|
|
|
|
|
|
|
|
|
|
|
இதுவும் ஒரு தாலாட்டு
ஏனழுதாய் ? என் மகனே
ஏனழுதாய் ?
தீய இவ்வுலகத்திலே
தோய்ந்து போன உள்ளத்துடன்
காய்ந்து நானும் அழுததாலோ
நீயழுதாய் ?
நேற்றைய உலகத்தின்
நாயகனாய்
நாளைய உலகத்தின்
விடிவுக்காய்
உழைத்துத் தன்
உயிரை விட்ட உன் தந்தையை
உணர்வுகளில் தழுவி நான்
உகுக்கின்ற கண்ணீரைக் கண்டோ
நீயழுதாய் ?
ஒரு வாய் சோற்றுக்காய்
ஓராயிரம் பாதங்களில்
தலைவைத்து மன்றாடும் இந்தத்
தாயின் நிலை கண்டோ
சேய்
நீயழுதாய் ?
நன்றாக வாழ்ந்தவர் தான்
நயவஞ்சகர் சூழ்ச்சியினால்
நடுத்தெருவில் இன்று
நின்றாடிடும் காட்சி
நேற்றுப் பூத்த ரோஜா உன்
நெஞ்சினிலே நிகழ்வாய்த் தெரிவதாலோ
நீயழுதாய் ?
பூமாலை வாங்கவே பாவம்
பூவையவள் கையில் பணமில்லா நிலையில்
பூசாரி அர்ச்சனையில் அள்ளியெறிந்த
பூக்கள் கொண்டு தொடுத்த
வாசமிக்க மலர்மாலை கூந்தலில் சூடி
வாராத எதிர்காலம் தனை
வாசலில் நின்றே பார்த்து
விழிகள் பூத்து
ஏங்கும் உந்தன் சக உதிரி
ஏக்கம் கண்டதாலோ
என் மகனே
நீயழுதாய்
ஊரெல்லாம் கொண்டாட்டம்
உன் வீட்டில் திண்டாட்டம்
உழைத்தும் வாழ்வு காணா
உள்ளங்கள் தான் நம் சொந்தம்
உன் துயர் துடைக்க வழியின்றி
உள்ளம் நோக வருந்தும் அன்னையின்
உடைந்த உள்ளம் கண்டோ
நியழுதாய்
கண்ணுறங்கு என் மைந்தா
காலம் மாறும் என்றொரு
கனவு நெஞ்சினிலே ஏனோ
கனிந்து நிழலாடுது
கைகள் ஒன்றையே நம்பி வாழும்
காலத்தின் தோழர் ஏழையர் நாம்
கண்மூட வேண்டுமென்றால்
கண்ணே கனவுகளை நம்பித்தான்
கட்டாயம் வாழ வேண்டும்
-- சத்தி சக்திதாசன்
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|