பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-16 00:00

தண்ணீர்!
=======

தானாய் நிரம்பி வழிகிற நீரில்
நடத்துகிறோம் வாழ்க்கை,
அதற்கும் வழியில்லையென்றால்
தள்ளுகிறோம் நாக்கை.
நனைக்கவாவது
நீர் தேவையென‌ வேண்டுகையில்
வாய்திற‌க்கின்ற‌ன‌
அர‌சும், ஆகாய‌மும்...
எங்க‌ள் உயிரைக்
குடிப்ப‌த‌ற்கு!

> க‌விஞ‌ர் ஆங்க‌ரை பைர‌வி
இலால்குடி, த‌மிழ்நாடு

- ஆங்க‌ரை பைர‌வி, 2008-04-16
த‌ண்ணீர்

ஆலை பூத‌கிக‌ள்
பாலைப் பீச்சுவ‌தால்
நாறும் ஆறுக‌ளில்
ஜீவ‌ன் ஏதுமில்லை.
தேச‌ம் தாண்டுகின்ற‌
சாய‌த்துணிக் க‌ழிவால்
ந‌தியில் மீன்க‌ளில்லை
நாளை....
ந‌திக‌ளும் இல்லை!

> க‌விஞ‌ர் இள‌ங்கும‌ர‌ன்
திருச்சிராப்ப‌ள்ளி
த‌மிழ்நாடு.

- இள‌ங்கும‌ர‌ன், 2008-04-18
த‌ண்ணீர்

பாக்கெட்டில் பாலும்
பாட்டிலில் வாட்ட‌ரும்
ஃபாஸ்ட் ஃபுட்டும் சாப்பிட்டு
கான்கிரீட் சிறைக‌ளில் வாழும்
கார்டு ஹோல்டர்கள்
ரிங்க் டோனில் கேட்கிறார்க‌ள்
ந‌தியின் கீத‌ம்.

> க‌விஞ‌ர் இள‌ங்கும‌ர‌ன்
திருச்சிராப்பள்ளி
த‌மிழ்நாடு

- இள‌ங்கும‌ர‌ன், 2008-04-18
தண்ணீர்!

நீரே! உல‌கில் முக்கால் பாக‌ம்
நீதான்!
ஆயினும்
நீ கிடைக்க‌வில்லை என்றுதான்
உல‌க‌மே மூக்கால் அழுகிற‌து!

வாய்க்கால், குளம், குட்டை
வ‌ற்றாத‌ நதி, கடல் என்று
உன‌க்குப் ப‌ல‌ முக‌ங்க‌ள்.

ஆத‌வ‌னின் வெப்ப‌ அணைப்பில்
ஆர்வமாய் க‌ருவுற்று
மேக‌ங்க‌ளைப் பிர‌ச‌வித்து
வேக‌மாய் நீ ம‌ண்ணில் குடிபுகுவாயென‌
தாக‌மாய் நாங்க‌ள் இங்கு
சோக‌ச்சூழ்நிலையில்!

நீ குதித்தால் அலை!
கொதித்தால் சுனாமி!

அணைக்க‌ட்டுமா என்று நீ
எங்க‌ளை நோக்கி
ஆவ‌லோடு வ‌ரும் வ‌ழியில்
அணைக்க‌ட்டுக்க‌ளைக் க‌ட்டி
உன்து
ஆசையையும், பாச‌த்தையும்
கெடுக்கிறார்க‌ள்
அண்டை மாநில‌த்தார்!

வானிலிருந்து நீ
வாராத‌ ப‌ருவ‌த்தில்
தானாய் எங்க‌ள் விழிக‌ளில்
தாரைத் தாரையாய் க‌ண்ணீர் ம‌ழை!

ம‌லையில் பிற‌ந்து, ந‌தியில் ஓடி
க‌ட‌லில் ச‌ங்க‌மிக்கும் நீ
ம‌னித‌ர்க‌ளின் உண‌ர்வுக‌ளில்
ச‌ங்க‌மிப்ப‌து எப்போது?

வான் பொய்த்தாலும் தான் பொய்க்கா
வ‌ற்றா அன்னை எங்க‌ள் காவிரியை
வாழ‌வைக்கும் வ‌ர‌ம் உன் கையில்!

