மீந்திருந்த எல்லாச் சொற்களையும்
அவர்களை நோக்கி வீசியாயிற்று
அவர்கள்
சிலுவையில் எழுதிய உனது முகம் பற்றிய கதைகளை
அவற்றில் தேடுகிறார்கள்
எக்காலத்திலும் திரும்பிவராத அச்சொற்கள்
நீ ஒரு பறவையைப் போலிருந்தாய் என்பதைத் தவிர
வேறெதையும் கொண்டிருக்கவில்லை
உன்னால் நேசிக்கப்பட்ட
நூற்றுக்கணக்கான கவிதைகளின் காதல் ததும்பும் வார்த்தைகளை
நான் வைத்திருந்தேன்:
குடிமயக்கத்திலும்
சிகரெட் புகை நாற்றத்திலும்
நீ எங்களோடிருந்ததற்கான அடையாளங்களை
நான் வைத்திருந்தேன் நான் வைத்திருந்தேன்
அவர்களோ அவற்றில் மின்கம்பிகளைச் செருகினார்கள்
எல்லாம் முடிந்த பாழ் மௌனத்தில் விசமுட்களை ஏற்றினார்கள்
அவ்வாறு நடக்காதென நானிருந்த கணத்தில்
பார்வையைப் பிடுங்கி
இந்தப் பிரபஞ்சவெளியில் ஒலியெழ வீசியதை நான் உணர்ந்தேன்
குயில் தனது பாடலை பாலைவனங்களுக்கப்பால்
எடுத்துச்சென்றுவிட்டது
அவர்களோ
எமது வாழ்வு பற்றிய அடையாளங்களனைத்தையும் கடலுக்கப்பால்:
யாருக்கும் தெரியாத உவர்க்காடுகளில் புதைத்துவிட்டார்கள்
நான் உணர்கின்றேன்
நீயோ நானோ
எமது தாய்களின் கலைந்தகேசத்தையும்
கலங்கித் ததும்பும் விழிகளையும்
அவர்களின் உள் விசும்பும் மன ஒலிகளையும்
இனி எப்போதும் கேட்கவோ பார்க்கவோ போவதில்லை
சிறைக்கதவின் துவாரங்களுக்கு வெளியே