Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
பெயல் மணக்கும் பொழுது
  - தொகுப்பாளர் - அ.மங்கை
சிதறிய
கனவுகளின் குவியலாகக் கிடக்கின்ற தமிழ்ப் பெண்களின் கவிதைகள் தமிழ்
இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பயன்படவேண்டியவை. அவை ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.
அந்த வகையில் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளைக்கொண்ட பெயல் மணக்கும்
பொழுது என்ற தொகுப்பு மிக முக்கியமானது என்றே கூறலாம். 1986 இல் வெளிவந்த
ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்பான சொல்லாதசேதிகள். அதேபோல்
புலம்பெயர் தேசத்தில் வெளியிடப்பட்ட மறயாத மறுபாதி
மற்றும் தமிழகத்தில் வெளியிடப்பட்ட பறத்தல் அதன் சுதந்திரம்,
தற்போது பெயல் மணக்கும் பொழுது, புலம்பெயர்தேசத்தில் தற்போது
வெளிவந்துள்ள மை... என தொகுப்புகளாக்கப் பட்டுக்கொண்டிருப்பது
தொடர்கிறது. எல்லாமே பேசப்படும் தொகுப்புகளாக
வந்துகொண்டிருப்பதே அதன் தேவையை உணர்த்தப் போதுமானது. இத்தொகுப்பில் கிட்டதட்ட 280 பக்கங்களில் 93
கவிஞர்களின் கவிதைகள் அ.மங்கை அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுப்பை
வெளிக்கொணர்வதில் கவிதைகளை தேடிக்கொள்வது, தேர்வுசெய்வது தொடக்கம் நிதிச்சமாளிப்பு
வரை மண்டையைப்போட்டு உடைக்க வேண்டியிருக்கும். அத்தோடு அச்சிடுவது பின் பரவலடையச்
செய்வது என்றெல்லாம் தொடர்ச்சியாக உழைக்கவேண்டியிருக்கும். கையைக்கடிக்கும்
நிலையானாலும்கூட இந்த சமூக உழைப்பின் மீதான திருப்தியே தொடர்ந்து இவ்வகைச்
செயற்பாடுகளை தொடரச் செய்துவிடுகிறது. இதனூடாகப் பயணித்த அ.மங்கையின் உழைப்பும்
பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். 


கமலா வாசுகியின் ஓவியத்தை அட்டைப்படமாக கொண்டு
ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள் பெயல் மணக்கும் பொழுதாக வெளிவந்துள்ளது. இத்
தொகுப்பில் பிரசுரிக்கப்பட்ட அனைத்து கவிதைகளும் சஞ்சிகைகள், தொகுப்புக்கள்,
வெளியீடுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவைகளை  ஒவ்வொரு கவிதைகளுக்கும் கீழே 
கவிதைகள் எடுக்கப்பட்ட வெளியீடுகளின் விபரத்தை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்
மங்கைபெயல் மணக்கும் பொழுது தொகுப்புக்குள்
அதாவது கவிதைக்குள் செல்வதல்ல இக் குறிப்பின் நோக்கம். இது தொடர்பான சில விடயங்களைப்
பற்றிப் பேசவே முனைகிறது இக் குறிப்பு.பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் தமிழ்
இலக்கிய உலகில் அதிகளவு கவனிக்கப்படுவதில்லை. அத்துடன் படைப்பாளிகள் பெண்கள் என்ற
காரணத்தினால் ஆண்களே ஆதிக்கம் பெற்றுள்ள விமர்சன உலகில் தமக்கு பிடித்தவர்களை
பட்டியல் இடுவதும் மற்றைய பெண்களை ஓரம் கட்டுவதும் நடைபெற்று வரும் இன்றைய சூழலில்
அ.மங்கையின் தொகுப்பு முயற்சி இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.


