அதனால்தான்… அதுதான்…காதல் என்பது…
01.
அதனால்தான்…
--------------------
கண்ணாடி பார்க்கும் அழகை
ஒரு
கண்ணாளன் பார்க்க வராததால்
கண்ணாடியில்லாத ஜன்னலோரம்
கண்ணீருடன் காத்திருக்கிறாள்
அவள்
பெண்ணாய்ப் பிறந்ததை எண்ணி…!
02.
அதுதான்…
---------------
இது நடந்திடாவிட்டால்
இன்னொன்று சேர்ந்திருக்கும்
இந்தியக் குப்பைத்தொட்டியில் -
இவர்கள் ஆரம்பித்த
காதல் ஒத்திகை அரங்கேறியது
காவல்நிலையக் கல்யாணமாக…!
03.
காதல் என்பது…
---------------------
கண்ணில் காண்பனவெல்லாம்
காதல் அல்ல,
கல்லூரி வகுப்புகளில்..
கடற்கரை மணல்வெளியில்..
கார் வண்டி வாகனங்களில்..
கோவில் தூண்மறைவில்..
குளக்கரை படித்துறையில்..
காட்டினில் மேட்டினில்..
காண்பதெல்லாம்
காதல் அல்ல,
அது-
ஆண். பெண் உடல்பசியை
ஆற்றிடத்தான் ஆராய்ச்சி…!
அங்கே,
இருப்பதற்கே
இடம் இல்லாதபோது
இடர்ப்படுத்தும் வறுமையிலும்
இதயம் ஒன்றுசேர்ந்ததாலே
இணைந்திருக்கும் அந்த
இருவரிடம்
இருப்பதுதான் காதல்…!
-செண்பக ஜெகதீசன்…
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-11