வேர்க்கும் நினைவுகள்
------------------------------
பன்னீர் மழை! பன்னீர் மழை! -என்னில்
படுமென்று பார்த்திருந்தேன்!
கண்ணீர் மழை! கண்ணீர் மழை! - என்
கவிதையைக் கரைத்ததடி!
வழிமாறியாவது வருமென்று - என்
வாசலதைத் திறந்து வைத்தேன்!
வாசமாவது வீசுமென்று - உன்
வாசல் வந்துக் காத்திருந்தேன்!
விழிக்குமுன்னே உன் நினைவு!
விழி மூடாதிருந்தும் பல கனவு!
கல்லடி படவில்லை - பலர்
சொல்லடி பட்டதடி!
வெய்ய மணலின் வேர்ப்பறித்தால்,
வேர்க்கும் தெளிய நீர்போல...
வெந்து கிடக்கும் உள்ளத்தை
வெட்டி எடுத்தால் நீ தெரிவாய்!
விதை ஒன்று விழுந்து
இரு இடத்தில் முளைத்ததென்று
இறுமாப்புக்கொண்டிருந்தேன்!
வித்து உன்னில் விழவே இல்லையோ?!
வெளியில் தெரியா- என் வேதனைக்
கூட்டி நின்றேன்!
தாய்முகம் பார்த்தே வளரும் ஆமைக்குட்டி!
உன் முகம் பார்த்தே வளர்ந்த காதல்...
வைக்கோல் கன்றிற்காய் மடிசுரக்கும் பசுவோ!?-இன்று
மண்ணில் விழுந்து உடைந்ததடி!
உடல் வெந்து போகுமுன் ஒருமுறை
வந்து போய்விடு! -என்
பாசத்தைக் காட்ட அல்ல! - உன்னால்
பட்டுவிட்ட காயங்களின் பட்டியலைக் காட்ட...!
*****
ஆ. மணவழகன்
a_manavazhahan@hotmail.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01