தந்தைவழிச் சமூக விழுமியங்களால் வழிநடத்தப்படும்
சமூகத்தில் வாழ்கின்ற இலக்கியம் படைக்கும் பெண்கள் இன்னொருபுறமாக இலக்கியம் படைப்பது
பெரும்பகுதியாகிவிடுகிறது. அதனால் பெண்களைப் பற்றிய சித்தரிப்புகளும் கருத்துக்களும்
ஆண்நிலைப்பட்டதாக அமைந்துவிடுவதை சஞ்சிகைகள், பத்திரிகைகள்; இணையத்தளங்கள்,
வானொலிகள் வானொளிகள் என எல்லா கலையிலக்கிய வடிவங்களிலும் காணலாம். இதை மறுதலித்து
எழும் பெண்நிலை கலைஇலக்கியப் போக்குகளை நாம் இன்று அடையாளம் காண்கிறோம். இன்று
தமிழ்ப் பெண்  கவிஞர்கள் ஆழமான உணர்ச்சிச் செறிவையும் சிக்கனமான மொழியாள்கையையும்
ஆழ்ந்த தேடலும் மொழிப்பயிற்சியும் உள்ள  பல பெண் மொழிக் கவிதைகளை படைத்து
வருகின்றார்கள். சிந்தனையும் ஆக்கத்திறனும் ஒரு பெண் படைப்பாளியின் அடிப்படை பலம்
என்ற வகையில் இவ்வாறான தொகுப்புகள் காலத்தின் தேவையும்கூட. அதனால் இவ்வெளியீடுகள்
வரலாற்று ஆவணங்களாக  அடுத்த  சந்ததியினருக்கும் இருக்கப்போகின்றன என்பது
கவனிக்கற்பாலது.


இத் தொகுப்பில் பிழைகள் ஏற்பட்டு விடக்கூடாது
என்ற ஆதங்கத்தில் தொகுப்பாளர் அ.மங்கை இருப்பதை அவரது குறிப்பில் அவதானிக்கக்
கூடியதாகவுள்ளது. அதனால்தான் மங்கை இவ்வாறு கூறுகின்றார்... இத் தொகுப்பிற்காகத்
தேடியலைந்த போது எழும்பிய கேள்விகள் பல. மாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை
கிளப்பும் கவிதைகள் பெண்கவிஞருடையது இல்லை என்பதை தெரிந்த போது என்னுள் எழுந்த
ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது போனது|| எனக் குறிப்பிடுகின்றார்.
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு இப்படி ஒரு குரல் உண்டு எனத் தெரிந்த போது
இதுபோன்ற வெளிப்பாடுகளின் தேவை அவற்றை வெளியிடப் பெண்பெயர் தெரிவு செய்தமை
போன்றவற்றை நாம் கட்டுடைக்க வேண்டியது அவசியம் எனப்படுகிறது|| என்கிறார் மங்கை.
பெண்குரலினை ஆவணப்படுத்துதல் என்று வரும்போது இது ஒரு மிகமிக முக்கியமான
பிரச்சினைதான்.


இங்கு பிரச்சினை புனைபெயரைச் சூடுவதிலல்ல.
போர்க்காலத்தின் நெருக்கடிகளுக்கும் கருத்துச் சுதந்திர மறுப்புகளுக்கும் மத்தியில்
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது எழுத்தாளர்கள் புனைபெயரை வேண்டி நிற்பது என்பது
அவர்களின் உரிமையாகிறது. ஆனால் இதையே சிலர் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக்
கொண்டு வருகின்றனர். இது ஒரு ஜனநாயக செயற்பாடாகத் தெரியவில்லை. ஒடுக்கப்படும்
சக்திகளின் பெயரை ஒடுக்கும் சக்திகள் கையாள்வது பல குழப்பங்களை விளைவிக்கவல்லது.
ஈழப்போராட்ட இயக்கங்களில் இது ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களின்
பெயரைச் சூடுவது பெண்களின் பெயரில் எழுதுவது என்றெல்லாம் உத்திகள் பாவிக்கப்பட்டன.
பின்நவீனத்துவம், கட்டுடைப்பு, பெருங்கதையாடல் என்ற  முழக்கங்களும் இந்த விடயத்தில்
கவனம்கொள்ளவில்லை என்றே படுகிறது. பெண்பெயரைப் பாவிப்பதில் என்ன தவறு என்ற
கேள்விக்குமேல் இவர்களில் பலர் செல்வதில்லை. ஏன் பாவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு
விடையளிப்பதை தவிர்த்துவிடுகின்றனர். சென்ரிமென்ற் வெளிப்பாடு அல்லது தமது
எழுத்துகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிடுவது (பெண்களின் பெயரில் இருந்துகொண்டு
பெண்களைத் தாக்குவது உட்பட) இந்த வழியிலும் சாத்தியப்படவே செய்கிறது.


