Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
கற்றறிந்த காக்கைகள்
  - பேனா.மனோகரன்

பேனா. மனோகரனின்

'கற்றறிந்த காக்கைகள்'

------

1976 இல் 'சுமைகள்' கவிதை நூலை தந்திருந்த பேனா.மனோகரன் நமக்குத் தந்துள்ள நூல் இதுவாகும். .இலங்கை. அனுராதபுரத்தில் வாழ்ந்த படைப்பாளர்களுள் இவரும் ஒருவராவர். அன்பு.ஜவகர்ஷா போன்ற ஈழத்து படைப்பாளர்களின் நட்பைப் பெற்றிருந்தார். அந்த நாட்களில் தான் அன்பு.ஜவகர்ஷா, மு.கனகராஜன் போன்றோரின் கவிதை நூல்கள் வந்திருந்தன.

எனது ஈழத்து கவிதை நூல்களின் சேகரிப்பில் (800 கவிதை நூல்கள்) வந்தவைகளின் ஒரு முகப் பார்வையில் ஈழ மகனின் வலிகள் இருப்பதை உணர முடியும். பேனா.மனோகரனும் விலக்கல்ல.

இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்து காவல்த் துறை அத்தியட்சகராக கடமை புரிந்துள்ளார்.32 ஆண்டுகளுக்குப் பிறகு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தால் 52 பக்கங்களில் வந்துள்ள அழகான வடிவமைப்புடன் வந்துள்ள நூலை பாராட்டாமல் இருக்க முடியாது. வானம்பாடிகளின் வருகைக்குப் பிறகு புதுக்கவிதை ஈழத்திலும் முளை விடத் தொடங்கியது. போஸ்ட் கார்ட் கவிதைகள் என கிண்டல் அடித்தவர்களும் உண்டு.

இன்று இலக்கியப் பரப்பில் வித்தியாசமான கள முனைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மன உணர்வுகளை, பிற மன விகாரங்களை ,அழுகைகளை, ரணங்களை தன் மொழியில் எழுதும் ஆற்றல் கொண்டிருக்கிறவரின் கவிதைகள் மனதில் ஆழமாக பதிந்துள்ள எழுத்துக்கள். ஒரு மொழியை அனுபவிக்கிறவனால் நல்ல கவிதையை தரமுடியும் என்பது எனது அபிப்பிராயம் .இங்கு இவரின் கவிதைகளை நுகர்கிறபோது அந்த உணர்வு நமக்கும் வருகிறது. புலம் பெயர்ந்திருந்தாலும் தான் வாழ்ந்த மண்ணின் மீதான காதல் மாறாதவராக, மண்ணின் மக்களுக்காகவே தன் கவிதையையும் படைக்கையில் அவரின் கவிதை மீதான நமது ஈர்ப்பும் அதிகரிக்கிறது.புலப் பெயர்வின் வலியும், ஒரு இளைஞனின் குடும்பம் மீதான அக்கறையும் கொண்ட மனிதன் அவன்.

வாழ்வின் ரணங்களை இப்படியான படைப்புகளில் காண்கையில் வலி எவ்வளவு கொடியது என்பது புரிகிறது. ஒவ்வொரு மனங்களிலும் வடிகிற வார்த்தையற்ற மொழிகள் ஏதோ ஒன்றை சொல்பவையாக அல்லது சொல்ல நினைப்பவையாக உள்ளன எனலாம்.

நீண்ட சோகங்கள் கவிஞனை அன்னியப்படுத்தி அவலமும் நிகழ்ந்துவிடுகிறது. புதுக்கவிதையில் பரீட்சாத்த முயற்சிகள் நடந்தேறியுள்ளன.கவிதைகள் வரம்புகளை உடைத்தன.நமக்கு நல்ல கவிதைகள் யாவரும் வாசிக்கக்கூடியதாக வந்துள்ளன.நிறைய வாசித்ததன் நேர்த்தி தெரிகிறது. நீர்த்துப் போகாதபடி கவிதைகள் சமைத்த விதம் பாராட்டத் தக்கது. மனிதநேயம் கொண்ட இவர் எப்படி காவல்துறைக்குள் மாட்டிக்கொண்டார் என்று நான் எண்ணிப் பார்ப்பதுண்டு. உள்ளதை உள்ளபடி எழுதினாலும் அழகு சிதையாமல் எழுதினால் தான் வாசகரை தொடமுடியும்.

மொழி வியாபாரிகளின் கைகளில் கைகளில் கவிதைகளும் அகப்பட்ட இதுவரையான என் உணர்வு இங்கு தகர்க்கப்படுகிறது போலும்.மலிவான பதிப்புகளூடு வாசகரின் பணத்தை சுரண்டுகிற நிலைமை அதிகம் தான். அதிகமாகப் பேசத்தெரியாத அதிர்வுகளை தராத மனிதனிடமிருந்து இக்கவிதைகளை எதிர்பாராத சுழலில் வாசிக்கிற போது மொழியின் லாவகம் கைகளுக்குள் வந்து நிற்கிறது.

