Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

இல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்

- ராமலக்ஷ்மி, பெங்களூர்

இல்லாத ஒன்று.. இதம் மறந்த இயல்புகள்.. சீற்றம்

01.
இல்லாத ஒன்று
-----------------------

வெறுமை மனதை வியாபித்து நிற்க
நிம்மதி நாடி அமைதியைத் தேடி
நடந்தேன் இலக்கின்றி வருத்தமாய்

அழுத்தும் சுமையை எங்கிருந்து எடுப்பது
எவரிடம் எப்படி இறக்குவது
தெரியாமல் திணறியது மனது குழப்பமாய்

பாதையோரம் காண நேர்ந்த
பார்வையிழந்த இளைஞன்
கம்பீரமாய் நம்பிக்கையாய்
நிமிர்ந்து நடக்க உதவியாய்
கூடச் சென்ற கைத்தடி..
கேட்காமல் கேட்டது என்னை
இல்லாத ஒன்று எப்படியாகும் பாரமாய்

புரியாதது புரிந்திட திகைத்து நின்றேன்
எடுத்துக் குறைத்திட ஏதுமற்றவனாய்

இதுவரை கிடைத்த நல்லன யாவும்
நினைவுக்குவர நன்றி மிகுதியில்
நெஞ்சம் நனைந்தவனாய்

வெறுமையென மயங்கிய மனதுக்கு
வலிமைதர என்றைக்கும்
பெற்ற அனுபவங்கள் துணையிருக்கும்
என்பதனை மறந்தயென்
மடமையை எண்ணி வெட்கிச் சிரித்தவனாய்.



02.
இதம் மறந்த இயல்புகள்
-------------------------------------

மற்றவரை மட்டம் தட்டுவதில்
மனிதமனம் அடையுது குதூகலம்

ஒருவர் எட்டி மிதித்ததாலே
இமயமலையின் உச்சி சரிந்ததாய்
இல்லை ஏதும் சரித்திரம்

துரும்பெனப் பரிகசிக்கப்பட்டவர்
இரும்பை விட உறுதியாய்
முன்னேறிய கதைகளோ
வரலாற்றில் ஆயிரம்

இளக்காரங்களால்
எவர் தரமும் தாழ்ந்ததில்லை
இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை

தெரிந்தாலும்
தேன்குடித்த வண்டு போல
இன்பங்கண்ட உள்ளங்கள்
தொடர்கின்றன களிப்பாக
இதிலென்ன பாவமென
இல்லை பெருங்குற்றமென

சடசடவென்று
சன்னல் கதவுகளை விடாது தட்டி
இடிமின்னலுடன்
அடித்துப் பெய்தது கோடைமழை

சீறிய இயற்கை
பார் என்றழைக்க
சிந்தனை கலைந்து நின்றது ஆய்வு

இதம் மறந்த புயல்காற்றால்
முற்றமெங்கும் இறைந்து கிடந்த
தடித்த பெரும் ஆலங்கட்டிகள்
பளபளத்துத் தெரிந்தன ஏனோ
பண்பு துறந்த ஏளனங்களாய்

நிமிடத்தில் கரைந்து
அடையாளம் தொலைத்தாலும்
அடங்கோம் யாமென
நிற்காத அடைமழையினூடே
கெக்கலிப்பாய் சேதி சொல்லி.


03.
சீற்றம்
------------

ஆறுவது சினம்
ரெளத்திரம் பழகு

முரண்களாய்த் தோன்றும் இவற்றின்
தேவைகள் சந்திக்கும்
கூர்வாளின் முனைபோன்ற புள்ளியில்
அடங்கிய ரகசியமாய் சீற்றத்தின் சூத்திரம்

சரியான நபரிடத்தில்
சரியான காரணத்துக்கு
சரியான நேரத்தில்
சரியான கோணத்தில்
சரியான அளவிலும்
வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..

புரிந்தால்
வாழ்வோடு வசப்படும் வானமும்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-07-14


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • விடையற்ற வியப்புக் குறிகள்
  • மகுடம் சரிந்தது
  • மயிலிறகுக் கனவுகள்
  • இரயில் பயணங்களில்..
  • விடியலுக்கு ஏங்கும் வெற்றுப் பிம்பங்கள்
  • பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்
  • இலக்கைப் பார்..
  • விந்தை உலகம்
  • ஒன்று பட்டால்
  • இல்லாதாரும் இலவசங்களும்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube