து போகாத இதயங்கள்
எதுவரினும் வீழ்ந்து கிடக்காத தமிழினம்


உலகமே உன் நாட்குறிப்பேட்டில் குறித்து வை
முள்ளிவாய்கால் என்பது குருதியில் தீக்குளித்த தேசத்தின் அடையாளம்
அது முடிவல்ல தமிழனின் தன்மானப்போரின் நான்காம் அத்தியாயத்தின் ஆரம்பம்

முள்ளிவாய்க்காலில் கண்ணீரோடு விதைத்தோம்....!!!!
தமிழீழத்தில் கெளரவத்தோடு அறுவடை செய்வோம்....!!!

தமிழ்ப்பொடியன்
18.05.2011
மே 18...

எலும்புக்கூடுகள்
எழுந்து பேசினால்,
எத்தனையோ கதை தெரியும்..
வித்தாக மண்ணுக்குள்
விழுந்து கிடப்பவையெல்லாம்
முளைவிட்டு ஒருநாள்
உரிமைக்குரலாய்
உயிர்த்தெழும்போது
மீண்டும் வராது
மே பதினெட்டின் அவலங்கள்...!

-செண்பக ஜெகதீசன்...
காத்திருத்தல்

ஊர்வலம் போகிறோம்
மெழுகுதிரி கொழுத்துகிறோம்
நினைவேந்தல் செய்கிறோம்
திதி கொடுக்கிறோம்
2013 மே 18
மூன்றாவது நினைவு நாளுக்காய் காத்திருக்கிறோம்


இளைய அப்துல்லாஹ்,லண்டன்
மே 18

வெட்டுதோ மின்னல் வீழ்ந்ததோ வானம்
வெடிவெடி தெங்கணும் அதிர
முட்டுதே புகையும் மூளுதே தீயும்
மேகமே வீழ்ந்திடத் தோன்றி
தட்டியே சிதறி தடதட வென்றே
தாவுதே துண்டுகள் அய்யோ
சுட்டுமே தீயில் துடித்ததே உடல்கள்
சூழ்பெருந்தீ எரித்திடவே!

கொட்டிட வானில் குண்டுகள் நூறாய்
குடிசைகள் வீடுகள் கூரை
பட்டுமே சிதறிப் பறந்தன உள்ளே
படுத்தவர் எழுந்துமே பதறிச்
சட்டென ஓடித் தப்புவோம் என்று
சற்றொரு கணமதில் எண்ண
விட்டதோ குண்டு விஷமெனப் பரவி
விழுத்தியே உடல்கருக் கியதே!

வந்ததும் புரியா வாழ்வதும் அறியா
வசந்தங்கள் தேடிய பூக்கள்
கந்தகம் தூவி கருகியே முறுகி
கால்கை துடித்திடச் செத்தார்
எந்தநல் லிதயம் இறைவனைத் தொழுதும்
எரிந்திடும் தீவிட்ட தில்லை
செந்தமிழ் பேசிச் சிரித்தவர் மேனி
சிங்களம் கொன்றிடத் தீய்ந்தார்

பச்சைம ரங்கள் படுத்திடும் வீடு
பதுங்கிய குழிகளே சிதையாய்
இச்சைகொள் மாந்தர் இருத்தியும் நிறுத்தி
எரிந்திடக் கொள்ளியும் வைத்து
துச்சமாய் எண்ணித் துடித்துடல் அலற
தீயெனும் குண்டுகள் போட்டு
மிச்சமே யின்றி முழுஊ ரழித்து
மூடிஓர் சுடுகாடு செய்தார்

வந்திடும் உலகம் வாழ்வினைக் காக்க
என்றவர் நம்பிய போதும்
சுந்தர தேசம் சுழல்புவி யாவும்
செத்துநீ போஎன விட்டார்
மந்தைகள் நாமோ மனிதமே இல்லை
மரம்செடி கொடிகளை விடவும்
எந்தவோர் வகையில் இழிந்தவர் சொல்லு
இதையும்போய் யாரிடம் கேட்போம்

