இடி இடிக்க பூமி நடு நடுங்க
பித்தம் தலைக்கேறி
வாந்தியெடுத்தது வானம்

கிருதயுகம, திரேதயுகம், துவாபரயுகம்
எல்லாம் சுமூகமாக முற்றுப்பெற்றபோதும்
கலியுகத்தில் மட்டும்..
பூமாதேவியின்
கோரத்தனமான ஆட்டத்தில்
அண்டம் - ஆங்காங்கே சரிந்து
நிமிர்ந்தது

அச்சரிவுகளுக்கு அசைவுகொடுக்க முடியாமல்
ஏழுகடல்களும் ஆட்டம்கண்டு
கொடுங்கோபத்தோடு கொந்தழித்தது

பெருக்கெடுக்கும் கடல்நீரை குடிமனைகள் மீது
உமிழ்ந்துகொட்டியது

வெறித்தனமான சூறாவளியின் வேகத்தில்
கட்டடங்கள்முதற்கொண்டு
மரங்கள், மனிதஉயிர்கள்
மற்றும் எல்லாஉயிரினங்களும்
ஒன்றாய் துவைக்கப்பட்டது
சாவுக்கஞ்சி அவை எழுப்பிய
கூக்குரல்கள்
வங்கம் முதல் வைகுண்டம்வரை
பேரதிர்வைக்கிளப்பியது-அதிர்வின் எதிரொலியில்
வானமும் பலதுண்டங்களாய் வெடித்துச்சிதறியது

மண்ஆசை
பெண்ஆசை
பொன்ஆசை கொண்டவர்கள்
கொள்ளாதவர்கள்
எல்லோரும் ஒன்றாய்
சாதி, மதம், இனம், பால்
வேறுபாடின்றி
ஒரேபடுக்கையில்
மூர்ச்சையடைத்துப்போய்ப்
பிணங்களாய்ப் பிரண்டுபோயினர்

சொற்ப இடைவெளிகளின் பின்
வெடித்துப் பிழந்த வானம்
இருளைமட்டுமே மெழுகியிருந்தது
ஆடிய ஆட்டம் எல்லாம் ஓய்ந்து போனபோது
அண்டம் - எங்கும் மௌன விரதத்துடன்
ஏதோவொன்றிற்காய்க் காத்துக்கிடந்தது.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others