ஒரு காக்கிச் சட்டைக்கரனின் பேசும் பேனா பாரதியாரை, பாரதிதாசனை, பாப்லோ நெருடாவை நேசிக்கிற துணிச்சல் தான் கவிதைகள் அடர்த்தியாக ,பிசிறில்லாமல் வந்து விழுகிறது. நம்மை அதிர வைக்கிறது. நாம் அனுபவித்த வாழ்வின் கூறுகளை அவரின் கவிதைகள் ஊடாக பார்க்கிற போது லேசாக வலிக்கிறது.சிறுவயதில் மழை ஒழுக்கில் உடைந்த பாத்திரங்களுடன் அம்மா போராடுகிற போது நாம் கடதாசிக்கப்பல் செய்து ,அல்லது அந்த மழையில் நனைகிற உணர்வு இவரின் கவிதைகளை வாசிக்கையில் வருகிறது.எங்கோ ஒரு மூலையில் வாசிக்கபடுகிற கவிதை வாசகனை புரட்டிப் போடுகிற நிலை வருமாயின் கவிஞன் வெற்றியாளனாகிறான். அங்கு பாரதியும் ,பாப்லோவும் தெரிவான். கவிதை வாசிப்பு கவிஞனுக்கும் தேவைப்படுகிறது.

தூர தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகனிடமிருந்து என் தாய் ஊர்த் தபால்க்காரரை எதிர் பார்த்து நிற்கையில் அவனும் என்னை போல தாயிடம் உரிமை பாராட்டி நின்ற நாட்களை இவர் கவிதை ஊடே தரிசிக்கிறேன். தந்தையின் நச்சரிப்புக்கும் மத்தியில் வளர்க்க முடியாமல் சிகை அலங்கரிப்பாளரிடம் அவரே அழைத்துச் சென்று முடி திருத்துகையில் அழுது அடம் பிடித்து அவர் தருகிற இனிப்பில் மயங்கி அமைதியாகி ,பின்னாட்களில் அவரின் நட்புக்குப் பாத்திரமாகிய நாட்களை கவிதைகள் மீட்டிப் பார்க்க வைத்ததை நன்றியுடன் சொல்லவேண்டியிருக்கிறது.

கவிதை நூலுக்குரிய தலைப்பே வித்தியாசமான்து. 'கற்றறிந்த காக்கைகள்'

சட்ட இறுக்கங்களுடன் அல்லது எப்போதும் வன்மங்களுடன் தான் வாழ வேண்டிய சூழலை வாழ்க்கை நமக்கும் தந்திருக்கிறது.அடுத்தவன் மூக்கில் தோண்டி அழுக்கைப் பார்ப்பது, அடுத்தவனுடன் எப்போதும் போட்டியுடன் வாழ்வது அல்லது அழிப்பது இப்படியான மனிதர்களுடனும் வாழவேண்டியுள்ளது.இவரின் கவிதைகள் புரிய அல்லது உணர வைக்கிறது.


'...கீழ்வெண்மணியில்
ஏர்வாடியில்
தர்மபுரியில்
கோத்ராவில்
குடந்தையில்
பானிபட்டில்
ஈழத்தில்
ஈராக்கில்
பூமிப்பந்தின்
எங்காவது ஒரு மூலையில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது..
மனித ஜீவிதம்
எரிதலும் உயிர்த்தலுமாய்...'


என தீ இனிது எனும் கவியில் சொல்கிற செய்திகள் எம்மைத் தொடுகிறது


'..கண்ணில் நீர் வரலாம்
கடல் வரலாமா?வந்தது
வாழ்க்கையையும், வாழிடங்களையும்
வாரிச் சுருட்டிப் போனது.
கடலில் மூழ்கிக்
காணாமல் போய்விட்டவை
கவிதைகளும் தான்..'


சுனாமி கவிஞனையும் தண்டித்திருக்கிறது.

80 இற்குப் பின்னரான கவிதைகள் பெரும்பாலும் வாழ்வியலைப் பேசி நிற்கிறது.தங்களை உணர்ந்து எழுதுபவர்களாகவே கவிஞர்கள் உழைக்கிறார்கள் எனலாம். உலகின் குருடர்களை அறிவுக் கண் பொருத்திப் பார்க்க முடியாது.ஆனாலும் அசைத்தாவது பார்க்கிற முயற்சிதான் கவிதைகள் பெரும்பாலும் செய்ய முயற்சிக்கின்றன.

இன்னொரு கவிதையில்,


'...இப்போது வரும்
சிட்டுக்குருவியோ
நேராக
முகம் பார்க்கும் கண்ணடியில்
தன் முகம் பார்த்துக் கொள்ளவே
வருகிறது...,'


இவர் பார்த்த குருவிகள் பற்றி கூறுவது சிரிப்பாகவும், சிலிர்ப்பாகவும்

தெரிகிறது. ஊடகங்களின் ஒத்துழைப்பின்றி படைப்பாளி வளர முடியாது.சிலர் ஒதுக்கப்படுவதும் அல்லது இருட்டடிப்புச் செய்வதும் நிகழ்ந்து விடுகிறது.அதிகமாக எழுதாத இவரை ஊடகங்களில் காணமுடிவதில்லை.எனினும் இந்நூல் மூலம் பலரை சென்றடைவார் என்பது திண்ணம்.