கிரிகாசன்
விரோதி ஆண்டின் மே,18

விரோதி ஆண்டின் மே18,ஏ...
ஜனனாயக நீதியாழரென்று
இனப் படுகொலை செய்திடும்
கபடதாரிகளின் நண்பன் நீ

கொலைஞரோடு கொலைஞனாய்
தடம் பதித்து நீ மெல்ல நடந்திட
வடம் பிடித்து நாம் ஆண்ட மண்ணில்
வரப்பிழந்தோம்
வகை இழந்தோம்
மலையென குவிந்த எமதினத்தின்
பிணக் குவியல் கண்டு
தாளாது
ஏந்திய ஆயுதங்களை மெளனித்தோம்

உலகத்தோர் நிலம் வேண்டி
கன்னம் இட்டோமா
வஞ்சனை வலை விரித்து
இனப் படு கொலைகள் புரிந்தோமா

நெறி முறை யுத்தம் பகன்று
வெறிகொண்ட சிங்கத்தின்
கதவடைத்து
வசந்தம் அழைத்து
வாழ்ந்திருந்தோமே

ஏ...விரோதி ஆண்டின் மே18,ஏ...
ஐக்கிய இலங்கை என்ற உக்கிய
வார்த்தையை சொல்லிச் சொல்லி
சுற்றம் எரித்த கொற்றவரெனும்
கொடுமையாளரினால்
உன் குடையாணி சாய்ந்ததை
நீயும் அறிவாய்
சத்தம் இன்றி சந்தடி இன்றி
எம் தாயக மண்ணில்
ஐந்தாம் உலகப் போரை அரங்கேற்றிய
அரக்கன் எனும் விரோதி ஆண்டே

ஜனனாயக நீதி யாளரெனும்
கொடியோர் வீசிய பொஸ்பரசால்
கொடும் விசம் குடித்த
புது மாத்தளன் உப்பேரிக் காத்து

பொட்டல் காட்டின் நடுவே
மண்ணில் புதைக்கப் பட்ட
மனிதப் புதை குழிகளுக்குள்
மாண்டோரின் உஸ்ணம் தொட்டு
தொலைந்து போன தார்மீகத்தை
தேடிக்கொண்டிருக்கிறது

காற்றாக மழையாக ஒளியாக
உலகை ஆழும் இயற்கை போல்
எம்மில் பதிந்த
பயங்கரவாதத் தடைக் கல் அகற்றி
தன் மெளனம் கலைக்கும்
அந்த உப்பேரிக் காத்து

பெரும் பான்மை சிங்களத்தின்
செருக் கறுக்கும்
தமிழீழ அரசேற்றி முடி சூடும்
விரோதி ஆண்டின் மே 18,ஏ...
அன்றுதான்
நீ எங்கள் ஆத்ம நண்பன்.

கவியாக்கம் - வல்வை சுஜேன்.
மே - 18

தமிழனின் தலைவிதி
மாற்றி எழுதப்பட்டு
அனாதையான இனமாகிப் போன
நாள்.......

அளம்பில், இராமசாமி ரமேஷ்.
மே - 18

ஆறத வலிகளை
அள்ளிச் சுமந்திட்ட
கொடும் நாள்..
அனைத்து உலகமும்
கூட்டாகி கொள்ளி
போட்ட கொடும் நாள்..
தமிழன் கண்ணீருக்கு
விலை சொல்ல
மறந்த நாள்..
முள்ளி வாய்க்கால்
முடிவாகிப் போகாதென்று
அறியப்பட்ட நாள்..

தயாநிதி தம்பையா
மே 17
-----------------

விடுதலை வேட்கை தீ

எரிந்த சாம்பலில்
எஞ்சியவர்கள் நீங்கள்

குற்றுயிரும் கொலையுயிருமாய்
குவிக்கப்பட்ட குவியலிலிருந்து
கொஞ்சமாய்
உயிர்த்தவர்கள் நீங்கள்

நந்திக் கடலேரியில்
நாதியற்றவர்களாய்
மிதந்தவர்களின் மிச்சம்
நீங்கள்

முள்ளிவாய்க்காலில்
உங்களின் குருதியாறு பாய
கொட்டும் குண்டுகளோடு
தீக்குளித்தேறியவர்கள்
நீங்கள்

