en thaaimozhi
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-19 00:00

என் தாய்மொழி

என்னைத் தாலாட்டிய மொழி
எனதருமைத் தாய் மொழி
என் இனிய தமிழ் மொழி
எண்ணமெல்லாம் நிறைந்த மொழி

என்னை நான் தொலைத்த போது
என்னுள்ளே புதைந்த போது
எண்ணெய் ஆக மிதந்து என்
எண்ணங்களை ஒளிரச் செய்த மொழி

இதயத்தின் நாளங்கள் முஹாரி மீட்டினாலும்
இனிமையான கல்யாண ராகம் பாடினாலும்
இதயத்தின் வலி மறக்க உதவும் மருந்தாய்
இனிய என் தாய் மொழி என்றும் என்னுடனே

முகமிழந்து போனாலும் இக்கொடிய உலகில்
முதுமையில் வீழ்ந்து அமிழ்ந்து போனாலும்
முகவரி இழக்காது இலக்கிய உலகில்
முத்தாக மிளிரச் செய்யும் இனிய மொழி

கம்பன் என்றொரு கவிஞனும்
கர்ஜித்த பாரதி என்னும் புலவனும்
கருதுமிழ்ந்து கவிதை தந்த பாரதிதாசனும்
கண்ணதாசன் என்னும் கவியரசனும்

எப்போதும் அணைத்துக் கொண்ட மொழி
எப்பொழுதும் கவிபாடிக் களித்த மொழி
என்னுடல் கருகிச் சம்பலாகினாலும்
என் சம்பலோடு பூத்து கமழ்ந்திருக்கும் தமிழ் மொழி

-சக்தி சக்திதாசன்,இங்கிலாந்து

- சக்தி சக்திதாசன், 2008-02-19
என‌து தாய்மொழி
===============

வ‌ட‌மொழி ய‌டைத்த‌ மாம‌றைக் க‌த‌வினைத்
திட‌முட‌ன் திற‌ந்த‌ தேன்மொழி என‌து!

மும்மையை யுண‌ர்த்தி முப்பொருள் காட்டும்
செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் என‌து!

பொல்லாப் பிள்ளையி ன‌‌ருளினால் ந‌ம்பிமுன்
தில்லையிற் க‌ண்ட‌ திருமொழி என‌து!

ஆறுசேர் ச‌டையா ன‌வைமுன‌ம் அணிபெற‌
நீறுசேர் சேர‌ர் நிக‌ழ்த்திய‌ தீந்த‌மிழ்!

த‌த்துவ‌ம் யாவும் த‌மிழ்மொழி யுண‌ர்த்த‌லால்
ச‌த்திய‌ஞ் செய்வேன் என்தாய்மொழி அதுவே!

> கிரிஜா ம‌ணாள‌ன்
திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ‌க‌ம்.

- கிரிஜா மணாளன், 2008-02-19
நம்
தமிழ்த்தாய்
தாய்ப்பால்
தந்து கொண்டுள்ளாள்
பல அரசியல்வாதிகளுக்கு
வயிறு முட்ட.

- வீ.விஷ்ணுகுமார்,
134/61பி,சின்ன மாரியம்மன் கோயில் தெரு,
கிருஷ்ணகிரி - 635001

- வீ.விஷ்ணுகுமார், 2008-02-19
என் தாய்மொழி
---------------

என் தாய்மொழி எதுவாகவும்
இருந்து விட்டுப் போகட்டும்
எனக்குக் கவலையில்லை
தமிழன் என்று சொல்லி நான்
பெருமை கொள்வதை விட
முதலில்
மனிதனாய் வாழ்ந்துகொள்ள
பழகிக் கொள்கிறேன்

-எதிக்கா, கனடா
 

- எதிக்கா, 2008-02-20
என் தமிழ் மொழி.

அன்புப் பெற்றோர் ஆசையாய்க் குலவி
என்பிலும் உறைய ஊற்றிய மொழி
என் தமிழ் மொழி மனதில்
தேன் பாய்ச்சும் தினம்தினமாய்.

