எழுதப்படுகின்ற புத்தகம்
------------------------------
மானிட ஜீவனின் கூடு
எழுதப் படுகின்ற ஒரு புத்தகம்
ஒவ்வொரு கூட்டினதும்
முகப்பு அட்டையினை
தாய் தந்தையர் வரைகின்றனர்
மர்ம நாவலோ மானிடக் காதலோ
புறட்ச்சிப் புயலோ புதுக் கவியோ
அவரவர் எழுதித் தந்த
அத்தியாயங்களே
தத்தித் தவழும் காலத்தில்
முகவுரை எழுதும் மானிடன்
பருவ காலத்தின் வர்ண மாயைக்குள்
தான்னொரு பட்டாம் பூச்சி என்பதை
மறந்து போவதுண்டு
தேனிலும் இனியது காதல் என்பதும்
தேய்ந்திட்ட உலா வாழ்வில்
சாதல் என்பதும்
இவன் கண்ட தத்துவம்
அவரவர் எழுதும் பக்கங்களில்
வாழ்க்கை புத்தகம் வரையப்படுகின்றன
பிறப்போ இறப்போ
இவன் எழுதுவதில்லை
இறைவன் ஒருவனே
இறுதி உரை எழுதி
முற்றுப் புள்ளி வைக்கின்றான்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-02