உற்றாரை
பற்றிய கைகளோடு
பறிகொடுத்தவர்கள் நீங்கள்

நின்ற இடத்தில்
கால்களை விட்டுவிட்டு
நினைக்கா ஓரிடத்தில்
இழுத்துப் போடப்பட்டவர்கள் நீங்கள்

ஆலாயிருந்து
அலைத் துரும்பாய்
அடித்துப் போடப்பட்டவர்கள் நீங்கள்

நாற்பதாயிரம்
இறந்த உடல்களுக்கு மேல்
எழுந்து நிற்கிறீர்கள்
நீங்கள்

உடற்குறையும் மனக்குறையும்
உங்களுக்கு மட்டுமல்ல
தமிழை
உச்சரிக்கும் ஒவ்வொருக்கும்

பெற்றோர்களை
பெற்ற பிள்ளைகளை
அண்ணன் அக்கா
அன்புறவுகளை இழந்து

இழந்தவர்களுக்காக இன்றைக்கு
ஏற்றுகிறீர்கள் தீபங்கள்

இனத்தையே கொளுத்தியவன் முன்
இன்னும்
இருக்கிறோமென்று

தன்
இருப்பை
நெருப்பாய்

ஏற்றுகிறீர்கள் தீபங்கள்

உங்கள்
கண்ணீரில் எரிகின்றன
கண்களின் தீபங்கள்

அழுது அணைந்திடாமல்
அழுதும் எரிகின்றன
தீபந்தங்களாய்

உங்கள்
விழிகளில்
விடுதலை வேட்கை தீ

-பட்டுக்கோட்டை தமிழ்மதி
மே - 18

காலத்தின் ஓட்டத்தில்
மே 18 பிறந்தது - எதிரியின்
களத்தின் ஓட்டத்தில்
தமிழினம் மடிந்தது

மண் தாகம் தீர்க்க - எம்
உறவுகளின் உதிரம் கிடைத்தது
உறிஞ்சிக்குடிக்க....
மண் பசிபோக்க - எம்
உறவுகளின் உயிர் கிடைத்தது
கொறித்து தின்ன....

அன்றைய நாளே....
எம் இனத்தின் கரிய நாள்
பல உயிர்களை
காவு கொண்ட கொடிய நாள்
பல உணர்வுகளை
சாவு கொண்ட நாள்

அன்றைய நொடிகளில்....
கறுப்பு வானம் சிந்திய
எறிகணை மழையில்
நனையும் உடல்கள்
பிணங்களாயின

அதிகாலைப்பொழுதில்
அச்சம் திண்ற
பறவைகளினதும் விலங்குகளினதும்
தொண்டைக்குழி விக்கிக்கொள்ள
மௌனமொழி நீண்டு
ஊமையாகின

பகலவன் கண்விழித்தபோதும்
பகலிரவு தெரியாத
பக்கமும் நீளமானது

பூக்கள் உதிர்ந்தன
பிஞ்சுகள் விழுந்தன
வேர்கள் அறுந்தன

முளைத்த விதைகள்
மண்ணுக்குள் புதைக்கப்பட்டன
முளைவிடும் விதைகள்
உடலுக்குள் புதைக்கப்பட்டன

மரணப்பிடியிலிருந்த
ஈழக்கதிர்கள் ஒப்பாரியில்
ஓலமிட்டன
இரத்த ஆற்றில் மிதக்கும்
மேனி கண்டு
எத்தனை உயிர்கள்
இதயத்துடிப்பின்
இயக்கம் நிறுத்தின
எத்தனை பால்முகம்
மரித்த தாயின்
மார்பை தேடியது
பசி போக்க...
கால்கள் நகர்ந்தால்
தடத்தின் வரைபுகள்
பிணமேடையில் பதிந்தன

இதற்கு
அகிலத்தின் பார்வை
அந்நியனுக்கு ஆயுதமானது
எட்டுத்திக்கிலும் தொடராகி
எமையடக்க - பல
நாடுகளின் இரும்புக்கரங்கள்
நசுக்க முடிவானது