திக்குத் தெரியாத காட்டிலும் மனம்
பக்குப் பக்கென அடித்த போதும்
பக்க பலமாய் மரக்கலமாய் நான்
சிக்கெனப் பிடிக்கும் என் தமிழ் மொழி.

பிற மொழிக் கடலில் நான்
நிற பேதம், பல பேதத்தில் புரளும்
திறனற்ற பொழுதிலும் என் தமிழ்
பிறர் உதட்டில் தவழ்ந்தால் மனமுரமாகும்.

கைகாட்டி, நீர்த் தெப்பம், வாழ்வின்
வழிகாட்டி என்று என்னை நிதம்;
தாலாட்டி மகிழ்வில் தினம்
சீராட்டும் என் தமிழ் மொழி.

கூன் விழாத மொழி, புலத்தில்
ஏன், வீணென்;பாரும் உண்டு. – முதுகு
நாண் போன்ற தமிழ் தமிழனுக்கு.
தன்மான அடையாளம் என் தமிழ் மொழி.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-02-2008.

- வேதா. இலங்காதிலகம், 2008-02-22
தென்பொதிகை பிறந்த மொழி
தென்பாண்டி வளர்ந்த மொழி
தேனினும் இனிய மொழி
தெவிட்டாத செந்தமிழ் மொழி

அமிழ்தினும் இனிய மொழி
ஆண்டாண்டுகளாய் வாழும் மொழி
அன்னை மடியை விஞ்சும் மொழி
அனைத்து என்னை மகிழும் மொழி

-ஜான் பீ. பெனடிக்ட்

- ஜான் பீ. பெனடிக்ட், 2008-02-25
இசைக்கு ஏற்றார் போல்
இசைந்து செல்லும் வார்த்தைகள்.
பசை கொண்டு ஒட்டியது போல்
பதிந்து விடும் அர்த்தங்கள்.

இனிமை ஒன்றையே ஏந்தி வரும்
இயல்பில் கனியான எம் தாய்மொழி,
இனியும் செழித்திருக்க
அறிவியல் வளர்ச்சியோ டிணைந்து,
அதிகமாய் வளர வேண்டும்.

-சித. அருணாசலம்

- சித. அருணாசலம், 2008-02-26
எனது தாய்மொழி
================

எனது இன்பத் தாய்மொழி
மனது நிறையும் இனியமொழி

கன்னல் போல் இனித்திடும்
களிபே ருவகை அளித்திடும்
மூவேந்தர் போற்றி வளர்த்தமொழி
முக்கண்ணன் பெருமை பேசுமொழி

இனிமை கூட்டும் இன்பமொழி
இளமை காக்கும் அருமைமொழி
துன்பம் போக்கும் துடிப்புமொழி
நன்மை விளைக்கும் நற்செம்மொழி

இதயத் தெழுந்த உண்மைமொழி
இனிமைத் தமிழே நீவாழி!

> க‌விஞ‌ர் அ.கௌத‌ம‌ன்
திருச்சிராப்ப‌ள்ளி
த‌மிழ்நாடு.

- அ.கௌத‌ம‌ன், 2008-03-03
துள்ளி வ‌ருகுது வேல்!
தூர‌ப்போ! த‌மிழ்ப்ப‌கையே தூர‌ப்போ!

-ருத்ரா

புற்றீசல்களின் புயல்!
புதுக்கவிஞர்களின்
படைக்கு இது தான்
இங்கே பெயர்.

அந்துப்பூச்சிகளாய்
வெள்ளைக்காகிதங்களை
அரித்து தின்னுவதை விட
வேறு என்ன வேலை.
"எமக்குத் தொழில் கவிதை"
என்று மீசை முறுக்கிக்கொண்டு
கவியரங்கங்களுக்கு
காவடி எடுக்க‌
நாங்கள் தயங்கியதே இல்லை.
தேவபாஷைகளும்
அந்நிய லேங்குவேஜுகளுமே
அந்த‌க் காவ‌டிக‌ள்.

