போதும் போதும்…
---------------------
எல்லா ஆயுதங்களும்
என்னிடம் இருக்கட்டும்
என்றுதான்
எல்லாக் கடவுள்களும்
கையில் வைத்துள்ளன
கணிசமாய் ஆயுதங்கள் -
காத்துக்கொள்ள தங்களை…!
இருக்கட்டும் அவை அங்கேயே,
இந்த மனிதன் ஏன்
எடுக்கிறான் அவற்றைக் கையில் -
கடவுள்களைக் காப்பாற்றிடவா…!
மதமென்ற பெயரில்
மதிகெட்டு நிற்கும்
மனிதனே நீ
துதித்து நின்றால் போதும்
தெய்வங்களை,
தூக்கவேண்டாம் ஆயுதங்களை
தாக்கவேண்டாம் அடுத்தவரை
போக்கவேண்டாம் ஆவிகளை,
சிந்திய இரத்தம் போதும்
சிந்திப்பாய் நீயே…!
வேண்டாம் வேலிகள்…
எல்லைக் கோடுகள்
எப்போதும் ஆகின்றன
தொல்லைக் காடுகளாய்,
பிறப்பில் ஒன்றாய்ப் பிறந்தோம்,
பிரிந்து நிற்கிறாயே மனிதா
விரிந்த உலகில்
விதவிமாய்ச் சுவர்எழுப்பி –
நாடென்றும்..
இனமென்றும்..
இன்னும் என்னென்னமோ…!
மனிதனே நீ
பிரிவினையைக் கையிலெடுத்தால்
வருவது சண்டைதானே,
அதனால்
வேலிகளை அப்புறப்படுத்து,
அதனோடு
வேதனையையும்தான்…!
-செண்பக ஜெகதீசன்…
(www.geocities.com/vsnjag/)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-22