Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தனிமை கவிந்த அறை

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2000-01-01

தனிமை கவிந்த அறை

தனிமை கவிந்த அறை

- புதியமாதவி, மும்பை

தனிமை அறையின் மவுன மொழிகள்

தனிமையின் மவுனம் பிரபஞ்சத்தைப் பிளக்கும் வலிமையுடையது. தனிமையைத் தேடி ஓடும் மனிதர்கள் கண்டதில்லை தனிமையை காட்டிலும் கடலிலும். கைவீசி நடக்க இடமில்லாத மனிதர்களின் சாலையில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சக்கரங்களின் பற்களுக்கு நடுவில் சிக்கித் தவிக்கிறது தனிமையில் ஓர் ஜீவன்.

துணை தேடும் அன்றில் பறவையாய் உறவுகள் தேடும் காக்கையின் கரைதலாய் காலம் காலமாய் தன் குஞ்சுகளைக் காக்கைகளின் கூட்டில் பொறிக்கவைக்கும் இயலாமைக்காக ஏங்கித்தவிக்கும் குயிலின் பாடலாய் இங்கே ஒரு மனித ஜீவன் தனிமை கவிந்த அறையில்... தன் தாள்களைக் கிழித்து வாழ்வின் நாட்களைக் கடக்கிறது.

மாநகரச் சதைக்கோளத் தாக்குதலில் கைப்பிடியில் தொங்கிக் கொண்டு துணையற்ற தனிமையை விழுங்கி செரித்து,

ஒரு ராட்சச மிருகத்தைப் போல விழுங்க யத்தனிக்கும் பெருநகரப் பிசாசுவிடமிருந்து தப்பிக்க காத்திருக்கிறது கைநிறைய கவிதைப் பூக்களுடன் உரையாடல்களின் புல்வெளியில் உரையாடல்களின் தரிசனத்திற்காக.

'அனுபவங்களின் சாரத்தை உணர்த்துவதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதாக இன்றைய கவிதை வெளிப்படுகிறது' என்றாரே ராஜமார்த்தாண்டன்.. இவர் அறையிலும் அனுபவங்கள் வாழ்க்கையின் புதிய வாசல்களைத் திறக்கிறது.

காலங்களின் பயணங்களில் மின்ரயில்களின் பேரோசையில் இதுகாறும் கேட்க மறந்துவிட்ட தன்னிசையை அடையாளம் காணுகிறது.

' தொட்டிச்செடிகளின் சங்கீதம்
புரியாமல் போனது இக்காலம் வரையில்
அறிந்தேனில்லை ரயிலில் பாடி யாசிக்கும்
சின்னஞ்சிறுமியின் குரலில் வழியும் தேனின்ருசி
கவனிப்பாரின்றி காற்றில் சிதறுகிறது
குழல் விற்பவனின் மூங்கில் கானம் '


'கவிதை ஒரு மோகனமான கனவு 'என்றார் புதுமைப்பித்தன். இவர் அறையின் கனவுகளில்தான் எத்தனை விதம் விதமான மோகனப்புன்னகைகள் முகம் காட்டுகின்றன.

முரண்களின் வழலில் மீறலும் சுகமாகும் கனவுகளில் நனவிலி மனதின் உருவமற்ற ஸ்பரிசத்தில் நேரம்போவது அறியாமல் நீந்தி விளையாடியதில் ஈரம் அழித்த கவிதைகளின் நடுவே புதியக்கவிதைகளுக்காய் காத்திருக்கிறது மாநகரத்தின் மனிதக் கொக்குகள்.

வயிற்றுக்கும் மனசுக்குமிடையே அல்லாடும் மனசின் கதை மனித வாழ்க்கையில் புதிய கதையுமல்ல புதியத்தடமும் அல்ல. பொருள்வழிப் பிரிவு என சொல்லிவைத்தார்கள் அகமும் புறமும் பாடிய நம் சங்ககாலத்து சான்றோர்கள். பிரிவும் தனிமையும் கவிதை அறியாத அறிவியல் கணிதங்களையும் கவிதை எழுத வைத்தக் கதை கற்பனையின் ராஜ்யமல்ல. அப்படியிருக்க, நெருப்பில் காய்ச்சிய செம்பழுப்பு சூரியனை தனிமை கவிந்த அறையில் சிறைப்பிடிக்க நினைக்கிறது காலம்.

காலத்தை தன் கவிதைகளால் எட்டி உதைத்து கவிதையின் திசைகாட்டியாய் சன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டு எட்டிப்பார்க்கிறது கவிதைகள் மிதக்கும் பால்வீதியை வழிதவறி வடக்கே வந்துவிட்ட தெற்குவானத்தின் துருவநட்சத்திரம்.


கவிஞர் அன்பாதவனின் முந்தைய கவிதைகளிலிருந்து விலகி நிற்கிறது தனிமை கவிந்த அறை. கவிதைக்குப் பல முகங்கள், பல குரல்கள். கவிஞனின் வாழ்க்கைப் பின்ணணி,
வழல், காலம், வயது எல்லாம் சேர்ந்து கவிஞனின் முகத்திற்கு முகம் கொடுக்கிறது.

மாநகரம் மும்பை தனிமையின் தொட்டில்களை மட்டுமே ஆட்டுவதில்லை. 100 கோடி செலவில் வேடிக்கை விருந்துகள் இந்த வெளிச்சத்திற்கு நடுவில்தான் 100 பைசாவுக்கு கடலை விற்கும் கனவுகளுடன் சிறுவனும் நடக்கிறான். தனிமை என்ற பெருநகரச் பிசாசை விரட்டி, வதம் செய்து இந்த மாநகரத்தின் எல்லா அறைகளுக்குள்ளும் எட்டிப் பார்க்க வேண்டும் செம்பழுப்பு சூரியனின் வெளிச்சம்.

வாழ்த்துகளுடன்,
புதியமாதவி,
மும்பை 400 042.
14.02.06

அறையின் எதிரொலி:

தனிமை கவிந்த அறை
அவனுக்கு கவிதையின் மகுடம்!
அவளுக்கு...?


பி.கு: கவிஞர் அன்பாதவனின் 'தனிமை கவிந்த அறை' கவிதை தொகுப்புக்கு வழங்கியிருக்கும் அணிந்துரை.

Image removed.
நூல் வெளியீடு: அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்,

சென்னை 11.
பக்: 96, விலை: ரூபாய்: 40


Comments

Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

புதிய விமர்சனங்கள்

விலகிச் செல்லும் பாதை
இதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்
இந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube