உறங்காத உண்மைகள்
----------------------------

உண்மைகள் எப்போதும் மறைந்திருக்கும் - அவை
உலகத்தில் ஏனோ புதைந்திருக்கும்
நெஞ்சங்கள் அதனால் துடித்திருக்கும் - அவை
வஞ்சங்கள் கண்டு தளர்ந்திருக்கும்
பாசத்தை மதிக்கும் உயிர்கள் தானே - புவியில்
நேசத்தால் உதைபடும் பந்துகள் ஆயின
வேஷத்தால் மயக்கிடும் மனிதர்கள் - உலகில்
கோஷத்தால் உயர்ந்திடும் நிகழ்வுகள்
பொறுமையால் கட்டுண்ட சொந்தங்கள் - வாழ்வில்
வெறுமையாய் தவித்திடும் பொழுதுகள்
கருமையை விலக்கிடும் வேளைகள் - என்றும்
வரும்வழி புரியாத ஜீவிதங்கள்
இறைவனின் பாதங்கள் தொழுதிடும் - சில
இதயங்கள் என்றுமே அழுதிடும்
இதுகூட இயற்கையின் நியதியோ - அவனியில்
இவர்வாழ்வில் இன்பம் இனிவருமோ ?

-சக்தி சக்திதாசன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-09 00:00
Share with others