Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: வைகாசி 24, 2013 [ வார இதழ் ]
இன்றுவரை :: 636 கவிஞர்கள் , 2725 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointமழை சுட்ட.. ரத்தக் கடத்தி..படுகொலை
கோபால் நாதன்
red pointகண்ணாமூச்சி ஆடுகிறாள்
இன்பசுதேந்திரன்
red pointபயணியே!
வேந்தன்
red pointகசக்கும் நினைவுகள்
ஹபீலா ஜலீல்
red pointநிலாவும்..காதல் யுத்தம்..லேட்டஸ் லவ்
இரா சனத், கம்பளை
red pointமாமிஷ தின்னி.. நாய்கள்.. வேக்கையன்
ஜே.பிரோஸ்கான்
red pointமரணம்
எம்ஸீயே.பரீத்
red pointமரணமெனும் விடியல்
ரொசனா ஜேவ்ரி
red pointமறந்தது எப்படி!..வறுமை.. வெண்ணிலா
வேதா. இலங்காதிலகம்
red pointகழிவுநீரில்.. சிட்டுக்குருவி..நாம் அலை
வித்யாசாகர்
red pointஅவசரத் தீர்மானம்.. மிரள.. பிரளயம்
இன்பசுதேந்திரன்
red pointநானிலத்தை அழகூட்டும் வனப்பேச்சி
க.உதயகுமார்
red pointபரம்பரை நோய்
நீச்சல்காரன்
red pointகாலம் அவளை.. மழையில் நனையாமல்
வேலணையூர்-தாஸ்.
red pointவீட்டில் எண்ணெ.. முற்றுப்புள்ளி..ஒரு கொடி
வித்யாசாகர்
red pointசொல்லித் தீராத சங்கிலி
எம்.ரிஷான் ஷெரீப்
red pointபத்மினி சாகுமளவிற்கு உன்னை
தக்ஷிலா ஸ்வர்ணமாலி
red pointவானம் உமிழ்கிறது..காதல் கொண்ட
கிருஷ்ணா, யாழ்ப்பாணம்
விமர்சனங்கள்
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
red pointகவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2012-01-19 
picture for poem
வேண்டாம் உலக.. நிறைவேறாத.. தமிழே
கிரிகாசன்
  இவரின் பிற கவிதைகள்
 
வேண்டாம் உலக வாழ்வு.. நிறைவேறாத காதல்.. தமிழே தருவாயா?

01.
வேண்டாம் உலக வாழ்வு
---------------------------------------

சிலையாகக் கல்லாகச் செங்கதிர் ஒளியாகச்
சிவந்ததோர் மாலைவிண்ணின்
அலையும்வெண் முகிலாக அதனூடு மதியாக
அடங்காத திமிரெடுத்த
மலையாகக் குயிலாக மரம்மீது துணைகூடும்
மகிழ்வான குருவியாக
இலைபூவைத் தழுமோர் இளந்தென்றற் காற்றாக
எம்மையும் படைக்காத தேன்?

நிலையாக ஒர்நேரில் நிற்கின்ற மரமாக,
நில்லாமற் தடம்புரண்டு
அலைந்தோடும் காட்டாற்று அருவியாய் அதுசேரும்
ஆழியென் றாக்கலின்றி
தொலையாத துயரோடு தோன்றிடும் பிணியாலே
தூரமென் றின்பங்கொண்டு
கொலைபாதகர் கையின் கொடும்வாளில் உயிர்போகும்
கோலமும் ஏன் படைத்தாய்?

குலையான கனியாக கூடிடும்கொத்தான
குறுவாழ்வு மலர்கள்போலும்
தலைசாய வீழ்ந்துமண் தழுவுநெற் கதிராக
தன்மானங் கூனலிட்டு
இலையென்ற துன்பங்கள் எதிர்வந்து மனதோடு
இழையவும் தளதளத்து
புலையுண்டு மதிகெட்டு பிறழ்கின்ற வாழ்வாகப்
பிறவியுந் தந்ததேனோ?

கிளை தூங்கு சிறுமந்தி யெனஓடி வீழ்ந்துமோர்
கீழ்மையில் சிந்தைவாட
வளைகின்ற முதுமையோ வாவென்று கூறிமேல்
வானத்தின் திசைகாட்டிட
நுளைகின்ற காற்றாலே நுண்துளைக் குழலூதும்
நேரிலே உடலூதியும்
விளைகின்ற உயிர்க்காற்று விதிகொள்ள வீழுமிவ்
வெற்றுடல் தந்ததேனோ?

மழைகொண்ட வான்மீதில் மறுகோடி உறையுமென்
மாதேவி சக்திதாயே !
பிழைகொண்ட வாழ்வீது பேர்மட்டு முயர்வான
பிறவியாம் மனிதமென்றே
துளைகொண்ட மேனியுந் துடிக்கின்ற வேளைகள்
துஞ்சிடுந் நெஞ்சம் வைத்து
விளைகின்ற மேனியில் விஷம் வைத்து மீந்தனை
வேண்டா மிவ்வுலக வாழ்வு!



02.
நிறைவேறாத காதல்
-----------------------------

நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண்முகில் தாவிவந்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலாவில் தேடினேன்

கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
அன்பில் அளிக்கவென்றே
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
மின்னிய வெண்ணொளியில் - அங்கே
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
துள்ளிக் கடந்து சென்றேன்

மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது
கையள்ளி நீர்தெளித்தேன்
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்
சேரமுடிய வில்லை

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - அட
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா
ஒன்றிட ஒட்டிவைத்தேன்

ஆனவகையினில் ஆகாதவேலைகள்
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென
ஏதும் புரிவ தல்லேன்
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்
தேடியலைந்து சென்றேன் - ஆயின
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை
வேடிக்கை காணாநின்றேன்

கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்
கன்னம் பழமெனவும் அவள்
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி
வேதனை பார்வைதரும்
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்
ஏனோ மனதிற் கொண்டாள் - இள
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்
வந்து அணைப்ப தெப்போ?


03.
தமிழே தருவாயா?
-------------------------------

தமிழோடு விளையாடித் தரநூறு கவிபாடித்
தவழ்கின்ற பெருவாழ்வு வேண்டும்
இமைமீது விழிகொண்ட உறவாகக் கணமேனும்
உனையென்றும் பிரியாமை வேண்டும்
கமழ்வாச மினிதான கனிகாணுந் தருவாக
கனம்கொண்டு இவன்சோலை யெங்கும்
திகழின்பத் தமிழான தென்றும்நற் பொலிவாகி
தினமொன்று கனிந்தாக வேண்டும்

சுவையான தெனஅன்னை தமிழோடு பயில்கின்ற
சுகமான உணர்வென்றும் வேண்டும்
அவைகூற அவையேறின் அழகென்பதென யாரும்
அதுகண்டு புகழ்கூற வேண்டும்
எவைமீதி இருந்தாலும் எதுமீறி நடந்தாலும்
உனதன்பு அதைமேவ வேண்டும்
இவைபோதும் எனவல்ல இகமீது தமிழ்போதை
எழுந்தின்ப நதிபாய வேண்டும்

குவை தங்கம்,கொடி ஆட்சி, குடிவாழும்
ஊரென்று எது தந்தும் பரிசாகக் கேட்டும்
அவையொன்று நிகரில்லை அரசாளத் தமிழேடும்
அதிகாரம் அதில் உண்டுபோதும்
குவிகின்ற மலர்மீது கொள்கின்ற துயில்போலும்
கலையன்னை மடிமீது சாயும்
கவினின்பக் கணம்போதும் கருதேனே பிறிதேதும்
காணென்று மனம்கூற வேண்டும்

ரவிவானில் வரும்போதி லெழுவான ஒளியாக
என்றென்றும் பிரகாசம் வேண்டும்
இரவில்வந்த நிலவாலே எழுகின்ற மனபோதை
இதனோடு இழைந்தோட வேண்டும்
சரமாலை யணியாகத் தமிழன்னை புகழேந்தி
தருகின்ற கவியாவும் என்றும்
வரமான தரவேண்டும் வளர்வொன்று தானின்றி
வழுவாத நிலைகொள்ள வேண்டும்


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  கா.ந.கல்யாணசுந்தரம்   நாடு   India
தளம்
    திகதி   2012-01-29
[1]
சிறந்த கவிதைகள் கிரிகாசன், வாழ்த்துக்கள்
 
பெயர்
  Kaliappan Ezekkial   நாடு   India
தளம்
    திகதி   2012-02-25
[2]
தமிழ்வானி லெழுகின்ற தனிச்சோதி யதுவாகத்
தானும்நீ வாழ வேண்டும்!
அமிழ்தானத் தமிட்பானம் அருந்தாத வாய்களில்
அதுவாக ஊற்ற வேண்டும்!
கமழ்சோலை மலராகக் கனிகூட்டும் சுவையாக
கடிமாலைத் தென்ற லாக
உமிழ்வான மழையாக உடன்வந்த உறவாக
உந்தமிழ் நிலைக்க வேண்டும்!

சந்தங்கள் கூட்டிச் சமைத்த,உம் கவிகண்டு சட்டென்று வந்த கவிதை வாழ்த்துக்கள்;
சொந்தங்கள் எனக்கூடிச் சுவைத்தமிழில் இசைபாடிச் சுதந்திரமாய் வாழுவோம்! வாழ்த்துக்கள். மரபுக் கவிதைகளுக்க்கென்று தனியாக மீண்டும் வாழ்த்துக்கள்.
 


 

கருத்துக்கள் (2)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2013 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்