புன்னகையிலிருந்து விடுதலை
---------------------------------
ஒரு புன்னகையின் பாரமென்பது
அதனைத் துயரத்திலிருக்கையில்
புரியும்போதே அறியப்படுகிறது
இக்கணம் நானணிந்துள்ள
இப்புன்னகைதரும் வலிகள்
கொஞ்சநஞ்சமல்ல
எனினும்,
புன்னகையைக் கழற்றி வைப்பதென்பது
அவ்வளவு எளிதானதல்ல
எப்பொழுதுமொரு புன்னகையை
அணிந்திருக்கவேண்டிய கட்டாயம்
எப்படியோ உண்டாகிவிட்டது
ஒரு காக்கும் மருந்தென்று
அனைவராலும் அது
ஏற்கப்பட்டுள்ளது
பீறிட்டெழும் ஓலங்கள்
நெஞ்சத்துள் கனக்க,
விக்கியடைக்கும் தொண்டையின்
வலியையும் மீறிப்
புன்னகைப்பதென்பது
எத்தனை கொடூரம்...
மரணம் கண்டு நகைப்பதென்பது
மிகவும் அநீட்சையானதே...
ஏனெனில் மரணம் மகத்தானது...
இவ்வாழ்வோ மிகக்கொடியது
அதனினும் கொடியது
இவ்வாழ்வைக்கண்டு நகைக்கவேண்டுமென்பதே
இருப்பினும்,
புன்னகைக்கா திருத்தல்
முகத்தின் நிர்வாணம்
என்றே எண்ணப்படுகிறது
சிறு தனிமையேனும் கிடைக்குமாயின்
சற்றேனும் புன்னகையினைக் கழற்றிவைத்துவிட்டு
மனமாற அழுதுமுடித்தபின்
மறவாமல் மீண்டும் அணிந்துகொள்வேன்
-ஜதி
[20080912]
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
கருத்துக்கள் (2)
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|