ஈழத்தமிழ்க்கருவின் கதறல்
  - பிரியா பாஸ்கரன்
  ஈழத்தமிழ்க்கருவின் கதறல்
-------------------------------

21 -ம் நூற்றாண்டின்
இறப்பில் உள்ள உன்னில்
லெமுரியா கண்டம் வாழ்ந்த
தமிழன் முதல்
இனம்புரியா இன்றைய
தமிழன் வரை
வாழ்ந்த தமிழ் மக்களின்
மரபணுவால் வருவானது நான்
என்பது வித்தையே !

அம்மா !
நான் வெளிவரும் முன்னே
உருவான நாள் முதல்
என்னால் நீ பட்ட துயரை
நான் அறிவேன்
உன்னால் நான் பட்ட துயரை
நீயறியாய்
ஒரிரு நாளில் வெளிவரும் முன்னே
உன்னோடு நான் கதைக்க
விரும்புகிறேன்
அம்மா !
நினைவிருக்கிறதா !
என்று எனக்கு
அகவை மூன்று திங்கள்
மெல்லிய மலர் மீது
வல்லிய வன் கதிர்
கல்வியதன்ன தீண்டியது என்னை
கண நேரம் துடித்தேன் நான்
நாழிகை ஓறிரண்டு கழித்து
நாவினால் விழுங்கினாய் நீ ஒன்றை
நாணில் புறப்பட்ட அம்பாய்
நாற்புறமும் நஞ்சாய்
அறித்தது என்னை
எந்தையும் நீயும்
கொஞ்சுக் குழாவியயில் நான் அறிந்தேன்.
பிஞ்சு நான்
ஐந்தாவது பெண் என்று
வேண்டாது இது என்று
சுரக்காது தாய்ப்பால் என்று
கொடுத்தாய் இஞ்சிசாறு அன்று
மாடுகாட்டி போரடித்தால்
மாளாது செந்நெல் என்று யானைகட்டி போரடிக்கும்
அழகான தென்மதுரைச் சீமையிலே
பெண்ணொருத்தி
களத்து மேட்டில்
விளைந்த தானியத்தை
கல்வேறு பொருள்வேறாக
களைந்து கொண்டு தனித்திருக்கையில்
பசி கொண்ட புலி ஒன்று
புசிப்பதற்காக அவளை நோக்க
தான் கொண்ட முறத்தாலே துரத்தினாலே
அவளின் மரபணு என்னுள் இருக்குதம்மா
அன்றொருநாள் !
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே
வாளொடு முன் தோன்றியது எங்கள் குடி
தமிழ்குடி என்னும் சிந்தையிலே நான் இருந்தேன்
ஆனால் நீயோ !
திராவிட நாகர்கத்திற்கு முற்பட்டது
ஆரிய நாகரீகம் எனும்
தவறான வரலாற்றை உண்மை என்றாய்
ஒவ்வாத நம் வாதத்தால்
ஒ என நீ எடுத்தாய் வாந்தி
மற்றொரு நாள்
மானுடனாய் பரவிய நாம்
திராவிடனாய் சுருங்கியதை எண்ணி
நானிருக்கையில்
ஆனால் நீயோ !
இந்தியா என் தாய்நாடு
இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தோர்
என்றாய்.
அம்மா !
தவறான வரலாறு வேண்டாம் என்று கதறினேன்
திராவிடனாய் இருந்த என் அண்ணன்
கர்நாடகன் என்னும் இந்தியனாய் மாறிய பின்
தண்ணீர் தர மறுத்ததால்
தமிழன் நான் வடித்த கண்ணீர் தான்
அம்மா ! உன் பனிக்குட நீர்
இறுதியாய் அம்மா !
என் முப்பாட்டன் வயிற்று பேத்தி
உன் மகள்
தாயின் முலை அறுபடுவதை பார்த்து பயந்து
தகப்பன் மண்டை ஒட்டல் அடிப்பட்டு
செஞ்சோலை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டால்
அவளோடு சேர்த்து தொண்ணூறு குழந்தைகள்
சிங்களன் வீசிய குண்டில் மாய்ந்த செய்தியை
அறிவித்த தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றி
மானாட மயிலாட பார்த்தாயே அப்பொழுது எட்டி உதைத்தேன் அம்மா உன்னை
ஆனால் நீ
பெட்டைக்கோழி கூவுது என்றாய்
அம்மா
நான் கண்ணீர் விட்டு
கதறுவதும் கதைப்பதும்
உன் காதிற்கு எட்டாது
ஆம் அம்மா !
அம்மா என்னும் சொல்
உன்னை பொறுத்தவரை
ஆடு, மாட்டிற்கு உரியது
அம்மா
இறுதியாய்
வேண்டாத குழந்தையாய் என்னை சுமந்து
குழந்தைகள் தினம் கொண்டாடும் தலைவியாய் இருக்கும்
உனக்கு மகளாய்
இன உணர்வற்ற வந்தன்
ஈன வயிற்றில் பிறந்து
மண்ணுக்கு உரமாவதைவிட
ஈழப் போராளியின் வயிற்றில் பிறந்து
தனித்தமிழ் ஈழ மண்ணின் மைந்தனாய்
என் மகனை வாழ வைக்க
வாளேந்துவேன் வீர மகளாய் !
இறுதியாய் அம்மா
தமிழ் இன, மொழி உணர்விருந்தால்
எனை ஈன்று எடு
இல்லையேல்
எனை கொன்றுவிடு !


-பிரியாபாஸ்கரன்
---------------------------------

அட்சய பாத்திரமாய் அன்று
பிச்சை பாத்திரமாய் இன்று
தமிழன் !

---------------------------------
தமிழகத்தில் தீபாவளி
தமிழ் ஈழத்தில் தீராவலி
வெடிசத்தம்

---------------------------------வார்ப்பு
www.vaarppu.com