Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
வீரமும் ஈரமும்
  - பிச்சினிக்காடு இளங்கோபரிணாமும் பரிமாணமும் கை கோக்கிறபோது
கவிதை முழுமையடைகிறது
கவிதை கவிதையாகிறது

என்று கவிதைகளைப் பற்றிய கருத்துகளுடன் கவிதைகள் படைப்பவர்
கவிஞர்.பிச்சினிக்காடு
இளங்கோ
. சிங்கையிலிருந்து அவர் எழுதியிருக்கும் கவிதைகள் புலம்பெயர்ந்த வாழ்வியலில்
தமிழர்கள் கலப்படமில்லாத தனித்துவமிக்க கல்வெட்டு எழுத்துகளாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு
ஆதாரங்களாகவும் தமிழ்மொழி ஆர்வலர்களுக்கு ஆறுதலாகவும் அமைந்துள்ளன.

"உளி எடுத்துச் சிற்பம் செதுக்கியவன், மூங்கில் அறுத்துப் புல்லாங்குழல் செய்தவன், ஒலை
கிழித்துக் கவிதை எழுதியவன்.. இவர்களுக்கும் பங்குண்டு மழைக் கொலையில். ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் பெயர்ச்சொல்லி, உறவு சொல்லி வாழ்ந்த
வாழ்க்கை வற்றிவிட்டது" என்பார் கவிஞர் அறிவுமதி. (கடைசி மழைத்துளி. பக் 96) பாறைகளின்
பெருமூச்சில் கண்ணாடித் தொட்டிகளில் வாழும் மீன்களின் வாழ்க்கையாய் தண்ணீருக்குள்ளேயே
தண்ணீரைத் தேடி முட்டி

மோதும் வாழ்க்கையில் கவிதை மனசிற்குதான் மரங்கள் "உயிர்க்குடை"யாகி வாழ்க்கையின்
அறமாக முடியும்.

"நிர்வாணமாகவும்
ஆடையாகவும் ஓர்
அர்ப்பணிப்பு"
என்று வியந்து அதன் சுகம் கலந்த தழுவலில் பட்டப் பகலில் ஒரு சயன
அனுபவ கிரக்கத்தில் மனக்குரங்கு வெட்ட வெளியில் திறந்தும் திறக்காமலும் புதைந்த
புதையலாய் தவிப்பதை உணர முடியும்.

'எல்லோருக்காகவும்
வெட்ட வெளியில்
கற்பு காயப்படாமல்
திறந்து கிடக்கிறத
ு"


என்ற வரிகளை எடுத்துவிட்டால் இக்கவிதை மரம் என்ற இயற்கையின்
ஒற்றைப்புள்ளியிலிருந்து விலகி பனிக்குடம் சுமக்கும் பெண்ணின் உயிர்க்குடத்தையும் உணர்த்தியிருக்கும்
என்பதை எண்ணும் போது 'சொல்புதிது, பொருள்புதிது, சோதிமிக்க நவகவிதை' என்று மகாகவி
பாரதி பாடிய பாடல்வரிகளே நினைவுக்கு வருகின்றன. 'சங்க இலக்கியத்தில் இயற்கை' என்னும்
கட்டுரையில் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் "மனிதனால் ஆக்கவியலாத இயற்கை அவனின்
ஆக்கமான கலை
இலக்கியத்தில் மிகுதியாக வெளிப்படுகிறது. அவன் அனுபவ வெளியீடான இலக்கியத்தில் பல நிலைகளில்,
முறைகளில்.. இயற்கையில் இறைமையைக் காணுதல் என மனிதனின் ஆன்மிக வாழ்வுக்கும் அது அடிப்படையாகிறது"
என்பார். அதனால்தான் மரம் என்ற இயற்கை உயிர்க்கொடையாக , உயிர்வாழ்வின் ஆதாரமாக,
மூலமாக பல்வேறு காட்சிகளில் குடைப்பிடிக்கிறது.