இமயமலை கட்டுவதாய்
எண்ணிக்கொண்டு
வாக்கியங்களை
அடுக்கிக் கொண்டே போவோம்.
இறந்த உடலுக்கு
வெட்டியான் அடுக்கும்
வரட்டிகளில் கூட
உயிர் தூவிக்கிடக்கும்.
நாங்கள் அடுக்கும்
சொற்கூட்டங்களிலோ
மன விரிசல்கள்
வாய் பிளந்து கிடக்கும்.

எருக்கம் பூக்களில்
மல்லிகைகளின் முகவரிகளை
தேடிக்கொண்டிருப்போம்.
ஒரு தென்னை மரத்தின் நிழல்...
ஒரு மைனாக்குருவியின்
கீச்சுக்குரல்கள்....
நீர்க்குமிழிகளில்
எங்களுக்கு மட்டுமே தெரியும் சில
நீல நயனங்கள்...
என்றெல்லாம்
பேனாக்களில்
கூடு கட்டிக்கிடப்போம்.

ஒன்றுமே இல்லாத
மௌனத்தை
உருட்டிப்பிசைந்து
ஒரு பேய் வீடு கட்டி
குடியிருப்போம்.
நிழல்களின் பசியெடுத்து
நிழல்களையே தின்று
நிஜத்தின் கல்லறை மேல்
நீண்டு படுத்திருப்போம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்

தொன்மை தோய்ந்த
வரலாறுகள் செறிந்த
சதைப்பிடிப்பான மொழியைக்கூட
தாய்மொழி என்ற
ஒரே காரணத்திற்காக
தள்ளிவைத்துவிட்டு
சிந்தனை வறண்ட பின்னே
அந்நிய மொழிமோகத்தில்
வெறும் எலும்புக்கூடுகளின்
சித்திரத்தை சமைத்துவைத்து
அவார்டுக்காக
அருந்தவம் கிடப்போம்..

வாழ்க்கையை
சாவு என்று
அர்த்தப்படுத்திக்கொள்வோம்.
மரணத்தை
இனிமையான
ஜனனம்
என்று கவிதை படைத்திடுவோம்.
நீங்கள் அழுது காட்டுவதை
நாங்கள் எழுதிக்காட்டுவோம்.
கண்ணீரின் விழுதுகளில்
பிரம்மனின் தொப்பூள் கொடி
ஊஞ்சல் கட்டி வைத்திருப்பதாய்
மூளியான வரிகளில்
மூண்டெழுந்த கற்பனையை
தோரணம் கட்டி வைப்போம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.

தாய் மொழி...தமிழ் மொழி..
என்றெல்லாம்
பிதற்றிக்கொண்டிருக்க மாட்டோம்.
தாய்மொழியின் பேச்சை விட
வேற்று மொழிக்கூச்சல்களே
சூடாக இங்கு வியாபாரம் ஆகிறது.

"புரியவிடாமல் எழுதுவதில் தான்
"கிக்கே" இருக்கிறது.
தாயும் ஆனவன்" என்ற இறைவனை
"மாத்ரு பூதம்" என்று
பயங்காட்டி எழுதுதில்
எங்களுக்கு கொள்ளைப் பிரியம்.
பயமாய்
"புரியாமலேயே இருக்கிற
போதையே
இவர்களுக்கு "சாமி".
"தாமரைச்செல்வன்"
என்று ஆண்டவனை
அசிங்கமாகவெல்லாம்
அழைக்க மாட்டோம்.
"புண்டரிக நாதன்"
என்று அழகாய்
குரல் கொடுப்போம்.
நீங்கள் புரிந்து கொள்வதற்காக
நாங்கள் எழுதவில்லை.
புரியாமை என்னும் புதைமணலில்
நீங்கள்
புதைந்து கொண்டே இருப்பதற்கே
நாங்கள் எழுதுகிறோம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.