'...புகலிடம் தந்த
பூமித் தாய் மடியில்
பூக்களைத் தூவி
பெருமைப் படுத்தி இருக்கிறது
புலம் பெயர்ந்த புங்கை மரம்..
புங்கை மரக்கிளைகளில்
பூங்கா ரயில் ஓட்டி மகிழும்
அகதி அணில் குஞ்சுகள்
மரண பயம் இல்லாமலே..'


அணில்கள் பற்றி கூறுகையில் நமது நிலை பற்றியும் குறிப்பால் உணர்த்துகிறார்.

மனிதருக்கில்லாத மானுட நேயம் இன்னோரன்ன குணாம்சங்கள் காகங்களுக்கு இருப்பதால் கற்றறிந்த காக்கைகள் என்கிறார்.

இலங்கையில் புதுக் கவிதைகளின் வரவு நிகழ்கையில் வெளி வந்த 'எலிக்கூடு', 'முட்கள்', 'ஊர்வீதி', 'போலிகள்', 'காவிகளும் ஒட்டுணிகளும்', 'கனவுப்பூக்கள்', 'யுகராகங்கள்', 'சுமைகள்' குறிப்படத்தக்கனவாகும்.

மறுபுறத்தே, மகாகவி,சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், பூநகர்.மரியதாஸ், புதுவை.ரத்தினதுரை, சோ.பத்மநாதன், கருனை.யோகன், இப்னு.அஸ்மத், கலைக்கமல், கவின்கமல், தம்பிலுவில்.ஜெகா, கண.மகேஸ்வரன் ,பேனா.மனோகரன் போன்ற பலரின் வருகை ஈழத்து கவிதைப் பரப்பின் வாசலைத் தொட்டன எனலாம்.இன்று பலரின் வருகைக்கும் தோற்றுவாயாகவும் இருந்ததை மறுக்கமுடியாது. தமிழகத்தில் வாழ்ந்தாலும் மனம் இன்னமும் இலங்கை மண்ணில் உலா வருவதை உணர முடிகிறது.நாம் கூட பல வருடங்கள் இங்கு வாழ்ந்துவிட்டாலும் இன்னும் ஊரின் நினைவுகளுடனே வாழ்வதைப் போல...


'..வாழ்க்கையில் மட்டுமல்ல
படைப்பிலும்
வேதனைக் கோடுகளையே
ஆழமாகப் பதித்தாய்..
தூரத்தால் பிரியும்
எங்களது தோழனே
உன் திறமைக்காக
எங்கள் ஏழ்மை
இதைத் தான் செய்தது..'


அன்பு.ஜவகர்ஷாவின் வார்தைகளைக் கண்ணீருடன் நினைவு கூரும் இவரின் இலங்கை பற்றிய மனப் பதிவு தெரிகிறது.அதிகார வர்க்கங்கள் திட்டமிட்டுச் செய்கின்ற அரசியல் நடவடிக்கைகளால் மனிதர்களைப் பிரித்தும் விடுகின்றன.லட்சக் கணக்கில் இந்திய வம்சாவழித் தமிழர்களை பிரித்துப் பார்த்தது.ஈழத்தமிழர்களை அழித்துப் பார்த்தது.


'காகத்தினதோ கருடனதோ
கடிவாயினின்றும் தப்பிய
கோழிக் குஞ்சொன்று-எங்கள்
கொல்லைப் புறத்தில்
வந்து வீழ்ந்தது...'


வருடிக்கொடுகிற அதே வேளையில் பிறாண்டியும் செல்கிற கவி வரிகள் இன்னும் சொல்லாமல் விட்டதை நீயாவது சொல்லேன் என்பதை சுட்டி நிற்கிறது.எனி வரும் கவிதைகள் அவற்றை சொல்லும் என கட்டியம் கூறி நிற்கிறது.

நாம் தேடி நிற்கிற கவி நூலைத் தந்த கவிஞருக்கு வாழ்த்துகள் பல.

நன்றி.

-முல்லை அமுதன்-

13/10/2010

முல்லை அமுதன் எழுதிய பிற விமர்சனங்கள்
red angle வசீம் அக்கிரமின் கனவுகள் அவர் கவிதைகளில் அதிகம் தெரிகிறது. அதிகமாய் வாசிக்கிறார் என்பதும் தமிழை அதிகமாகவே நேசிக்கிறார்
red angle திசைகளைத் தொடுகின்ற முயற்சி ஈழத்துக்கவிதைகளில் அதிகம். தனது விடுதலைக்கு மேலாக நாட்டின் விடுதலையை நேசிக்கின்ற...
 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்