வீரமும் ஈரமும் என்ற பரஞ்சோதியின் பக்தியை கவிதைநாடக மாக்கிய கவிஞரின் ஆன்மிகத்தேடலை
உயிர்க்குடை என்ற ஒற்றைச் சொல்லாக்கம் உணர்த்துகிறது. மரங்கள் இருந்தால் மழை
இருக்கும், மழை இருந்தால் தான் மண்ணில் உயிர் இருக்கும், மரங்களால்தான் காற்று மண்டலத்தில்
பிராணவாயுவின் அளவு பிறழாமல் இருக்கிறது இந்த அறிவியல் கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டு
படைக்கப்பட்டிருக்கும் கவிதை "உயிர்க்குடை" . மரம் என்றவுடன் பூ, காய், கனி, இலைகள்,
தென்றல், நிழல், காதல், தாலாட்டு என்று விரியும் காட்சிகளிலிருந்து விலகி நிற்கிறது
இக்கவிதை. மனித மனம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் மரபுகளின் ஊடாகவும் தன் அனுபவங்களுடாகவும்
பயணிக்கிறது. அந்த பயணத்தில் நம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவுக்கும் இடையறாமல் யுத்தம்.
ஒவ்வொரு படைப்பாளனுக்குள்ளும் தொடர்கிறது இந்த யுத்தம். அதனால்தான் படைப்புகளில் இரண்டும்
கலந்தக் கலவையை காண்கிறோம். கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள்
சொல்லியிருக்கும் பரிணாமும் பரிமாணமும் கை கோக்கும் தருணங்கள் இவைதான். கவிஞர் நிழல்
நெசவாளர்கள் என்ற கவிதையில்
"இனிமேலும் நான்
வெட்டமாட்டேன்

இலைகளால்
நிழல் நெசவு
நெய்பவர்களை

இனிமேலும் நான்
காயப்படுத்த மாட்டேன்"


என்று உறுதிமொழி எடுக்கிறார்.

மனவோட்டத்தின் பல்வேறு அதிர்வுகளைப் பதிவு செய்கிறது கவிஞனின் மொழி. இவர் கவிதைகளோ
எண்ணங்களின் விளை நிலமான மனம்/உள்ளம் பற்றி பல்வேறு கவிதைகளில் படிமங்களாகவும்
வாழ்வின் தேடல்களாகவும் படைக்கிறது.

மனம் என்ற தலைப்பிலுள்ள (பூமகன். பக் 28) கவிதையில்


"முகமூடிகளுக்கு முன்னே
யோக்கிய மூடியை
அணிந்து கொள்ளும்

மரணத்தில் மட்டுமே
தௌந்த நீரோடை"

என்று மனசின் சலனமில்லாத ஒரே இடமாக மரணத்தைச் சொல்கிறது. பிறிதொரு கவிதையில் 'வாமனக்கூட்டுக்குள்
வாழ்ந்து சலித்து வேண்டாததை விலக்கியபோது சுயம் நினைவுக்கு வந்ததாக தத்துவம் பேசுகிறது.
தன் எண்ணங்களை வரலாற்றில் அழிக்க முடியாதக் கல்வெட்டுத் தீர்மானங்கள் என்று பறை
சாற்றுகிறது.


"என்
பலவீனங்களை
விலைபேச
விழிகளை வீசும்

நிற வெளிச்சத்தில்
இடறிவிழுவேன் என்று
பிரமை கொள்ளும்

என் விழிகளும்
வலைகளாய்
விரிந்ததுண்டு

என்னிலிருந்து
இன்னொரு பிம்பம்
பலவீனமாய்
நழுவியதுண்டு"


என்று மனம் திறந்து மனசின் பலம் பலகீனங்களைப் பகிரங்கப்படுத்துகிறது இவருடைய 'அப்பாவி
மனம்' (பூமகன் ..பக் 42)

'கத்திரி வெயில்' கவிதையில் (இரவின் நரை. பக் 95)


பூங்காவிலிருந்து
பூங்காவுக்குப்
பயணம் தொடர்கையில்
கொளுத்தும் வெயிலை
எதிர்கொள்ள முடியாமல்
சுருக்கி வைத்திருந்த குடையும்
கண் கண்ணாடியும்
நினைவுக்கு வந்தன
அனிச்சையாய்..

சாலையை வகுந்து
சாலைப் பராமரிப்பும்
தொலைக்காட்சி இணைப்பும்
ஒருசேர நடக்கையில்

வெப்பநதியில்
விழுந்து நீந்தியும்
நெருப்பு வேள்வியில்
ஆகுதி ஆகியும்

உருகாமல் கசியும்
தோழனின்
உதிரப் பிழியலைப் பார்த்தபின்

குடையும் கண்ணாடியும்
நினைவுக்கும் கைக்கும்
வர மறுத்தன
அர்த்தத்தோடு.."


என்று மாநகர வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். இக்கவிதை புரட்சிக்கவிஞர்
பாரதிதாசனின்'சித்திரச் சோலைகளே/
தாமரைப் பூத்த தடாகங்களே/
மாமிகு பாதைகளே/
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே/
.................
நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே-உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளர் தடக்கைகளே !


