மறைத்ததும்.. கனவும்.. தேடுவது..
01.
மறைத்ததும்…
---------------------
பாஞ்சாலி உடலுக்கு
சேலை கொடுத்தான்
கண்ணன்,
பார்த்தன் வில்லுக்கு
வேலை கொடுத்தான்…!
அங்கே-
மறைத்துக் காக்கப்பட்டது
மானம்,
இங்கே-
திறந்து காட்டப்பட்டது
வீரம்…!
02.
கனவும் நனவும்…
--------------------
வானம் பொத்துக்கிட்டு
ஊத்துது..
வரப்பும் தண்ணியில
மூழ்குது..
வயலும் குளமாத்
தெரியுது..
தெருவுல தண்ணியும்
ஓடுது..
தேரிக் காட்டிலும்
தேங்குது-
தெரிந்தது இப்படி
கனவிலே,
வறண்டு கிடக்குது
வெளியிலே,
வாங்க வேண்டும்
தண்ணீரே…!
03.
தேடுவது…
-----------
வாலிபம் என்பது
வணங்காமுடி,
அது
வானைப் பார்க்கிறது..
வயோதிகம்
வளைந்து மண்ணைப் பார்க்கிறது-
தொலைத்துவிட்ட இளமையைத்
தேடிப்பார்க்கிறதோ…!
-செண்பக ஜெகதீசன்…
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-12-06