Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: பங்குனி 25, 2016 [ வார இதழ் ]
இன்றுவரை :: 676 கவிஞர்கள் , 2851 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointவால் மட்டும்
ருத்ரா
red pointவைகாசி வலி
வதனிநேசன்
red pointஅனாதை..உயிர்..சிரிப்பு..விளக்கு
வித்யாசாகர்
red pointவாழ்வியற் குறட்டாழிசை
வேதா. இலங்காதிலகம்
red pointஅதிசயக்குழந்தை - உணவு..பூதம்..கொஞ்சம்
இனியவன்
red pointகாதல் தீபம்
கலாநிதி தனபாலன்
red pointசங்கேத வார்த்தை
ப.மதியழகன்
red pointநம்பிக்கையை
முல்லை அமுதன்
red pointகொல்லென கொல்லும் மழை
அஸ்மின், ஈழநிலா, இலங்கை
red pointபிறகும் தொடரும் தீவின் மழை
எம்.ரிஷான் ஷெரீப்
red pointசுருக்குப்பை
சொ.சாந்தி
red pointசீர்திருத்தம்
சரஸ்வதி பாஸ்கரன், திருச்சி
red pointபூசைக்காலம்... நிலை மாற்றம்
நவின்
red pointசிவப்பு மல்லிகை
ஷஹீ
red pointஎன் புலத்தின் பாடல்..ஈரம்
ரோஷான் ஏ.ஜிப்ரி
red pointகருவறை உறவு
சு.திரிவேணி, கொடுமுடி
red pointநெடுந்துயர் அகன்றேயோடும் !
எம் . ஜெயராமசர்மா, அவுஸ்திரேலியா
red pointஉன்னை நீ அறிவாய்..சொல்லப்படாத
ச இரவிச்சந்திரன்
விமர்சனங்கள்
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
red pointகவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2011-11-10 
picture for poem
என் மரணத்தை..மண் தின்ற.. கடவுளைக்
வித்யாசாகர்
  இவரின் பிற கவிதைகள்
 
என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்.... மண் தின்ற மழையே ...கடவுளைக் கொல்லும் சாமிகள்!!

01.
என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்....
--------------------------------------------------------

வாழ்வின் பாடங்களில்
கிழிந்த பக்கங்களின்
ஒவ்வொன்றையும் எடுத்து
தன் சிரிப்பில் ஒழுகும் எச்சிலால் ஒட்டிவிடுகிறாய்;

இதயம் தைக்கும் ஊசியென
என் அறுந்த மனதின் கிழிசல்களில்
உன் நிறைவுறாத வார்த்தைப் போட்டு
பிறந்த பயனை நிரப்புகிறாய்;

தத்தி தத்தி நடந்துவந்து
எனை எட்டியுதைக்கும் ஒற்றை உதையில்
என் மெத்த கர்வத்தையும்
இலகுவாக உடைத்து வீசுகிறாய்;

நீ தின்ற உணவில்
ஒரு பாதி எடுத்து எனக்கூட்டி
என் பாதி ஆயுளை
அந்த ஒரு பிடி உணவில் நிறைக்கிறாய்;

நான் வெளியில் போக வீடுபூட்டி
தெருவிறங்கி நடக்கையில்
நீ ஓடிவந்து அம்மா தோளேறி ஜன்னலில் எட்டிப் பார்த்து
அப்பா அப்பா என்று கத்தி கத்தி நீ உடனில்லாதப் பொழுதை
நினைக்க நினைக்க வலிக்கும் ரணமாக்கிவிடுகிறாய்;

நீ பார்க்காத
பேசாதப் பொழுது ஒவ்வொன்றையும்
சுமக்க இயலாதவன்போலே யெனை
ஓடி வீடு வரவைக்கிறாய்;

நீ பெரிதா நான் பெரிதா
என்று யாரோ கேட்கையில்
நீ பெரிதில்லை
நான் பெரிதில்லை
என் அப்பாதான் எனக்குப் பெரிதென்று நீ சொன்ன வார்த்தையில்
என் பூர்வ ஜென்ம பலன்களையெல்லாம் வாரி
உலகின் சிரிப்புசப்தத்திற்கு இடையே இரைத்தாய்;

நானந்த சிரிப்பின் சப்தத்திற்கு இடையே வந்து
உன்னையும்
அவர்களையும்
பார்த்தவாறே நிற்கிறேன்
இனி’ மரணமொன்றும் அத்தனைப் பெரிதில்லை.. யெனக்கு!!02.
மண் தின்ற மழையே ..
-------------------------------

மழையே! மழையே!
எம் மண்தின்ற மழையே..
உயிர்வெள்ளத்தின் கருசுமந்த மழையே..
என்செய்தோம் யாம்..

வயிரருத்துப் போட்டதுபோல் எம்
மண்ணறுந்துப் போனது பலகாலம்
மழைபார்த்த பூமியோடு எங்கள் மார்பும்
பாலின்றி வெடித்து பிள்ளைகள் பசியால் அழுதது பலகாலம்;

மழைக்கு அஞ்சி சேர்க்கும் எறும்புப் போல
எதை சேர்த்துவைக்க எம் மழையே ?
ஒரு வேளைப் பொழுதிற்கே ஓயாது உழைப்பவர்கள்
மறுநாளை பற்றி மறுநாளே நினைப்பவர்கள்

காலில் அடிபட்டால்கூட – பட்டபோது மருந்திட்டு
அடுத்தநாள் வலியோடு வாழ்வு ரத்தமாய் கசிந்தாலும்
துடைத்தெறிந்துவிட்டு தொழில்பார்க்க போய்த் தீரும்
சாபம் பெற்ற பாவப் பிறவிகள்;

பட்டவலி போதாமல், அவன்
இட்ட கடன் தீராமல், விதியென்ற ஒரு
இல்லாத கிணற்றுக்குள் சாகும்வரை மூழ்கப் பட்டவர்கள்
மூழ்காத குறையொழிக்க நீயும் வந்தாய் எம் மழையே;

ஒருநாள் இருநாள் பட்டினி நெருப்பில் புசுங்கினோம்
இடையே அடிக்கும் குளிரில் நோயுற்றுப் போனோம்
சோறில்லா வயிற்றுக்கு மருந்தெங்குப் போட
மலைத்துப் போய் மழையோடு மண்ணாகவேப் போகிறோம் மழையே;

ஒழுகிய இடத்திலெல்லாம் பாத்திரம் வைத்தோம்
வைக்க பொருளில்லாத யிடத்தில் – கண்ணீர் பூசினோம்
மீறியும் உள்புகும் மழையை உயிர்விட்டுத் தடுக்கிறோம்
ஒருசொல் கேளாது எங்கள் வீடுடைத்துப் போனாயே மழையே;

உன்னைப் போய் பலர் கடவுள் என்கிறார்
உன்னைப் போய் பலர் கவிதை என்கிறார்
உன்னால்தான் எல்லாமே என்கின்றார் – ஆம்
உன்னால்தான், உன்னால்தான் எல்லாம்; எங்களின் வாழ்வும்
எங்களின் மரணமும் உன்னால்தான் எம் மழையே;

ஒரு குறிப்பொன்றுக் காண் -
பெய்யாமல் இருந்துவிட்டு பூமி வெடித்தப்பின்
அடைமழையெனப் பெய்து
வெள்ளமெனப் புகுந்து –

வீடழிக்கும் நாட்களின் குறிப்பில் இதையும் எழுதிக் கொள்
நீ வளர்த்த பயிர் நீ; வளர்த்தப் பிள்ளைகளெல்லாம்
நாங்கள் விட்டுப்போகும் உயிர்களின் மிச்சத்தில்
அனாதையாய் கிடக்கும் அடுத்தமுறை வருகையில் அதையும் வாரிச் செல்..

மாடிவீட்டுக் கனவுகளுக்கு நீ விருந்தாளியாய் இருந்துப் போ
ஆடிப்பாடி விளையாட நீ கொண்டாட்டமாய் இருந்துப் போ
ஓலைவீட்டு விவசாயிக்கு நீ வரம் தரும் கடவுளாய் இருந்துப் போ
உயிர் அறும் பொழுதுகளில் வந்து; யெம் மண்தின்றும் போ நீ மழையே!!03.
கடவுளைக் கொல்லும் சாமிகள்!!
---------------------------------------

நாலு ரூபாய் வருவாயில்
நானூறுக்கும் மேலேக் கனவுகள்,
யார் கண்ணைக் குத்தியேனும்
தன் வாழ்வைக் கடக்கும் தருணங்கள்;

சாவின் மேலே நின்றுக் கூட
தன் ஆசை யொழியாச் சாபங்கள்,
ஆடும் மிருக ஆட்டத்தில்
மனித குணத்தை மறந்த மூடர்கள்;

போதை ஆக்கி போதை கூட்டி
எழுச்சிப் பாதை தொலைக்கும் பருவங்கள்,
படிப்பில் படைப்பில் கணினியில் வாய்ப்பேச்சில் மட்டும்
வீரம் காட்டும் வித்தகர்கள்;

காலில் பட்ட அடிக்குத் துடிக்கும்
விழுப்புண் இல்லா வீரர்கள்,
நூறுபேர் சேர்ந்து ஒருவனைக் கொன்றாலும்
கண்மூடிச் செல்லும் கோழைகள்;

பெண்ணின் ஒரு மயிர் உதிர்ந்தால் போதும்
காதல் காதலென சுமக்கும் பொய்முகங்கள்,
பெண்ணின் வலி கண்ணீர் இழப்பு ஏக்கம்
பற்றியெல்லாம் பின் வருத்தப் பட்டிடாத வேடதாரிகள்;

பணத்தில் பிறந்து பணத்தில் வளர்ந்து
பணத்தால் சாகும் இழிபிறப்புகள்,
உடுத்தும் உடையில் நடக்கும் நடையில்
மனம் எரிந்துப் படிந்த மினுமினுக்கிகள்;

யாருக்கு என்ன ஆனாலும் வருத்தமின்றி
தன் பாருவுக்குபுடவை மடிக்கும் கரைவேட்டிகள்,
பக்குவமில்லா வெட்டிகளிடத்தில்
பயங்கொண்ட மக்களின் கைநிறைந்த தேசங்கள்;

காட்டுவழியேப் போகும் வாழ்க்கை
இடையே களவும் கற்கும் புதுமைகள்,
பொய்யில் அழியும் பாதைத் தெரிந்தும்
புகழுக்கேவாழும் பெரும் பிழைகள்;

கடவுள் பித்து கடவுள் பித்து
மதத்தின் நிறத்துள் போதனைகள்,
கலந்து கெடுத்து கலந்துக் கெடுத்து
குற்றம் சுமக்காக் கயவர்கள்;

கடவுளைக் கொன்று கடவுளைக் கொன்று
பதவியைத் தேடும் ஆசைகள்,
அறிவு புகட்டி அறிவு புகட்டி – பின்
கிணற்றில் வீழும் கொடுமைகள்;

காசுக்கில்லை மனிதம் தெளிவு
காடும் மேடும் கோவில் கலவரம்,
வெறும் தெய்வம்செய்து குற்றம் சொல்லிக்
குழந்தையைப் பசியில் கொள்ளும் கொடூரங்கள்;

மூடத்தனத்தின் உச்சம் ஏறி
முழு நிர்வாணங் காட்டும் அழிவுகள்,
யாரோ சொன்ன தெருவழி நடந்து
சுடு-காட்டில் முடியும் தொடர்கதைகள்;

சிந்தித்திடுடா சிந்தித்திடுடா எனச்
சொன்னோரெல்லாம் ச்சீ...ச்சீ ஆனான்; சரியில்லையே..
வீட்டைத்திருப்பி வைத்தவன் கையில்
நாட்டைக் கொடுப்பது வளமில்லையே;

குறுக்குவழியில் தேடிடும் கடவுள்
கையிலிருந்தும் கண் தெரியலையே'
கத்தும் உயிரின் கழுத்தை நெறிக்கா -
கருணையில் பார்த்தால் நீயும் கடவுளடா!!


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  சோமா   நாடு   India
தளம்
    திகதி   2011-11-17
[1]
பெற்ற மழலையைப் பிரிந்து அலுவலகம் செல்தல் மழ்லைக்குமட்டுமல்ல, நமக்கும் பெரிய வலியைக் கொடுக்கவேச் செய்கிறது. எல்லோருக்குமான மழை. தன் சுயநலங்களுக்கு எதிர்படுபவைகளை எல்லாம் பலியாக்கும் மனிதர்கள் என நீள்கிறது......சிந்திக்கத் தூண்டும் நல்ல கவிதைகள்.
 
பெயர்
  வித்யாசாகர், குவைத்   நாடு   India
தளம்
    திகதி   2011-11-18
[2]
வார்ப்பில் வரும் கருத்து, வனத்தில் பெய்த மழையென மகிழ்வினில் ஆட்படச் செய்கிறது. வார்ப்பு ஒரு வனம். கவிதைகள் பூத்த, மனிதத்தின் மழைப்பெய்ய மேகம் சூழும் வனம்..

தங்களின் கருத்திற்கு நன்றியும் வணக்கமும்!

வித்யாசாகர்
 


 

கருத்துக்கள் (2)சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2016 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்