நீரின்றி அமையாது இவ்வுல‌கு!...அந்த‌
நினைவிருந்தால்
எங்க‌ளோடு குல‌வு!

> கி. ந‌ட‌ராச‌ன் ('தேவ‌கி மைந்த‌ன்')
திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ்நாடு.

- கி. ந‌ட‌ராச‌ன் (\'தேவ‌கி மைந்த‌ன்\'), 2008-04-18
"ஒகேன‌க‌ல்"
-
ருத்ரா

ஒகேனகல் நீர் அருவி
தீப்பற்றி எரிவது போல்
கர்நாடகத்து சில வெறியர்கள்
துர்நாடகம் நடத்தும் காட்சிகள்
நம்மை கவலையுற வைக்கின்றன.

ஓட்டுப்பெட்டிக்குள்
குறிவைக்கும் அம்புகள்
வீட்டுக்குள்ளும் வந்து
குத்தி துளைக்கின்றன.

நாம் தான் இன்னும்
"காவிரி"த்து பூவிரித்து வரவேற்கிறோம்
அவர்கள் தான் இன்னும்
"காவெறி"யை நீருக்குள் எல்லாம்
இரத்தமாக்க நினைக்கிறார்கள்.

பிர‌ச்னையின் மீது
"எரியூற்ற‌ப்பா" என்று சில‌
எடியூர‌ப்பாக்க‌ள்
விஷ‌ம் க‌க்கிக்கொண்டிருக்கிறார்க‌ள்.

த‌மிழ்..க‌ர்நாட‌க‌ ச‌கோத‌ர்களேர்
நேச‌மும் ச‌மாதான‌மும் உறுதிகொள்ளுவ‌த‌ற்குப‌தில்
இந்திய‌ ஒருமைப்பாடு எனும் க‌யிற்றில்
எத‌ற்கு இந்த‌ "க‌யிற்று இழுப்பு போட்டி"?

ஒகேன‌க‌ல் என்றால்
புகைபோல் விழும் நீர் தான் அழ‌கு.
ப‌கையை நீர்வீழ்ச்சி யாக்க‌லாமா
சொல்லுங்க‌ள்.
இது நீர்வீழ்ச்சி ய‌ல்ல‌
மானித‌ நேய‌த்தின் பெரு வீழ்ச்சி!
கை குலுக்கிக் கொள்வோம் வாருங்க‌ள்
ச‌கோத‌ர்க‌ளே! ச‌ண்டையில் உண்டிய‌ல்
குலுக்கிக்கொள்ப‌வ‌ர்க‌ள்
குலைந்து ஓட‌ட்டும்...
வ‌ர‌ட்டுத்த‌ன‌மான‌ இந்த‌
வ‌ர‌லாற்றுப்ப‌கையை
விர‌ட்டிய‌டிப்போம் வாருங்க‌ள்!

-ருத்ரா
(இ.ப‌ர‌ம‌சிவ‌ன்)

- ருத்ரா, 2008-04-19

நிறமற்றும் மணமற்றும் நீரி ருக்கும்
...நிம்மதியும் அதனாலே தானி ருக்கும்
உறவென்றால் மாந்தரெலாம் உறவு மாகும்
...உண்மையிலே படைத்தவனும் ஒருவன் தானே!
இரக்கத்தின் இரத்தங்கள் ஓடா உள்ளம்
...இயன்றவரை தனக்கென்றே எண்ணிப் பார்த்து..
சுரக்கின்ற சுயநலத்தின் சாயம் சேர்க்க..
சூழ்ந்திருக்கும் தண்ணீரில் நிறமும் நாற்றம்!!

- இப்னு ஹம்துன்
இந்தியா

- இப்னு ஹம்துன், 2008-04-19
நீர்
உயிர் இயக்கத்தின் ஆதாரம்
நிலத்தின் அடியிலும்
கிடைக்கும் மூலாதாரம்.

நன்னீரைத் தொலைத்து
கண்ணீரில் கரையும்
மாந்த இனம்.

