சிலேடை வெண்பாக்கள்! - (III)
01.
பம்பரமும், செக்கும்!
------------------------
ஓரச்சில் ஊண்றிச் சுழலுதலால்; கொண்டபொருள்
கூரச்சாற் தாக்கிக் குளைத்தலால்; -பாரப்பா
சாட்டைக்கே சுற்றுதலால் சாய்ந்தாடும் பம்பரம்
காட்டுமரச் செக்கின்நேர் காண்!
02.
பம்பரமும், பாம்பும்!
-------------------------
மூச்சிரையும்; நின்று தலையாட்டும்; முன்கோபப்
பாய்ச்சலிட்டே கொத்திப் பதம்பார்க்கும்; -பேச்சென்ன
வட்டமிடும் ஆகையால் பம்பரமும் நற்பாம்பும்
இட்டமுடன் நேரென் றிரு!
03.
ஆழியும், மாந்தரும்!
--------------------------
ஈகை குணமுளதால்; இவ்வுல காளுதலால்;
வாகாய் ஒலிசெயும்நா வாயுளதால்; -ஆகாயம்;
சாருதலால்; சாற்றுங்கால் உப்பிடுந் தன்னையால்
வாரிதிநேர் மாந்தர் வழுத்து!
04.
தோசையும், கோலமும்!
----------------------------
பெண்கள்கை போடும்; அரிசிமா கொண்டாகும்;
கண்கள்போற் புள்ளிபல காணுமதைத் -தின்றுபசி
தீர்க்கும் பலஉயிரும் என்பதனால் தோசையின்
நேர்கோலம் என்றே நவில்!
-அகரம்.அமுதா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-04