தலையை சிலுப்பிக்கொண்டு
நரம்பு புடைத்துக்கொண்டு
ஏதோ ஒரு
நட்சத்திரத்தைப்பிடுங்கி
தலையணை அருகே
நட்டு வைத்துக்கொண்டு.....
தூக்கம் வராத
மண்டையோட்டுக்குள்
மத்தாப்பு கொளுத்திக் கொள்வோம்.
மந்திர வாக்கியங்களில்
மண்டிக்கிடந்து....
சூன்யத்துள் சூளை வைத்து
எங்களைச் சுட்டெரித்துக்கொள்வோம்.
அந்த சாம்பலிலிருந்து
நாளையே
பீனிக்ஸாய் பறப்போம் என்று
பீலா விட்டுக்கொண்டு....
பிய்ந்து கிடப்போம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.

எங்கள் சொல்லாடல்களில்
புகைமூட்டம்
கவ்விக்கிடக்கும்.
காதல் பற்றி
எழுதும்போது மட்டுமே
எங்கள் பேனாக்களில்
மின்சாரம் பாயும்.
காதல் இல்லாவிட்டால்
இந்த சமுதாயம் கூட
எங்களுக்கு
ஒரு சவக்கிடங்கு தான்.
காதல் பரவசம்
காய்ந்து போன
முதியோர்களின்
முணுப்புகளை முணுப்புகளை
நாங்கள்
செவிசாய்ப்பதில்லை.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
.
காதலின் ஆவேசம் புரியாமல்
புதிய தலைமுறைகளோடு
மோத முடியாமல் ஒதுங்கிப்போகும்
நரைப்போன
கடல் நுரைகளே.
நொறுங்கிப்போங்கள்.
கிழச்சருகுகளே
நாங்கள் மின்னலின் கீற்றுகள்
ஈசிச்சேரில் அடைகாத்துகிடக்கும்
மரணப்பறவைகளே.
உங்கள் புலம்பல்களை
எங்கள் மீது
முட்டையிடவெண்டாம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.

உங்க‌ள்
ச‌ங்க‌த்த‌மிழ் எங்க‌ளுக்கு
ச‌ங்க‌ட‌த்த‌மிழ்.
த‌ர‌வு கொச்ச‌க‌ க‌லிப்பா என்றும்
க‌ழி நெடில‌டி ஆசிரிய‌ப்பா என்றும்
ம‌லை ப‌டு க‌டாம் என்றும்
நெடுந‌ல் வாடை என்றும்
க‌ட‌ முடா என்று
எங்க‌ள் ப‌ல்லை உடைத்துக்கொள்ள‌
நாங்க‌ள் த‌யார் இல்லை.
சினிமா ந‌டிகையின்
க‌ட்டுட‌லையே
எங்க‌ள் க‌விதைக‌ளால்
"க‌ட்‍அவுட்" ஆக்கி
அவ‌ள் ச‌ங்கு க‌ழுத்தை
ச‌ங்க‌த்த‌மிழாக்கி
"இடையில்" தெரியும் இடைச்ச‌ங்க‌த்தையும்
க‌டைக்க‌ண் காட்டும் க‌டைச்ச‌ங்க‌த்த‌யும்
க‌டைவிரித்து
பணம் காய்ச்சி மரங்களுக்கு
பதியம் போட்டுக்கொண்டிருப்பவர்கள்
நாங்கள்
ஏனெனில்
நாங்க‌ள் புதுக்க‌விஞ‌ர்க‌ள்

த‌மிழ் எழுத‌
என்ன‌ வேண்டும்?
பேனா வேண்டும்.

என்று
புதுக்க‌விதை எழுதுப‌வ‌ர்க‌ள்
நாங்க‌ள்.
அத‌னால்
வேண்டாம் எங்க‌ளுக்கு த‌மிழ்.

தமிழையே
நக்கிக்கொண்டிருக்கும்
நாய்கள் அல்ல நாங்கள்.
ஒற்றைக்காலைத்
தூக்கிக்கொண்டு
ஒவ்வொரு
விள‌க்கு க‌ம்ப‌மாக‌
இருட்டைத் தேடித்
திரிபவையே நாங்க‌ள்.