இயற்கையின் போக்கை மாற்றி
இரண்டகம் செய்யும் மனிதர்
வன்முறை

வெள்ளமும் வறட்சியும்
விரட்டிடும் தேசம்
இந்தியா

நீருக்காய் போர்
நீண்ட நாட்களில்லை
விரைவில்

தண்ணீரைக் காத்திட
தேசம் கடந்து
கை கோர்ப்போம்

மு.பாலசுப்பிரமணியன்
புதுச்சேரி

- மு.பாலசுப்பிரமணியன், 2008-04-24
உலகம் காய்ந்துவிட்டதே!
எல்லோரும் மழைக்காகக் காத்திருக்கிறார்கள்.
வரட்டும்!
தண்ணீர் இல்லாமல்
கிணற்றுத் தவளைகள்கூட
கதறுவதில்லை!
மனிதர்கள் மட்டும்
ஏன்?

-பாலமுருகன்
மலேசியா

- பாலமுருகன், 2008-04-24
தண்ணீர்.

நின்று விழுந்தால் அருவி
படுத்துப் படர்ந்தால் ஆறு.
பாய்ந்து சீறினால் வெள்ளம்.
கிணற்றிலே உனக்குள் அமைதி.
கடலிலே அடங்காத ஆர்ப்பரிப்பு.

புதிராக இருக்கும் எங்கள்
புதுமைப் பெண்களைப் போல்
ஆழம் அதிகமாக உனக்குள்
அழுத்தம் அதிகரிக்கும்.

வெளூத்ததெல்லாம் பாலாக
நம்ப வைக்கும் மேற்பரப்பு உனக்கு-இதிலே
வெகுண்டெழுந்து அழிக்கின்ற
வெம்பிய மனநிலை எதற்கு?

பள்ளத்தைப் பார்த்து பாய்வதும்,
மேடுகளுக்குள் அடங்கிச் செல்வதும்,
இளைத்தவர்களை ஏறி மிதிக்கும்
இழிநிலையை நினைவுபடுத்துகிறது.

அளவாய் வந்து அள்ளித் தந்து
வளம் ஒன்றையே வாழ்க்கையில் வைத்து
கவலைகளைக் களைய வேண்டுமென
கோரிக்கையை உள்ளம் கொண்டிருக்கிறது.

-சித. அருணாசலம்
சிங்கப்பூர்.

- சித. அருணாசலம், 2008-05-03
தண்ணீர்...

தண்ணீர் கூட
அரசியலாகிவிட்டதேயென
ஆண்டவன்
அழுத கண்ணீர்-
மழையாக...!

- செண்பக ஜெகதீசன், 2008-05-14
அரசியல் கழிவு
கலக்காத வரை
தூய்மையாக இருந்தது
ஆறு.

வீ.விஷ்ணுகுமார்

- வீ.விஷ்ணுகுமார், 2008-05-30
நதி
==
மழையே !!!
என்னை நிரப்பி விடு.
வான மகள்
தன் முகத்தை
பார்த்து மகிழட்டும்.

முருகன் சுப்பராயன்
மும்பை

- முருகன் சுப்பராயன், 2008-06-20
மனித நேயம்
அரசியல் சட்டம்
நடுவர் மன்ற தீர்ப்புகளுக்கு
தலை வணங்காத
அரசியல்வாதிகள்
தலைக்குனிய,
தலை நனைந்து,
நெஞ்சில் ஈரம் கசிய
வா மழையே வா....

முருகன் சுப்பராயன்
மும்பை

- முருகன் சுப்பராயன், 2008-06-20
ஐம்பூதங்களில்
ஒன்று நீர்...
நீரின்றி
நீயுமில்லை நானுமில்லை
நானிலமில்லை
மழை ஆறு கடல் குளம்
கிணறு இவ்வளவு இருந்தும்
பாக்கெட் தண்ணீருக்கு
பஞ்சம்
உழைத்து பணம் சேமிப்பதைப்போல்
குடிநீரையும் சேமித்தால்
பாக்கெட் நீருக்கு
பணம் தேவையில்லை
நீர் மனிதனின் உயிர்
நீர் சேமித்து
உயிர்காப்போம்....!

