அகதி விசாரம்
தீபட்ட மத்தாப்புகளாய்
திடுப்பென்று,
மிலாறாய்க் கிடந்த மரஞ்செடி கொடிகள்
பூவும் தளிருமாய்ப் பொலியவரும்
இளவேனில்.
நாளொரு பறவையும்
பொழுதொரு விலங்கும்புக
உயிர் பெறும் துருவ உலகம்.
சூரியன்கூடத் தூங்க மறுத்த
குதூகலமான வெய்யில் இரவுகள்.
எந்தத் துயரும் தோல்வியும் இழப்பும்
ஓர் நாள் முடிவுறும்
மரணத்தை அன்று வாழ்வு வென்றிடும் என்று
துயில் நீங்கி அசையும் மலைப்பாம்பினைப் போல்
உருகிடும் ஆற்றில் மீன்கள் பாடும்.
வெப்பமானியே கிளர்ச்சியடைகின்ற
இந்த நாட்களில்
இடுகாட்டிலிருக்கும் நடுகல்போல்
நான் மட்டுமேன் வாழாதிருக்கிறேன்?
வாழ்வை ரசிக்கும் மரபில்லாத
யாழ்ப்பாணத்தான் என்பதனாலா?
இராவணனாலும், அனுமனாலும்
மீண்டும் மீண்டுமென் ஈழத்தாயகம்
தீயிடப்படுகின்ற துயரத்தினாலா?
எதிரிகளாலும் குமாரர்களாலும்
கற்பழிக்கப்பட்ட ஓர் ராசாத்தியுடைய
சோகத்தை எழுதவல்ல வார்த்தைகள்
என்னிடம் இல்லையென்பதனாலா?
ஈசலாய் பறக்கும் என் தாயக மக்கள்
உலகப்பந்தின் ஒவ்வோர் புறத்திலும்
இறகிழந்து
வீழ்ந்து கிடக்கின்ற வேதனையாலா?
அகதிகளாகவும்
சர்வதேசக் கூலிகளாகவும்
மனித முகம் சிதைந்த பின்னரும்
புகுந்த நாடுகளில்
இது என் சாதி இது என் சொந்த ஊர்
இது எனக்கான சீதனம் என்று
நாறுகின்ற நம் தொழுநோய் தொடரும்
சிறுமைகள் கேட்டுத் திகைத்ததனாலா?
தசாப்தம் ஒன்றாய் என் தாய்நாட்டில்
இலையுதிர்காலம் தொடர்கிறதாலா?
விமானத்தில் வருகிற குருட்டுப் பிசாசுகள்
பதுங்கு குழிகளில் பல்லாங்குழியாடும் தேசத்தில்
தாயைத் தவிக்கவிட்டு வந்ததனாலா?
நான் அனுப்பிடும் குரோணரைத் தின்னவும்,
வழித் துணையாய் அதை அழைத்துச் செல்லவும்,
சிறீலங்காவின் கொலை விமானங்களை
குரோணர்களாலே அடித்து விரட்டவும்
குரோணர்களாலே தலைக்குமேலே
குண்டு துளைக்காத கூரைகள் போடவும்
அறியா என் தாய் அகதி முகாம்களில்
சீரழிகின்ற சேதி கேட்டதனாலா?
வாழும் என் விருப்பைத் தேயிலைக் கொழுந்தாய்
கிள்ளிச் செல்கின்ற துயர் எத்துயரோ?
உருளைக்கிழங்குபோல் இயக்கமில்லாதெனை
இரு எனச் சொல்கிற துயர் எத்துயரோ?
- வ. ஐ. ச. ஜெயபாலன்
நன்றி: ஒரு அகதியின் பாடல்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21