பாழ்படும் சித்திரம்.. தற்கொலை...
01.
பாழ்படும் சித்திரம்
-----------------------
இயல்பை கீழே தள்ளி
ஏறி மிதித்துவிட்டு ஓடுகின்றன
செயற்கைகள்...
வாழ்க்கைக்கூடத்தில்
உணர்வுகளை கொண்டு
விளையாடுவதெப்படியென்று மட்டுமே
சொல்லித்தரப்படுகிறது...
எதுவும் தன் இயல்பில்
இருப்பதில்லை,
இயல்பு உட்பட....
அழிக்கமுடியாத ஒரு மாபெரும்
கருப்புப் புள்ளியில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிறிதளவேனும் வெளுப்பு
தெரிந்தால் அது காட்சிப்பிழை
என்று எண்ணத் தோன்றுவதில்லை...
அழகான சித்திரமொன்றை
பாழ் செய்வதெவ்வாறென்கிற
முறை மட்டுமே இறுதியில்
தொக்குவது விசித்திரம்...
02.
தற்கொலை...
-------------------
அஸ்தமனத்திற்கு பின்பான
விடியல்கள்,
ஒரு விருப்பத்துடனோ அல்லது
ஒரு நிர்பந்தத்துடனோ
நிராகரிக்கப்படவே செய்கின்றன....
உயிரை விடவும்
பெரியதாகிவிடுகிறது
ஏதோ ஒன்று...
முட்டுச்சந்துகளில்
முட்டிக்கொள்ளுகின்ற வாழ்க்கையை
பெருந்துணிச்சலொன்று
இட்டுச் செல்லுகிறது
அஸ்தமனத்தை நோக்கி...
இட்டுச் செல்லும்
வழியெங்கும் அது
விடியல்களைப் பற்றி
அவதூராகவே பேசுகிறது...
விடியல்களின் வெம்மையை
தாங்காத மனம்
அஸ்தமன இருளில்
புதைவதை வேறு வழியின்றி
ஏற்கிறது...
பாதையைப் பொறுத்தே
அமைந்து தொலைகின்றன
இந்த முட்டுச்சந்துகள்...
புதிய பாதைகளில்
முட்டுச்சந்துகளை
அவதானிக்க முடிவதில்லை...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-26