தாய்மொழி என்றால்
நாய்மொழி தான்
இவைகளின் ஞாபகத்துக்கு
வருகின்றது

இவைகளின் க‌ழுத்துச்ச‌ங்கிலியை
கையில் பிடித்து வைத்திருக்கும்
தமிழ்ப்பகையே
தூரப்போ!
கண்ணுக்கு தெரியாமல் நின்று
எங்கள் கைகளையே கொண்டு
எங்கள் கண்களைக்குத்தும்
சூழ்ச்சிப்புகையே
தூரப்போ.
துள்ளிவ‌ருகுது வேல்
தூர‌ப்போ.
த‌மிழ்ப்ப‌கையே...நீ
தூர‌ப்போ!

=ருத்ரா

- ருத்ரா, 2008-03-14

இனியாவது.........

சாதிப் பேய்கள் ஒழியட்டும்
சமத்துவம் எங்கும் மலரட்டும்
நீதி உலகில் நிலக்கட்டும்
நிதியும் பொங்கிப் பெருகட்டும்
ஆதியில் வந்தது தமிழ் தானே
பாதியில் வந்தன ஓடட்டும்
மீதி உள்ள வாழ்நாளில்
மனித நேயம் மலரட்டும்

-முனைவர் .இரா.குணசீலன்.எம்.ஏ.எம்.பில்.பி.எச்.டி.
தமிழ் விரிவுரையாளர்.
கே.எஸ்.ஆர்.கலை அரிவியல் கல்லூரி.
திருச்செங்கோடு.நாமக்கல் மாவட்டம்.
தமிழ்நாடு.இந்தியா.

- இரா.குணசீலன், 2008-04-24
என் உயிர் மொழி
காலம் கடந்த வரலாறு
கவிதை தொடங்கிய வரலாறு
ஞாலம் வியக்கும் வரலாறு -எம் தமிழ் மொழியின் வரலாறு

மாந்த இனத்தின் முதல்மொழி
மண்ணில் பிறந்த முதல்மொழி
ஏந்தும் இலக்கண முதல்மொழி
எழுச்சி இலக்கிய முதல்மொழி

சொற்கள் கிடக்கும் சுரங்கமொழி
சோதி மிக்கப் புதியமொழி
நிற்கும் வளமை நிறைமொழி
நீண்ட வரலாற்று பெருமைமொழி

மு.பாலசுப்பிரமணியன்
(பரிதியன்பன்)
புதுச்சேரி
இந்தியா

- மு.பாலசுப்பிரமணியன், 2008-04-24
தாய்மொழி...

பாலூட்டும்போது நீ
பல்லால் கடிக்கையில் அன்னை
சொன்னதும்,
பால்குடித்தபின் பிள்ளைநீ
சொன்னதும்-
அம்மா...
அதுதான் உன்மொழி-
அமுதத் தாய்மொழி-
தமிழ்மொழி...!

