நான் நீ
---- பட்டுக்கோட்டை தமிழ்மதி
நீ
பூச்செடியைப் பார்த்தாய்
நானும் பார்த்தேன்
பூத்திருந்தது பூ.
நீ
வாசலைப் பார்த்தாய்
நானும் பார்த்தேன்
படர்ந்திருந்தது கோலம்.
நீ
வானத்தைப் பார்த்தாய்
நானும் பார்த்தேன்
சிவந்திருந்தது அந்தி.
நீ
கொடியைப் பார்த்தாய்
நானும் பார்த்தேன்
காய்ந்திருந்தது கைகுட்டை.
நீ
சாளரம் பார்த்தாய்
நானும் பார்த்தேன்
நின்றிருந்தது நேற்றைய ஞாபகம்.
நீ
மரத்தைப் பார்த்தாய்
நானும் பார்த்தேன்
கிளையிலிருந்தது கூடு.
நீ
என்னைப் பார்த்தாய்
நானும் பார்த்தேன்
மண்ணிலிருந்தது உன் கண்.
அப்போதும்
உன் கண்ணிலிருந்தேன் நான்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-09-18