இத் தொகுப்பில் இந்தப் புனைபெயர் பற்றிய அச்சம்
அதை உறுதிப்படுத்துவதில் ஏற்பட்ட இயலாமை தனது தொகுப்பில் தன்னை மீறி
தவறுநேர்ந்தவிடப் போகிறது என்ற நிலையை அ.மங்கைக்குத் தோற்றுவித்திருக்கிறது. அதேபோல்
முகவுரை எழுதிய சித்திரலேகாகூட இதுபற்றிக் குறிப்பிட வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளார். அதற்குப் பிறகும் பெண்கள் பெயரில் எழுதிய ஆண்கள் (இந்நூல்
வெளியீடொன்றிலும்கூட) இதுவரை தாமாக முன்வந்து அதைத்; தெரிவிக்கவில்லை.மங்கை தொகுத்த ஈழத்து பெண்கவிஞர்கள்
தொகுப்பிலும் புதுவைரத்தினதுரை போன்றே இன்னும் ஒருசில ஆண்களின் கவிதைகளும் இடம்
பெற்றுள்ளன என அறியவருகிறது. அதை வெளிப்படுத்தவேண்டியது அவசியமாகவே படுகிறது.மாலிகா (புதுவை இரத்தினதுரை) போலவே ஆதிரா (கற்சுறா) ஆமிரபாலி, (ஹரிஹரசர்மா)
(பக்கங்கள்  36,37,41)  இருவரும் ஆண்களே. யூவியாவும்  ஆண் என்றே
சந்தேகிக்கப்படுகிறது (புலம்பெயர் நாட்டிலும் சரி இலங்கையிலும் சரி யூவியா என்ற
பெயரில் எழுதும் பெண்கள் யாரும் கிடையாது.) இருள்வெளியில் இக் கவிதை
பிரசுரிக்கப்பட்டிருப்பதைத்  தவிர, வேறு கவிதைகள் வெளிவந்ததாக நாம் அறியவில்லை.
யூவியாவின் இக் கவிதையை வெளியிட்ட இருள்வெளியின் தொகுப்பாளர்களான சுகன், சோபாசக்தி
ஆகியோர் இக் கவிதைக்குரியவர் பெண்ணா அல்லது ஆணா என்பதை தெரிந்துவைத்திருக்க
சந்தர்ப்பம் உண்டு.


1998 ஒக்ரோபரில் நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற பெண்கள்
சஞ்சிகையான சக்தி சஞ்சிகையின் ஆசிரியர் குழு புனைபெயரில் எழுதும்போது ஆண்கள்
பெண்களின் பெயர்களைப் பாவிப்பது தொடர்பில் ஒரு விமர்சனத்தை எழுதியிருந்தது.
அதற்கேற்ப அப்போது எக்ஸில் ஆசிரியர் குழுவில் இருந்த கற்சுறா தேவி கணேசன்| என்ற
தனது இன்னொரு புனைபெயரை மாற்றிக்கொண்டதுடன் அதுபற்றியும் சக்திக்கும்
அறிவித்திருந்தார். ஆனாலும்  ஆதிரா என்ற பெயரில் அவர் பிற்பாடு எழுதிய அவரது இரு
கவிதைகளும் இத்தொகுப்பில்; தொகுக்கப்பட்டுவிட்டன . அதேபோல் ஆமிரபாலி என்ற
பெயருக்குரியவரும்  மூன்றாவது மனிதன், வீரகேசரியின் உயிர்எழுத்து, இணையத்தளங்கள் (முரண்வெளி)
ஆகியவற்றில் எழுதிவருகின்ற ஹரிஹரசர்மா ஆவர்.


இத் தவறுக்கு  முழுப்பொறுப்பையும் இந்த பெண்பெயரின் பின்னால்
நின்று எழுதிய ஆண்களே பொறுப்பேற்க வேண்டும். இந்தக் குழப்பங்கள்
இனிவரும்காலத்திலாவது தவிர்க்கப்படுவது குறைந்தபட்சம் தொகுப்பாளர்களின்
சங்கடங்களையாவது தீர்த்துக்கொள்ளும்.


தமிழகத்தில் வளர்மதி போன்றவர்கள் பெண் ஆண் அடையாளங்களை
அழிப்பதற்காகவே இவ்வாறான பொதுப்பெயர்களைச் சூடுவது பற்றி எற்கனவே கூறியவர்கள். இது
வேறுவகையானது. இதை மேலுள்ள பெண்பெயர்களுடன் போட்டுக் குழப்புவது இன்னும்
குழப்பங்களையே உண்டாக்கும். சித்திரலேகா தனது முகவுரையில் இக் குழப்பத்தை
ஏற்படுத்திவிடுகிறார். ||பெயர்தொடர்பான மயக்கமே இது பாடல் புனைந்தவர் ஆணா?பெண்ணா?
என்கின்ற மயக்கம் சங்ககாலம் வரை தொடர்கின்றது தமயந்தி,அருந்ததி போன்ற பெயர்கள்
சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் பெண்கள் பெயரை பயன்படுத்துவது இதற்கு காரணம்,,
என்கிறார்.


மேலும் சித்ரலேகாவின் அதே குறிப்பில் "பெயரை மட்டுமன்றி வேறு
தகவல்களையும் சேகரிக்க வேண்டிய கருத்தூன்றிப் பார்க்க வேண்டிய தேவையை இது
சுட்டுகிறது. இது மாத்திரமல்ல ஒருவரே பல பெயர்களில் எழுதும் வழக்கமும் உண்டு.
விஜயலட்சுமி சேகர், விஜயலட்சுமி கந்தையா, சிநேகா என மூன்று பெயர்களில் எழுதுபவரும்
விஜயலட்சுமி என்ற ஒருவர்தான். இதேபோல வேறும் சிலர் என்கிறார். இந்த விடயமும்
கவனிக்கவேண்டியது என்று குறிப்பிடுவது ஏனோ தெரியவில்லை. விஜயலக்சுமி எல்லாமே பெண்
பெயர்களைத்தானே புனைபெயராகச் சூடியுள்ளார் என்ற விடயம் ஒருபுறமும் மறைந்துநின்று
தாக்குதல்தொடுக்க இது வசதியாக இருக்கலாம் என்ற தர்க்கமும் இருக்கின்றது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்படி பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவைகளும்கூட
உள்ளது என்ற உண்மையையும் பொறுப்புடன் நாம் அணுகித்தான் ஆகவேண்டும். வேடிக்கை
என்னவென்றால் சித்ரலேகாவும் சங்கரி, சன்மார்க்கா என்ற புனைபெயர்களில் எழுதி
வந்துள்ளார் என்பதுதான். (இந்தப் பெயர்களில் அவரது கவிதைகள் இத்தொகுப்பில்
இடம்பெற்றுள்ளது.)


இத் தொகுப்பில் ஏற்கனவே ஈழத்து கவிதை எழுத்துகளில்
அறியப்பட்டவர்களாக இருக்கும் கமலா வாசுகி, மாதுமை, சிமோன்தி, சலனி, மலரா, சாரங்கா,
ஜெபா, மதனி, பாலரஞ்சனிசர்மா போன்ற கவிஞர்களின்  கவிதைகள் இத் தொகுப்பில்
சேர்க்கப்படாமல் போனது குறைபாடாகச் சுட்டமுடியும்.  இவர்களின் கவிதைகள்  பெண்கள்
சந்திப்பு மலர், பெண், சரிநிகர், வீரகேசரி உயிர்எழுத்து, ஊடறு, காலச்சுவடு ஆகிய
சஞ்சிகைகளில்  வெளிவந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்துகொண்ட
சிவரமணியின் கவிதைகள், கொலைசெய்யப்பட்ட செல்வியின் கவிதைகள்,  போராளிப் பெண்களான
மேஜர் பாரதி, காப்டன், வானதி ஆகியோரின் கவிதைகளும் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளமை
தொகுதிக்கு கனம் சேர்ப்பவை.


சொல்லாத சேதிகள் காட்டிய புதிய கற்பனையும் கவித்துவமும்
தமிழ்நாட்டில் அன்று கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த பெண்களின் எழுத்துக்களை
பாதித்ததாக கொள்ள முடியாது. ஈழ நிகழ்வுகளின் வரலாற்று கனத்தைப் பக்குவமாக உணர்ந்து
அவற்றைத் தமது சூழலுக்குரிய வகையில் பொருள்படுத்திக் கொள்ள யாரும் முனைந்ததாக
தெரியவில்லை அத்தகையதொரு முயற்சியை தேவையானதாகக் கவிஞர்கள் உணர்ந்ததாகவும்
அறியமுடியவில்லை... என்கிறார் வ.கீதா.


