ஈரம்.. பசி.. தாய்மை.. பௌர்ணமி
01.
ஈரம்
--------
தீபாவளிக்கு வாங்கி
வெடிக்காமல் போன
பட்டாசை
விரித்துப் பார்த்தேன்
சிறுவன் ஒருவனின்
வியர்வையும் இரத்தமும்
இன்னும் காயாமல் இருந்தது!
02.
பசி
------
பொரி போடுவதற்குப் பதிலாக
குளத்தைச் சுற்றிய
கழுகொன்றிற்கு
என் தொடை மாமிசம்
கொடுத்திருந்தால்
இன்னும் சில நாட்களுக்கு
வாழ்ந்திருக்குமோ
மீன்கள்?
03.
தாய்மை
------------
நீண்ட நேரமாகத்
துணி வாங்கும் தாயின்
முந்தானையைப் பற்றி
கதறி அழும் குழந்தையின்
குரல் கேட்டு
பொம்மையொன்றின் மார்பில்
பால் சுரக்கிறது!
04.
பௌர்ணமி
---------------
அமாவாசை அன்று
இறந்துபோன
நிலாவின் உடல்
பதினைந்து நாட்கள் கழித்து
ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ள
கோயில் குளத்தில்
மிதக்கிறது!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-10-19