கானல் பூக்கள்.. விவாகரத்து.. புதிய வார்ப்புகள்
01.
கானல் பூக்கள்
---------------------
ஒட்டிய வயிறும் கந்தல் உடையும்
தெருநடை ஓரத்தில் பிச்சை தட்டுடன் நான்
கானல் வீதியில் சருகாகும் பூக்களில்
என்னைபோல் ஏராளம் சிறார்கள் இங்கே
இனப் படுகொலை அரசின் மயானத்தில்
என் குடும்பத்தில் எஞ்சிய எச்சம் நான்
எச்சில் சோறேனும் தருவாரா என
சுற்றத்தை பார்க்கிறேன்
விழியில் வீழ்ந்து வளியும் வேர்வைத் துளி
எரிவை தந்து காய்கிறது
என் தாகத்தை தணிக்கவில்லை
எனக்காகத்தான் கனிந்ததோ தெரியவில்லை
தெருவோர கால்வாய்க்குள் ஒரு தோடம்பழம்
நிறம் மாறினாலும் முக்குளித் தெழுந்து
என் முகத்தை பார்க்கிறது
விடுவேனா அதை துடைத்தெடுத்து
சுளை உரித்துண்டு
களைப்பை போக்கிக்கொள்கிறேன்
எங்கிருந்தோ வந்த ஓர் நல்லிதயம்
ஒத்தை ரூபாயை என் தட்டில்
இட்டுச் செல்கிறது
தேனீருக்கும் அது போதாத காசு
யாம் இருக்க பயம் ஏன் ! விளம்பர பலகையோடு
என் எதிரே ஓர் தேனீர் கடை
அதன் கண்ணாடி பெட்டிக்குள் சீனிபணிஸ்
கண்ணுக் கெட்டியது வாய்க்கெட்டுமா
காத்திருக்கிறேன் இன்னு ஒரு ஒத்தை ரூபாவிற்காக.
02.
விவாகரத்து
--------------------
சாட்சிக் கொரு அக்கினிக் குண்டம்
அதற்கும் எமக்கும் இடையில்
ஓர் புரோகிதர்
கெட்டி மேள நாத சுரத்தோடு
கட்டப் பட்ட திருமாங்கல்யம்….
விவாகரத்து கேட்டு
கோட்டாணையின் அழைப்பில்....
நீதி தேவனின் தராசுத் தட்டில்
குறைந்தும் கூடியதுமாய்
வாழ்க்கைத் தரவின் படிக்கல்கள்
அடுக்கி வைக்கின்றார் வழக்கறிஞர்
சாட்ச்சி சொல்ல அக்கினி வரவில்லை
நல்ல நாள் நல்ல நேரம் கூடவில்லை
அடித்து வைத்த பத்திரிகையில்
பிடித்த பாயிண்டுகளை எழுதி
விவாக இரத்து கொடுக்கின்றார்
நீதிவான்
பாக்கு வெத்திலை பரிமாற்றத்தோடு
மஞ்சள் பூசி இணைக்கப் பட்ட
நிச்சய தாம்பூல நியமனம்
ஊர் இன்றி உறவின்றி கூண்டேறி
விவாகரத்து வாங்கி போகிறது
போகட்டும் பொல்லாப்பெதற்கு நமக்கு
தாமரை கொடியும் தடாக நீரும்
விவாகரத்து கேட்பதில்லை என்றும்.
03.
புதிய வார்ப்புகள்
------------------------
வாழ்க்கைச் சுவடியை நாம் எழுத
அதை பதிவகம் செய்யும்
காலத்தின் மடியில்
செல்லரித்துக் கிடக்கிறது
காதல் காவியங்கள் எண்ணற்று
உண்மைக் காதலே - உனக்கு
வரப் பொன்று போட்ட மன்னவரால்
சமாதிக்குள்ளும் சன்னிதியிலும் சங்கமித்தாய்
மரணம் ஆட்கொண்டது
மனிதக் கூட்டை மட்டுமே
முகவுரை தொலைக்கவில்லை நீ
உன்னை வாழால் கீறி
வேலால் துளைத்து
வதை கொண்ட
கொற்றவர் அவையில்
தீர்ப்புகளை திருத்தி
புதிய வார்ப்புகளாய் பதித்து
காலன் அவைக்கும் மனு கொடுத்து
சாம்பிராட்சிய சன்னத பேய்களை
துப்பாக்கித் துளைக்குள்
துவைத் தெடுத்துவிட்டான் உன் பக்தன்
இரண்டாம் மிலேனிய நேப்பாள இளவல்
உனது வார்ப்புகள் மடை திறந்த ஊற்றே
விடையிருந்தும் வினா தொடுப்பது வீணே
உண்மைக் காதலரே
புதிய வார்ப்புகள் உங்களுக்கானதே.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-10-02