|
|
|
|
|
|
|
|
|
|
|
அன்னையின் தபோவனத்தில்.. ஒலிச்சிகிட்டே இருக்கு.....
01.
அன்னையின் தபோவனத்தில்
-----------------------------------------
ஒரு நீர்த்துளிக்குள் கடல்...
என்று அறிந்தும் இந்த வாழ்க்கை
ஒரு மௌனத்தின் பிரவாகம்
என்பதை யாவரும் அறிந்திலர்!
இருட்டறைக்குள் உயிர் கொடுத்து
தவமிருந்து பெற்றெடுத்த தாயுள்ளம்
ஒரு தபோவனம்!
வம்ச விருட்சத்தின் நாற்றங்கால்கள்
இன்றளவும் நாம்தான் என்று பறைசாற்ற....
உன்னுள் இன்றளவும் எதை சாதித்தாய்
என்று மனம் மௌனமாய் கேட்பது
யாருக்கு தெரியப்போகிறது!
ஆனால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது
இந்த மானுடம் வென்ற மௌன நித்திரை
மரணமென்று!........
இனிமேலாவது அன்னையின் தபோவனத்தில்
ஒரு நிரந்தரப் பணியாளனாய் இரு!
02.
ஒலிச்சிகிட்டே இருக்கு.....
--------------------------------------
நெனவிருக்குதா பொன்னுத்தாயி
நீயும் நானும் ஒண்ணா சேந்து
நாலாவது படிக்கிறப்போ
களத்துமேட்டுல ஓடிப்பிடிச்சி
விளையாடும் போது.....
என்ன மாடு முட்டி கீழ தள்ளுனத!
கையில கட்டுபோட்டு
வீட்ல இருந்தப்போ
ஒன்னோட அம்மாவோட
என்ன பார்க்க வந்தப்போ....
'ஒங்க பொண்ணாலதான்
எம் புள்ள கைய ஓடிச்சிகிட்டான்'
அப்படின்னு ஆத்தா உன் ஆத்தாகிட்ட
சண்டை போட்டு அனுப்பிடுச்சி!
ஆனா....நீ ....எங்கிட்ட சொல்லிட்டுப் போனே...
நான் விழுந்த எடத்துல
ஒரு புளியங்கன்னு நட்டுவச்சி தண்ணிவூத்தி
வளக்கறேன்னு........
அதுக்கப்பறம் உங்க ஆத்தாவோட
வேற ஊருக்கு போயிட்ட....
இப்ப சரியா முப்பத்தஞ்சு வருஷமாச்சி....
நம்ம ஊர் அங்காளம்மா கோயில்ல
திருவிழாவுக்கு வந்தப்போ பாத்தேன்...
நீ நட்டுவச்ச புளியமரம் வளந்து
பூவும் பிஞ்சியுமா பாக்கறப்போ.....
உன் நெனப்பு வந்துடுச்சி பொன்னுத்தாயி!
ஆமா.... பொன்னுத்தாயி!
இப்ப என் கை நல்லா இருக்கு!
உன்னோட வேண்டுதல் பலிச்சிடுச்சி!
ஆனா உன்னோட வாழ்நாள்ள...
இந்த புளியமரமும் நம்மோட
கண்ணாமூச்சியும்.....மறக்கமுடியாத
பாதிப்ப உண்டுபன்னிடிச்சி.....
அக்கம் பக்கத்துல சொன்னாங்க....
போன வாரம் நீ உன் புருஷன் கொழந்தையோட
ஊருக்கு வந்து இந்த புளியமரத்தடியில
பொங்கல் வச்சி சாமி கும்மிட்டேன்னு.....
மனசு தாங்காம என் நெஞ்சுலே
ஒரு கேள்வி மட்டும் திரும்ப திரும்ப
ஒலிச்சிகிட்டே இருக்கு.....
என் சாமியே சாமி கும்பிடனுமா?
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
கருத்துக்கள் (1)
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|