இப்படி
எழுத்துக்கு போதாத
எண்ணில் அடங்காத
எத்தனை அவலங்கள்
எம்மண்ணில் அவதரித்தன

இன்று....
மூன்றாண்டு சென்றுவிட - எம்
முத்தமிழும் வேகுறது
கடந்த பக்கத்தை
கணப்பொழுது மீட்டிப்பார்த்தால்
கண்ணீரின் நகர்வுகள் தான்
கண்மடலை சந்திக்கின்றன

எப்படி மறக்க முடியும் நினைவுகளை
எப்படி மறுக்க முடியும் உண்மைகளை
இவை எப்போதும் எம் உயிரலையில்
வீசிக்கொண்டே தான் இருக்கும்

எனவே
உன்னத தமிழே!
உலகத்தமிழனே!
வீச்சு உன் விழியில்
வீரம் உன் நெஞ்சில்
விரைகின்ற பொழுதில்
உலகத்தின் சிகரத்தை
எளிதாய் தொடுவோம்
ஈழமேனியில் கொடிவிட
புதிதாய் முளைவிடுவோம்

நீ ஒன்றுபடு
மறத்தமிழனாய்.
அப்போது தான் - எம்
தாயக கனவுகளும் மகிழும்
கல்லறை மேனிகளும் பாடும்
மடிந்த உறவுகளும் வாழ்த்தும்.

-உடுவையூர் த.தர்ஷன்
போருக்கு பின் போய் பார்த்தார்கள்
மீதியிருப்போர்களுக்கு
நீதி தருவதாய் நின்றார்கள்.

எஞ்சியவர்களிடம்
“உங்களில்
ஒருவர் மட்டும் வந்து
பேசுங்கள் "என்றார்கள்.

“எங்களிலும் வரலாமா?” என்றன
எலும்புக் கூடுகள்.

செத்தும் சாகாத
புதைந்தும் புதையாத எலும்புகள்
அவசரமாய் கூடின

ஒருகை ஒருவருடையது
மறுகால் மற்றவருடையது
ஒருவரின் கழுத்தில்
இன்னொருவரின் மண்டையோடு
விரல்களில் ஒட்டிய
எரிந்த சாம்பலில் முளைத்தன
நகங்கள்
பற்கள் ஒவ்வொன்றும்
ஒவ்வொருவருடையதாய் இருக்க

சொற்கள் ஒன்றாய்
எழுந்த எலும்பு கூடு
கேட்டது

"எங்களுக்கு வேண்டும்
எங்கள் தாய்மண்
எங்கள் தாய்மொழி
எங்கள் தமிழீழம் "

பட்டுக்கோட்டை தமிழ்மதி,சிங்கப்பூர்
மே – வலிசுமந்த மாதம்
-------------------------------------

மீண்டும் மீண்டும் வலிகளாலும், துயரங்களாலும், வடுக்களாலும் நிரப்பப்பட்ட நம் இதயம் – கனத்து வெடித்தாலும் உள்ளேதான் அழவேண்டும் – நாம் ஜடமாக்கப்பட்ட மனிதர் – மரங்களைப்போல் தலை அசைத்த வண்ணம் தோற்றுப்போனவர்களாக!
ஆனாலும் மரத்தின் வேர்கள் பெரும் அஸ்திவாரங்களை அசைத்த நிகழ்வுகள் பல உண்டு…
மனத்தில் புதைக்கப்பட்ட வலிகள் மீண்டும் மீண்டும் ஆழமாய் – நம் அரசியலின் சரி பிழைகளைப் சுய விமர்சனத்துடன் பார்த்தவண்ணம் – நீண்ட உறங்கு நிலையில்….
ஏனெனில் முதலில் மாண்ட எம் மக்களின், போராளிகளின் உயிர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்…
அதன் பின்னர்… மனிதம் புதைத்த தேசம் வேர்கொண்டு எழும் மக்களாய்
மூடிய சாம்பல் தோறும் நெருப்பாய் விழிக்கும் கண்கள் – குமரிகண்டம் பனியுகத்தில் மூழ்கிய போதும் - எங்கள் தேசம் பன்னெடுங்காலமாய் உயிர்த்த தேசம் – எரித்துப் புதைத்தாலும் உயிர்ப்பைத்தான் உமிழும்.
நாங்கள் வலிகளுடன் புதைக்கப்பட்டவர்கள் …………
எங்கோ உடுக்குகளின் நார்கள் பிளக்க தேசங்கள் தோறும் ஓங்கி ஒலிக்கும் நம்மவர் குரல்கள் காற்றின் வளி பனைகளை உரச உயிர்ப்பின் அசைவுகள் தெரியத்தொடங்குகின்றன…
புத்தனின் காது பிளக்க வெற்றி முரசு கொட்டுக பேய்களே… உங்கள் அதிர்வுகள் தோறும் எங்கள் இருப்பு வலிமை கொள்ளும்!