என்ற கவிதை வரிகளை நினைப்பூட்டும். அத்துடன் புரட்சிக்கவி உழைப்பாளருக்கு உரிமைக்குரல்
கொடுத்தார். இவர் உழைப்பாளரின் வியர்வையைக் கண்டு தன் வசதிகள் படைத்த ஆடம்பரங்களைத்
துறக்க துணிந்தார் என்ற அடுத்தக் கட்ட மனித நேயத்தைக் காண்கிறோம். புலம்பெயர்
வாழ்வில் ஓய்வெடுக்கும் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை. அந்த ஓய்வு நாளின் உள்ளங்களின் சந்திப்பில்
கிடைக்கும் ஒரு நாள் வாழ்க்கைக்காக மீதி ஆறு நாட்களும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.


"ஒருவருக்கொருவர்
விசாரிப்புகளால்
விசால மடைகிறோம்
சுமைகளை மறந்து
சுகமடைகிறோம்

கடனழுத்தியும்
இடைவெளி வருத்தியும்
களைக்கவிடாமல்
காத்து வருவதே
ஞாயிறுதான்"


என்று படம் பிடித்து காட்டுகிறது. இக்கவிதை சிராங்கூன் சாலைக்கு மட்டுமே உரிய காட்சியல்ல,
நகர வாழ்க்கை, புலம்பெயர் வாழ்க்கையில் மொழி, மதம், இடம், நாடு, இனம் வேறுபாடுகள்
கடந்த ஒரு காட்சியாகும். தனிப்பட்ட அனுபவங்கள் உணர்வுகள் கவிதையாகும்போது அதிலிருக்கும்
பொதுமைத்தன்மைதான் இலக்கியத்திற்கு மொழிகள் கடந்த எல்லைகள் மீறிய பிரபஞ்சத்தை
உடமையாக்குகிறது எனலாம்.

கவிதையில் நாடகம் எழுதுவது என்பது எளிதானச் செயலன்று. நாடகம், கவிதை இரண்டு தளத்திலும்
இயங்கும் ஆளுமை வேண்டும். அதனால்தான் கவிதை நாடகத்தில் பெரும் கவிஞர்களும் தங்கள் முயற்சிகளைக்
காட்ட தயங்குவதைக் காணலாம். கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் வீரமும் ஈரமும்
கவிதை நாடகம் கவிஞரின் திறமைக்கு ஒரு கல்வெட்டு சாட்சியாக அமைந்துள்ளது. பரஞ்சோதி
என்ற பல்லவனின் படைத்தளபதியின் முற்பாதி வீரமும். பரஞ்சோதி சிறுத்தொண்டராகி சிவனடியாருக்கு
பிள்ளைக்கறிப் படைத்த கதை பக்தியின் ஈரமாகவும் காட்சிபடுத்தப் பட்டுள்ளது.
"நான் பகுத்தறிவுவாதி தான். ... சிறுதொண்டர் கதையில் அன்புதான் அடிப்படை.."

என்று முனைவர் சபா. இராசேந்திரன் அவர்கள் முன்னுரையில் எத்தனைதான் சமாதானங்கள் அடுக்கினாலும்
பக்தி, அன்பு, பகுத்தறிவு என்று இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் எடுத்தாளப்பட்டிருக்கும்
கருத்து தளங்களுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் பணிவுடன் பதிவு செய்கிறேன். ஆனாலும்
இக்கவிதைநாடகத்தின் சில வரிகள், சமகால தமிழின விடுதலைப் போராட்டத் தளத்தின் காட்சிகளுடனும்
கருத்துகளுடனும் ஒப்புமைப் படுத்திப் பார்க்கும் போது இருளில் தெரியும் மின்னலாக நம் மனதில்
பதிந்து விடுகின்றன. குறிப்பாக போரின் கொடுமைகளை விவரிக்கும் நரசிம்ம பல்லவனின் வரிகள்.
அவருக்கு ஆறுதலும் போருக்கான நியாயங்களும் சொல்லும் பரஞ்சோதியின் பக்கங்களையும்
சொல்லலாம்

: வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை
வழங்கப்படாத உரிமை
கெஞ்சிக்கேட்டும் அலட்சியமாய்க்
கீழறுக்கும் கொடுமை..

இப்படியே இருந்துவிட்டால்
எதிர்காலம் என்ன சொல்லும்?
வருங்கால வரலாற்றில்
தமிழர் வரலாறு
தரைமட்டம் ஆக்கப்படும்

பெருமையை நாட்ட
உரிமையை ஈட்ட
எதிர்கால வாழ்க்கையை
எளிதாக ஆக்க
நிகழ்கால வாழ்க்கைக்கு
நியாயம் வழங்க
நிரந்தர வாழ்க்கைக்கு
உறுதி வழங்க
..
இழப்புகளை எண்ணினால்
எதிர்காலம் இகழுமே!"