-செண்பக ஜெகதீசன்
இந்தியா

- செண்பக ஜெகதீசன், இந்தியா, 2008-05-27
மூச்சுப்பரப்பி முதலில் சொன்னதும் 'அ'தான்

முதலில் பார்த்ததும்
என் 'அன்னையை' தான்

தாலாட்டு கேட்டதும்,
பார் எங்கும் உயர்ந்திட
படித்ததுவும் என்

தாய் மொழியில் தான்
இனிய தமிழ் மொழியில் தான்

- ஆன் மைக்கல்

- ஆன் மைக்கல், 2008-07-27
என் தாய்மொழி

எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே

என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே

கன்னித் தமிழாம் கனியின சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்

இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24

- புலவர் சா இராமாநுசம், 2011-05-26
என் தாய்மொழி

தங்க தமிழே தரணி புகழ் செம்மொழியே

தென்றல் தேரேற்றி உன்னை அழைத்து வரும்
தேவர் குலம் சேர்ந்து வந்து வாழ்த்துரைக்கும்
மின்னல் அழகே மிளிர்கின்ற மென்தமிழே
கன்னல் கரும்பாய் காதி்ல் இனிக்கின்ற
கவிதை பல கோடி தந்தாய் வாழ்த்து
தங்க தமிழே தரணி புகழ் செம்மொழியே
கவி சொல்லும் அரங்கில் நிறைவாய்
கற்றோர் கைகளிலே என்றும் தவழ்வாய்
பண்ணிசையாய் நெஞ்சம் குழைப்பாய்
பாமர மக்கள் பாடும் நல்லிசையாய் நிறைவாய்
மேகலையாய் சிலம்பாய் அணிசெய்தாய்
திருக்குறளாய் திகழ்ந்தாய் தித்திக்கும் தேவாரமாகி
எத்திக்கும் ஒலித்தாய் செந்தமிழே இன்று கணனி ஏறி
கலக்குகின்ற மின்தமிழே என்தமிழே
என்றும் மாறா இளமை பூண்டு
கவிஞர் வார்த்ததையிலே நின்று வளர்.

சிறீநிதி

- சிறீநிதி, 2013-09-06
மண்ணில் பிறந்த
முதல் மொழி
நம் தாய் மொழிஂ
தமிழ் மொழிஂ

-அ.திருநாவுக்கரசு

- அ.திருநாவுக்கரசு, 2015-08-04
முதல்மொழியாம் மூத்தமொழி
முத்தமிழை எடுக்கிறேன்!
என் அன்னையூட்டிய பாலுக்கு
சீரணமாய் என்
கவிதையைத் தொடுக்கிறேன்.
மூன்றெழுத்துக் கவிதை தமிழ்,தங்கத்தேரில் இழுத்து தரணியில் அமரச்செய்தவன் எம் பாரதி,தமிழைத் தாலாட்டியவன் திருவள்ளுவன்.

-க.பாலசந்தர்
இந்தியா,தமிழ்நாடு

- க.பாலசந்தர்
தாயை அம்மா என்று அழைத்த போது ஆரம்பமானது எனது தமிழ்ப் பயணம்.,தகப்பன் சொன்ன சிறு சிறு கவிதைகளில் விரும்பினேன் என் தமிழை.,.ஆசான் கற்பித்ததில் அறிந்தேன் என் தமிழின் பெருமையை,தமிழுக்கும் அமுதென்று பேர்.....இன்று நான் சொல்லுவேன் தமிழுக்கு உயிர் என்று பேர் அந்த உயிர் போய்விடில் இந்த உடலுக்கு சவம் என்று பேர்!

-சின்னராசு,இந்தியா

- சின்னராசு
வேலவன் தந்த மொழி
வேலுபிள்ளை பிரபாகரனை உருவாக்கிய மொழி
அன்னை தந்த அன்பு மொழி
தந்தை தந்த அறிவு மொழி
ஆசியா வரை ஆண்ட சோழனின் வீரமொழி
ஆயிரம் ஆண்டு கடந்து நிற்க்கு தஞ்சை கோயில் தமிழ் கட்டிடகலைக்கு சான்றாக நின்ற மொழி
வாரலாறே உருவாக்கிய மொழி
பல வரலாறு கண்டமொழி
நாகரிகத்தை உலகுக்கு தந்த மொழி
குருதி வழிந்தோடும் வரை போராடும் எங்கள் வீரம் மிக்க தேசமொழி என் தமிழ் மொழி
என் குடும்பவாரிசு மூத்தவளின் பெயர் இனிய மொழி

-வை அ கணேசன் தெற்குமல்லூர் நெய்வேலி

- வை அ கணேசன்
தாய் தந்தையை காட்டிய மொழி
தத்துவம் பல கண்ட தனி மொழி
அறிவியல் கண்ட அன்பு மொழி
யாருக்கும் விளங்கும் எளிய மொழி
உடல், உயிர் கொண்ட உன்னத மொழி
புலவர் பாடிய புனித மொழி என் தாய் மொழி தமிழ் மொழியே
- சுகந்தன் இலங்கை, 2016-03-28
தமிழ் வாழ்க என்பதற்கு
தமிழ்த்தாய்
அழிவை நாடவில்லை..
தமிழன் ஓர் வரம்...

மனோஜ்

- மனோஜ், 2016-03-28

Share with others