மொழிதலால் வெளியிடாத வார்த்தைகள்
---------------------------------------------------
பேசும் வார்த்தைகளெல்லாம்
பேசவேண்டிய வார்த்தைகளுக்குத்
தூது வருகின்றனவோ
என்கிற ஐயத்தைத்
தூண்டிய வண்ணமே உள்ளன
யாதொரு பேதமுமின்றி
யாவரின் மனங்களிலும்
எண்ணிலடங்காமல்
குவிந்து கிடக்கின்றன
மொழிதலால் வெளியிடாத வார்த்தைகள்
கண்ணீராகவோ
புன்னகையாகவோ
கேள்விகளாகவோ
பதில்களாகவோ
உரைக்கப்படவேண்டிய இவ்வார்த்தைகள்...
மௌனங்களாகவோ
தயக்கங்களாகவோ
மாற்று வார்த்தைகளாகவோ
மறைக்கப்படுகின்றன
பதுக்கப்பட்ட நிலையிலானதொரு
கண்ணிவெடியின் கலக்கத்தை
மொழியாதவரிடமும் கேட்காதவரிடமும்
நித்தமும் உண்டுபண்ணியபடியே
உள்ளன இவ்வார்த்தைகள் ஒவ்வொன்றும்
இருப்பினும்...
இவ்வார்த்தைகளைச் சேகரிப்பதே
இவ்வாழ்வின் கடமையென்றும்
இவற்றை வெளியிடாமலிருப்பதே
இவ்வாழ்வின் தன்மைகளைப் பாதுகாப்பதாயும்
மறுக்காமல் ஏகமனதுடன் நம்பப்படுகின்றன
யார் கண்டார்கள்??
இவ்வார்த்தைகள் யாவும்
ஒருநாள் மொழியப்படுமெனின்
அடுத்த நாள்முதல் நாமெல்லாம்
ஊமைகளாகிவிடுவோமோ என்னவோ...
-ஜதி
[22-04-2008]
- ஜதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-28