நான் கூற நீ கேட்க
சத்தி சக்திதாசன்
நிமிடத்தின் ஒர் பாகத்தை எனக்குத்தா
என்மனவுறையை சிறிது அகற்றுகின்றேன் உன்
செவிகளைத் திறப்பாயா ?
உள்மனத்தின் அசுத்தங்களை கழுவும்போது அது
உன்வீட்டுக் கால்வாய் வழியாக ஒடுகின்றது
என் பயணப்பாதையில் சிறிது ஓய்வெடுக்க நான்
எண்ணிய போதுன் இதயத்தைக் கடந்து
கொண்டிருக்கின்றேன்.
மைல் கணக்காய் நடந்து விட்டேன் இன்னமும்
அரைவாசிப் பயணம் கூட முடியவில்லையே
முட்புதர்கள் முடிந்துவிடும்
என எனக்கு ஏன் பொய்யுரைத்தாய் ?
நான் நடக்கும் பாதைக்குப் பெயரே நெருஞ்சிப் பாதையாம்.
ஓடக்கூடாதென உட்கார்ந்தபடியே உத்தரவிட்டு விட்டான்.
சிந்தனைச் சுமைகளை நானிறக்கி வைக்க
சிலைபோலமர்ந்து நீ கேட்டிருக்க
உன்னிதயம் கனக்கின்றதே ஏனது ?
சமுதாயாத்தின் அவலட்சணங்களை அகற்றிட
அழுத்தமாய் போராட உன் துணை வேண்டும்
மக்களின் மனங்களை பிணைத்திருக்கும்
மாயை எனும் அந்தச் சங்கிலியை
அறுத்தெறிவோம் என்னுடனே
கூட வருவாயா ?
விஞ்ஞானத்தை மறுக்கும்
வீணர்கள் கூட்டத்தை
வீழ்த்த ஓர் யுத்தம் தேவை
விரைந்து நீ வாராயோ?
ஆன்மீகம் எனும் அற்புத உணர்வு
ஆண்டவன் எனும் அழியா ஞானம்
அடிப்படையையே அழித்துவிட்டு சில தீயர்
அறிவை மறுக்குமொரு அநியாத்தை
அழிக்கவுன் துணை தேவை.
பயணம் முடிந்தது பாதிதான் மீதி ஏக நின் தோள்வலிமை தேவை
சிறிதுநேரம் என் விழிகளை மூடிக் கொள்கின்றேன்
கனவெனும் தேரேறி களைவேன் அறியாமையை
தோழனே !
தூக்கத்தைக் கலைக்காதே ஏனென்றால்
ஏக்கம் விற்பனையாகா சந்தையது
என்பேனா கக்குவது மையல்ல என்னிதய ரத்தமே !
முன்னேற்றங்கள் எல்லாம் க்ஷவ்வுலகில்
மூலையில்
முடங்கிக் கிடக்கின்றனவே
நியாயங்களை ஏன் மூட்டையாக் கட்டி
நிறுத்து நிறுத்து
நீசருக்கு விற்கின்றாய் ?
தடையெனும் தளயறுக்க கொண்ட கத்திரியில்
நான் ஒருபாதி தான்
மறுபாதி நீயும் நான்போகும் திசையில் அசையாவிட்டால்
தவறாமல் தடைகள் தங்கியேவிடும்
உன்னிதயத்தின் முன்னே நடந்து கொண்டிருக்கின்றேன்
போகும் ஊருக்கு நீயும் சேர்ந்து நடக்காவிட்டால்
விடிவுகள் விளக்கமற்றுப்போய்விடும்
வெற்றிகள்
வெறுமையாய்ப் போய்விடும்
சிலர் மட்டும் வாழும் உலகில்
பலர் ஏக்கம் தீரும் வகையில்
நான் கூற
நீ கேட்டு
சேர்ந்து படைக்கும் ஓர் புதுவுலகில்
ஆண்டவன் பெயரால்
அபிஷேகம் மட்டுமின்றி
அறிவையும் ஆக்கி வைப்போம்
நேரம் நெருங்குது வா நாம் பயணத்தை தொடர்வோம்