மாலியன்
19-5-2013
"அக‌ர‌ முத‌ல‌ எழுத்தெல்லாம்..."
----------------------------------------

எலும்புக்கூடுகளே
உயிரெழுத்தும்
மெய்யெழுத்துமாய்
கூடிக்கிடக்கையிலே
என்னென்ன கனவுகள்
தின்றீர்கள்.
கனவுகள் தின்று வீட்டுப்
போட்ட எச்சில் இலைகளாய்
கிடக்கின்றீர்கள்.

கார்பன் ஐசோடோப்
கதிர்கள் காறி உமிழ்ந்து
உங்கள் காலம் சொல்லும்.

விஞ்ஞானிக‌ள்
நீங்க‌ள்
இற‌ந்த‌போது இருந்த‌
உங்க‌ள் குட‌ல் மிச்ச‌ங்க‌ளை
துல்லிய‌மாய் சொல்லிடுவார்.

அரிவாள் வெட்டா?
குண்டு துளைப்பா?
அதுவும் சொல்லிடுவார்.

இருந்தாலும்
பேய் இன‌ம்
ஒன்று வந்து
உங்களை விருந்துண்ட‌து
ப‌ற்றிக்கேட்டால்
இதோ எடுத்து வ‌ருகிறோம்
இதை விட‌ நுண்க‌ருவி என்பார்.

உல‌க‌ ம‌ன்ற‌ங்க‌ள்
ஆர்ட‌ர் ஆர்ட‌ர் என்று
மேஜையில்
ம‌ர சுத்திய‌ல்க‌ள் த‌ட்டின.

ல‌ட்ச‌ம் ல‌ட்ச‌மாய் பிண‌ங்க‌ள்.
அவ‌ற்றை மொய்த்த
ஈக்க‌ள் ம‌ட்டுமே பாடுகின்ற‌ன‌.
"அக‌ர‌ முத‌ல‌ எழுத்தெல்லாம்...."


ருத்ரா
இருவாட்டி மண்


தடயம் எதுவுமேயில்லை
குழி தோண்டிப் புதைத்ததாய்!

மண் அழுகிறது
நிலத்தை பிள
போராளி அவன்!
எலும்புகள் உக்கிவிடக்கூடாது

காட்டுப்பூக்களில் சயனிக்கிறது
ஆத்மாக்கள்.
பட்டினியோடு சமரிட்ட உடல்கள்
மண்ணைத்தின்று
மண்ணோடு மண்ணாகி செடி வளர்க்கிறது.


கதீர்
மனிதத்தை மண் தின்ற நாள்; மே-18


வாருங்கள் தோழர்களே..
உறவுகளின் உயிர்மூட்டை சுமந்து
முல்லிவைக்காலில் உயிர் நடவு செய்வோம்;

பச்சிளம் குழந்தைகள் துடித்த
நினைவெடுத்து -
சிங்களனுக்கு ‘வெண்மனப் பட்டம் தருவோம்;

நான்கு புறம் பரிதவித்த – என்
மக்களின் கதறல்களையெல்லாம் சேகரித்து
உலக மனிதர்களின் காதுகளில் ஓதுவோம்;