இன்று ஈழத்திலும், உலகின் வேறு பல இடங்களிலும் நடைபெற்று வரும்
தேசிய இனப்போராட்டங்களில் பெண்கள் பல்வேறு நிலைகளில் பங்கேற்று வருகின்றனர். ஒருபெண்
தன்னை பெண்ணாக மட்டும் உணர்ந்து வாழாமல் குறிப்பிட்ட தேசியஇனத்தையும் சார்ந்தவளாக
தன்னை உணர்கிறாள். இது அவர்களிடத்தில் வயப்பட்டுவரும்  ஆளுமை, இலக்கியம், எல்லாம்
வேறுபடக் காரணமாகிறது. அதேபோல் போர்ச்சூழலில் நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்வும், 
தேசிய இனப் போராட்டத்தால் சாதி, பெண்ணொடுக்குமுறையெல்லாம் இரண்டாம்பட்சத்திற்கு
தள்ளப்பட்ட மூடுண்ட நிலையும் இவர்களது எழுத்துகளில் வெளிப்படுகிறது. அதனால் ஏற்படும்
வலி எழுத்துக்களில் வடிக்கப்படுகின்றன. இது ஈழச்சூழல்.


ஈழத்து பெண் படைப்பாளிகளுடன் தமிழ் நாட்டு பெண் படைப்பாளின்
எழுத்துக்களை ஒப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கிறது. அவர்கள் அவர்களின் சூழலை
உள்வாங்கியபடிதான் எழுதமுடியும். வேண்டுமானால் போர்ச்சூழலையும்விட தமிழகத்தில்
மோசமான வாழ்நிலைகளையும் ஒடுக்குமுறைகளையும் அனுபவித்துவரும் (தலித்துகள் உட்பட)
ஒடுக்கப்பட்ட சக்திகளிலிருந்து இவ்வகை எழுத்துகள் பெரியளவில் வராத அல்லது வரமுடியாத
ஆதங்கத்தினை நாம் குறிப்பிடலாம். வசதிவாய்ப்புகள் கொண்ட புலம்பெயர் பெண்
எழுத்தாளர்களின் எழுத்துகளின்மீது திரும்பாத விமர்சனம் அல்லது ஒப்பீடு தமிழகப் பெண்
எழுத்தாளர்கள் மீது திரும்புவது சந்தேகங்களையே உண்டுபண்ணும். இது
விருப்புவெறுப்புகள் சார்ந்ததாகவே அமையும். ஈழம் தமிழகம் என்று பெண் எழுத்துக்களை
எதிரெதிர் நிறுத்தவே துணைபோகும். தமிழகப் பெண் எழுத்தாளர்களின் மீதான விமர்சனத்தை
நேராகவே வைப்பதற்குப் பதில் பெயல் மணக்கும் பொழுதினூடாக சந்திக்க முனைவதாக அது
அமைந்துவிடலாம்.


இலக்கியத்தின் அழகியல் அளவுகோல் தனிப்பட்ட இரசனை மட்டங்கள்
போன்றவற்றை இது போன்ற தொகுதிக்குள் கொண்டு வர நான் விரும்பவில்லை வாழ்வா- சாவா என்ற
போராட்டத்தில் மூச்சுவிடத் திணறும் சூழலில் வெளிவரும் இக்கவிதைகளைக் கூறுபோட்டு கூவி
விற்க நான் தயாராக இல்லை அதற்கான மனம் என்னிடம் இல்லை... என்கிறார் அ.மங்கை. இக்
கவிதைகளை யார் கூவி விற்றார்கள். ஏற்கனவே இக் கவிதைகள் பல சஞ்சிகைகள, மலர்கள்,
தொகுப்புக்களில் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறான
தொகுப்புகளைக் கொணர்ந்தவர்கள் பணப்பிரச்சினைகளுள் திண்டாடித்தான் கொண்டுவந்தார்கள்...
மீண்டும் மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். புலம்பெயர் தேசத்தில் இதற்கான வளம்
தனிநபரிடம் இருப்பது உண்மைதான். ஆனாலும் இங்கும் அதனால் யாரும் வியாபாரம்
செய்வதில்லை.


அ.மங்கையின் இக் கூற்றினை அடியொற்றி விருபா என்ற இணையத்தளம்
இப்படி எழுதுகிறது... இத் தொகுப்பினை செய்த அ.மங்கை அவர்கள் சென்னையில் கல்லூரியில்
ஆங்கில பேராசிரியராக பணியாற்றுகின்றார். ஈழத் தமிழ்  இலக்கிய வட்டத்துடன் உயர்வான
தொடர்புகளைக் கொண்டிருப்பவர். மற்றைய பலரைப்போல் ஈழத்து இலக்கிய வட்டத்துடனான
தொடர்புகளை வியாபார நோக்கில் பயன்படுத்துபவர் அல்லர். உணர்வுபூர்வமாக ஒன்றித்து
செயலாற்றுபவர்.. . (http://viruba.blogspot.com/2007/06/blog-post.html). 
இது யாரை நோகடிக்கும் வார்த்தைகள்? சமூக அக்கறையுடன் செயற்படுபவர்கள் வேறு எவரும்
இல்லையா?.  ஈழத்து இலக்கியவட்டத்துடனான உயர்வான (???) தொடர்புகளை அ.மங்கை
கொண்டிருப்பவர் என்று விருபா கூறுவது உண்மையானால் இந்தப் பெண்பெயர்களுக்குள்
புகுந்து நின்ற ஆண்களை அவர் தெரிந்துகொள்ளவும் சந்தர்ப்பம் அமைந்திருக்கும் என்று
ஒருவரால் வாதிட முடியும்.