-கிளியனூர் இஸ்மத் துபாய்

- கிளியனூர் இஸ்மத், 2008-09-15
தண்ணீர்

இறைவனின் வரமாய் பெய்த மழை
வெள்ளமாய் பாய்ந்தது
சென்னை சாக்கடையில்
-அரவிந்த் சந்திரா
{ அடையாள எண்:352 }

- அரவிந்த் சந்திரா, 2009-01-26
த‌ண்ணீர்

விண்மீது வலுவாக கருத்தமேகம்-அட
வீசுகின்ற காற்றோ புயலின்வேகம்
மண்ணீரம் அணுவளவு காயவில்லை-ஆனால்
மழைமட்டும் பொழிகிறது ஓயவில்லை
தண்ணீரும் வெள்ளமென பெருகியோட-அது
தரைப்பாலம் தெரியாமல் நன்குமூட
கண்பாலம் எங்ககேயென அறியவேண்டி-சில
கம்பங்களை நட்டாரோ குழியும்தோண்டி

கரைதாண்டி செல்கின்ற வெள்ளமூரே-எங்கும்
காணாமல் அழித்திடும் தடுப்பார்யாரே
முறைதாண்டி இதுபோல ஈழப்போரே-நடத்தி
முடித்ததை உலகத்தில தடுத்தார்யாரே
இறைவாநீ எங்கேயோ இருக்கின்றாயா-சிங்கள ஈனரின் செயலதன்னை பொறுக்கின்றயா
மறையாது உடனிங்கே வந்திடுவாய்-ஈழம்
மலர்ந்திட வழிவகை தந்திடுவாய்

தண்ணீரில் வாழ்கின்ற மீனைப்போன்றே-நம்
தரைவாழும மீனவன் கடலில்சென்றே
கண்ணீரில் மிதக்கின்றான் நாளுமின்றே-அவன்
கண்ணீரைத் துடடைக்கின்ற நாளுமென்றே
அடித்தவன் வீட்டிற்கே மீண்டுமீண்டும-பேச
அடிமையா நாமங்கே செல்லவேண்டும்
கொடுப்பதை விடுத்தாலே போதுமவன்-கை
கும்பிட அவனிங்கே ஓடிவர செய்வீரா---?

புலவர் சா இராமாநுசம்
அரங்கராசபுரம் சாலை சென்னை 24

- புலவர் சா இராமாநுசம், 2011-02-27
த‌ண்ணீர்
காற்றது இட்டுச் செல்ல
மேகப் பெண்ணவள்
காற்றின் இசைக்கேற்ப
நடனமாடுகிறாளோ???
அந்த நாட்டிய அரங்கத்தில்
நீர்த் தோழியும்
மேக மங்கைக்கு துணையாய்
கைகோர்க்கிறாள்!!!
அற்புத நாட்டியத்தைக்
கண்டு கழிக்க அங்கே
வந்து விட்டான்-
வருண தேவனும்!!!
அண்ணலது வரவால்
குளிர்ந்தது - நானிலமெங்கும்!!!
நிறைந்தது - வாழ்வும் வளமும்!!!

பி.தமிழ் முகில்

- பி.தமிழ் முகில், 2011-11-30
தண்ணீர்!

தண்ணீரே உயிர்காக்கும் அரும ருந்து!
தண்ணீரே எவ்வுயிர்க்கும் தாய்ப்பால் ஆகும்!
தண்ணீரே ஈடில்லா உணவு மாகும்!
தண்ணீரே இயற்கையதன் உயிரா தாரம்!
தண்ணீரே இந்நிலத்தின் அரிய செல்வம்!
தண்ணீரை உடையவரே செல்வர் ஆவர்!
தண்ணீரே நம்வாழ்வும் வளமு மாகும்!
தண்ணீரே இறைதந்த வரமு மாகும்!

பன்னீரே ஆனாலும் பருகு தற்குப்
பார்மிசையில் ஒல்லாதே! அதனால் கொஞ்சம்
நன்னீரின் தேவைக்காய் நாளை இந்த
நானிலமும் சண்டையிடும்; நலிந்து சாகும்;
உண்ணீரின் தேவைக்காய்க் குருதி கொட்டும்;
உப்புவியர் வைசிந்தும்; உலரும் வாயும்;
தண்ணிரின் தேவைதனை நன்க றிந்து
தக்கவழி தனில்சேர்ப்போம் வீணாக் காதே!

-அகரம் அமுதன்

- அகரம் அமுதன், 2014-03-23
காற்றால்
கற்பழிக்கப்பட்ட
கருமேகங்களின்
கண்ணீர்..

-அதிரை தங்க செல்வராஜன்

- அதிரை தங்க செல்வராஜன், 2015-09-12

Share with others