ரத்த வாசம்
-------------------
மனித சிதலங்கள்
கோயிலின் வெளிச்சுவரில்
ஒட்டிக்கொண்டிருந்தது
குருதி தோய்ந்த
தொடைப்பாகமோ கைப்பாகமோ
கைக்குழந்தையொன்று
தாயைக்காணாமல்
குண்டு விழுந்த
பேரிரைச்சலாலோடு
கதறியது
சிவன் கோயிலில்
பசியை விட்டகன்ற பதற்றம்
மேவியிருந்தது மக்களிடம்
“இறைவனைப்பிரார்த்தியுங்கள்” என்றார்
குருக்கள் மூல மந்திரம் மறந்தவராய்
எல்லாத்திசைகளையும் தீர்க்கமாக
நோக்கிய
M16 கனத்த டிரக்குகளில்
கொலைவறியோடு கனன்று
நீண்டிருந்தது
கிளித்தட்டு டிய சிறார்கள்
திசைமறந்தவாறு மறைவிடம்
தேடிச் சிதறினர்
குழந்தை முகம் தேடி
தேவாலயத்தில்
யேசு பெருமானை
முழங்காலிட்டு
ஜெபித்தனர்
உலை வைக்க விறகுதேடிய
தாய்மார்கள்
பிள்ளைகளுக்காக
நிலை மறந்து
விரைந்தனர்
பள்ளிவாசலில்
என்றுமில்லாத கூட்டநெரிசல்
தொழுகைகளில்
அல்லாவை அழைத்தனர்
மனித ரத்தத்தைக் கேட்கும்
அசுரர்களென போர் விமானங்கள்
ஐந்தாறு சுற்றுகள் முடிந்து
பிறிதொருமுறையும்
இரைதேடிப் திரும்பி வந்தன
ஓர் இளஞன்
தெருவில் பெரும்பீதியில்
தலைதெறிக்க
ஓடினான்
“வரும் வழியில் குண்டு பாய்ந்து
கடவுள் இறந்துவிட்டார்” என்று கதறியபடி
-கோ.புண்ணியவான், மலேசியா
ko.punniavan@gmail.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-07-08