இந்திய பெண் எழுத்தாளர்கள் ஈழப்பெண் எழுத்தாளர்களுடன் தொடர்பில்
இருப்பதும், ஈழத்துக்கு நேரில் போய் தொடர்புகொள்வதும், புலம்பெயர் தேசத்தில் பெண்கள்
சந்திப்புகளில் பங்குகொண்டு தொடர்புறுவதும் என பலமான தொடர்பு ஒன்று உள்ளது. ஈழத்து
இலக்கியத்தில் அவர்களும் அக்கறையுடையவர்கள். தமிழ்ப் பெண் கவிஞர்களின் தொகுப்பான
பறத்தல் அதன் சுதந்திரம், விஜயலக்சுமியின் சிறுகதைத் தொகுப்பான வானம் ஏன் மேலே போனது
போன்றவற்றையும் தமிழகப் பெண்களே வெளியிட்டுள்ளனர். இதன் ஒரு தொடர்ச்சியாகவே பெயல்
மணக்கும் பொழுதையும் நாம் பார்க்க முடியும். அது இத் தொகுப்புக்காக அ.மங்கையின்
உழைப்பை குறைத்து மதிப்பிடுவது என்பதாகாது.


- றஞ்சி
தொகுப்பு - பெயல் மணக்கும்
பொழுது 


தொகுப்பாளர் -
அ.மங்கை
 


தொடர்புகட்கு -


மாற்று
1,  இந்தியன் வங்கி காலனி
வள்ளலார்தெரு, பத்மநாபா நகர்
 சூளைமேடு சென்னை 94
 


தொலைபேசி - 0091 44 24742886
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  amsaveni   நாடு   india
தளம்
  http://tamilnadu   திகதி   2008-08-02
[1]
UNKAL KAVITHAI KALI PADITHEN MIGAVUM NANRAAGA ERUNTHATHU UNGALIN THOGUPPU MUYARCHI SIRAPPU UNGALIN ENTHA KAVITHAI THOGUPPAI NAAN ENN AAIVUKU EDUTHUKKONDU ULLEAN KAVIGARKAL SUYA VIVARAM ENAKU KIDIKKA VILLAI ENAVE THAGAVAL THERINTHAL ANUUPAVUM
 

இந்நூல் தொடர்பான பிற விமர்சனங்கள்
red angle காதலில் கூட தன் சுயமிழப்பதை இன்றைய பெண் விரும்புவதில்லை. காதலுக்காக த்ன்னை இழந்து தன் நாமம் கெட்ட ...
pointபுதியமாதவி, மும்பை
றஞ்சி (சுவிஸ்) எழுதிய பிற விமர்சனங்கள்
red angle புதியமாதவியின் கவிதைகள் பெண் மொழியின் சவாலாக இன்று புதிய தளத்தில் பரிணமிக்கிறது
red angle சாமர்த்தியமாகச் சொல்லுதல் என்பதற்கு அப்பால் அவர் உணர்ச்சிகளை அவற்றின்ஆதாரமாக சொல்ல முயன்று இருக்கிறார்
red angle எமது யோனிகள் எமது உடல்கள் மற்றொரு காமுகனை பெற்றுப் போடாதிருக்கட்டும். எவ்வளவு ஆழமான கருத்து இது.
red angle பெண்ணின் ஆத்மார்த்தமான குரல்களைப் பல்வேறு வடிவங்களில் கேட்கமுடிகிறது பெண்களின் கனவுத்தேசத்தின் விடுதலையிலும் அனைவரும் சமமாக ...
red angle ஒளவையார் தான் வாழ்ந்த காலத்துப் பெண்களின் உண்மையான நிலைமையைப் புறக்கணித்ததாக விமர்சிக்கப்படுகிறார்.
 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்