பால்குடி மறக்காத பச்சிளம் குழந்தைகளையும்
அப்பாவி மக்களையும் – அநீதியில் கொன்ற
கோழைகளுக்கு – போர்வீரன் பட்டம் அளிப்போம்;

துண்டு துண்டாய் தகர்த்தெறியப்பட்ட -
உடல்களால், உயிர் ஊனமுற்று துடித்த – நம்
இன அழிவு சேதி கேட்டு -
பதறாத இன உறவுகளே………..; வாருங்கள்
நோட்டீஸ் அடித்து நினைவு தினம் கொண்டாடுவோம்;

நஞ்சு பாய்ச்சி
விச குண்டெறிந்து
நயவஞ்சகத்தால் சிங்களன் – எம் கருவறுக்க
துணைபுரிந்த தேசங்களே…………; வாருங்கள்
சமாதானம் பற்றி; அடிமை ஒழிப்பு பற்றி; அஹிம்சா பற்றி
புதியதாய் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டு
வெற்றிவிழா நடத்துவோம்;

பிணக் குவியல்களில் சுடர்விட்டெரிந்த
என் உறவுகளின் பிணவாடையை -
சற்று நினைவுற்று -
நன்றாக நுகர்வுற்ற போதையில் நம்மை
மனிதர் என்று -
மார்தட்டிக் கொள்வோம் வாருங்கள்; உலகத்தீரே!!!!

தாய் எரிந்து
தந்தை உடல் சிதறி
தங்கை கருவறுத்து
அக்கா; தம்பி; அண்ணன்; குடில்; குழந்தை; எல்லாம்
ஒழித்து -
ஒழிந்து போய்விட்டோம்;
எங்களிடம் -
நினைவுகளே மிச்சமுண்டு கண்ணறுத்த தெய்வமே!!!! வா..

தொலைகாட்சிக்கு தீனி போட
செய்தியாக்கி பணம் செய்ய
அனுதாபம் தெரிவித்து ஓட்டுவாங்க
கவிதை எழுதி புத்தகமாக்க -
எம் இனமா நலிந்துபோனது உலகத்தீரே???

பச்சை பச்சையாய் அறுத்து
எரிகிறானங்கே சிங்களவன் – மேலும்
வெற்றி முழக்கமிட்டு
நடனம் ஆடுகிறான் சிங்களவன்
நம் தோல்வி அவன் வெற்றியெனில் போகட்டும்
எம் மரணம் -
அவன் இலக்குயெனில்
சரிதானா உலகத்தீரே???

அறுபது வருடம் போராடி
லட்சாதி லட்சம் உயிர்களை தொலைத்து
வெறும் தீவிரவாதி பட்டம் சுமந்து
வேறு தேசம் தேடி அலைகிறோமே
மனசு யாருக்குமே பதைக்காதா.. உலகத்தீரே???

எச்சில் உணவு தின்று
எவன் கூரை ஓரமோ ஒதுங்கி
துண்டிக்கப் பட்ட கை, கால்களோடாவது
உயிர் வளர்க துணிந்துவிட்டோம்;
வருட வருடம் விளக்கேற்றி
எம் உறவுகள் துறந்த உயிரின் மண் தின்று
உள்ளே சிலிர்த்தெழும் உணர்வு கூட்டி
சிவந்த கண்முழுதும்
ரத்தம் வெறிக்க ரத்தம் வெறிக்க
கோபக் கனல் சுமந்து -
முல்லைவாய்க்காலின்
மரண நெடிக்கு மத்தியிலே – ஓர்தினம்
எம் வெற்றிக் கொடியை பறக்கவிடுவோம்;

அந்த எண்ணம் போகும் தினம்
உயிரையும் துச்சமென விடுவோம்;

யாம் துச்சப் பட்டுப் போகும்
அந்நாளில் – வேண்டுமெனில்
நினைவு தினத்தை நீங்கள் கொண்டாடுங்கள்
உங்கள் நினைவுகளில் எம் உயிர்
ஈழ தேசத்திற்காய் விட்டதாகப்
பதியப் பட்டுக் கொள்ளட்டும்!


வித்யாசாகர்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்