தோழர் புகழேந்தியின் ஓவியங்கள் நூலுக்கு மேலும் சிறப்பு செய்கின்றன. இரவின் நரை,
பூமகன், வீரமும் ஈரமும், உயிர்க்குடை என்று வரிசையாக வெளிவந்திருக்கும் இவரின் நூல்களை
அண்மையில் ஒருசேர வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. தொடர்ந்து இலக்கிய உலகில் செயல்படுபவர்,
சொற்கூட்டங்களில் இருந்து விலகி கவிதை அனுபவத்தளத்திற்கு இவர் கவிதைகள் பயணம் செய்திருப்பதை
இவரின் இன்றைய கவிதைகள் உணர்த்துகின்றன.

சிங்கையில் புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கை கவிஞருக்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது.
அவருடைய கவிதைகளில் ஒரு சில மட்டுமே புலம்பெயர்ந்த வாழ்வின் கருப்பொருளைக் கையாண்டுள்ளன.
கவிஞர் தன் வாழ்வின் வளத்திற்கு நலத்திற்கும் வழிகாட்டியாக குறிப்பிடும் கவிஞர் பேராசிரியர்
பாலா அவர்கள் சொல்லியைருப்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

"இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் பிரிந்து சென்று வாழக்கூடிய வாழ்க்கை தமிழர்கள்
பலருக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அவலத்தைக் காட்டும் டேனியலின்
போராளிகள் காத்திருக்கிறார்கள் மாதிரியான இலக்கியமில்லை. தொடப்படாத புதிய தளங்கள்
இளைய தலைமுறைக்கு காத்திருக்கின்றன..." (புத்தகம் பேசுது மார்ச் '05 பாலாவின் செவ்வி)

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் கவிதை உலகில் மேன்மேலும் சாதனைகள் படைக்கவேண்டும்.
பூமகனின் உயிர்க்குடைகளுக்கு என் வாழ்த்துகள்.

-

கவிஞர்
புதியமாதவி, மும்பை


புதியமாதவி, மும்பை எழுதிய பிற விமர்சனங்கள்
red angle பல்வேறு கவிஞர்களையும் கலைஞர்களையும் கவர்ந்த கொனாரக் சிற்பங்களை 2000 ஆண்டு இலக்கிய தொனமத்தில் வந்தக் கவிஞர் பழமலய் அந்த தொன்மங்களை ஏற்றி பார்க்கிறார்
red angle சுற்றுப்புறச்சூழல் தாண்டி வாழ்க்கையின் சமூக அவலங்கள், வர்க்கம், சாதியம் என்று பல்வேறு தளத்திற்கு வாசகனை ...
red angle ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறும் அவர்களின் உரிமைகளையும் விடுதலையையும் பேசி தன்னைத் தலைவர்களாக்கிக் ...
red angle காதலில் கூட தன் சுயமிழப்பதை இன்றைய பெண் விரும்புவதில்லை. காதலுக்காக த்ன்னை இழந்து தன் நாமம் கெட்ட ...
red angle காலம் காலமாய் புனிதமாக கருதப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தையுமே கேள்விக்குறியாக்கி தனக்காக வாழ நினைக்கும் பெண்ணின் குரலாக பதிவு செய்துள்ளார்.
red angle இந்திரனின் கவிதைகள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வெளிவந்தவை அல்ல, அவை அறிவின் கரை நின்று
red angle நாற்காலி, கவிஞருக்கு கவிதையின் கருப்பொருளாகி கவிதை இடத்தில் அவருக்கான தனி இடத்தை நிரப்பிக்கொள்கிறது
red angle தனிமையின் மவுனம் பிரபஞ்சத்தைப் பிளக்கும் வலிமையுடையது. தனிமையைத் தேடி ஓடும் மனிதர்கள் கண்டதில்லை தனிமையை ..
red angle பாலியலைக் காதலாக்கி மணம் காணும் கவிஞர் அதையே பெண் கேட்டால் கேள்விக்குறியாக்குவது சமுதாய மரபுவழி எண்ணங்களில் சிக்குண்டு இருப்பதையே உணர்த்துகிறது.
red angle காசி ஆனந்தன், வண்ணதாசன், ஆதி மூலம், அறிவுமதி..வரிசையில் இதோ இன்னொரு மழைத்துளி.
red angle தலித்தின் வாழ்க்கை அனுபவங்கள் அதிர்ச்சியானவை. படிப்பு, பதவி, பணம் என்னவந்தும் அந்த வலியின் ரணத்தை அகற்ற முடியவில்லை.
 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்