ஏற்றம் பெற ஏணிப்படி.. ஆண்டவன் தேடும் ஆலயம்.. வாடகை கூடு
01.
ஏற்றம் பெற ஏணிப்படி
---------------------------------
ஏற்றம் பெற ஏணிப்படி
ஏறிவிட்டாய் நீ முன்னிலை படி
அன்னை தந்தை முதல் படி
அகர ஆசான் அடுத்த படி
முழுமை கடவுள் மூன்றாம் படி
நற் சுகமே நான்காம் படி
பாச நேசம் உயர்ந்த படி
மயக்க நிலை மாயப் படி
வசந்தம் காண வாழ்க்கை படி
வாழ்வில் சொந்தம் வாசல் படி
காலம் கனிந்தால் காதல் படி
காவேரி கடப்பாள் கானல் படி
அன்பை தர ஆன்மீக படி
அறிவே என்றும் ஆகாச படி
படிக்கு படி பாத அடி - உன்னை
எரித்தே தணியும் கோடை இடி
ஏற்றம் காணலாம் ஏறு ஏறு
ஏற மறக்காதே தேசப் படி
உயர் நிலைதானே உரிமை கொடி
02.
ஆண்டவன் தேடும் ஆலயம்
-----------------------------------
ஆசை மன வாசலிலே
ஆடும் ஊஞ்சல் நூலினிலே
இழுக் கெலாம் இளையேற்றி
இறை அடி தேடும் நெஞ்சே
உன் வெண் மன கோயிலிலே
அழுக்கேறி இருள் இருக்க
நீ வடித்த கோபுர கூண்டுக்குள்
இறை வாழ குடி புகுவேனோ
பணம் வேண்டேன் பால் வேண்டேன்
பஞ்சாமிர்த சுவை வேண்டேன்
நிறம் மாறா பால் மனம் என்றால்
நிதம் வாழ்வேன் நிழலாக உன்னிடத்தில்
அடியும் முடியும் தேடு
ஆள் மனசில் ஆசை வார்க்காதே
பொய் சுமந்த தாழம் பூவானால்
புறையோடி பூநாகமே குடி புகும்
மனம் எனும் கோயிலிற்குள்
மிதவாத முள் எதற்கு
உன் வெறி கொண்ட வேள்வியில்
தறி கொண்டோடுதே நிறம்மாறா குருதி
நதியாகி நானித்து
ஆலயங்கள் நீ வளர்த்து
அதில் ஆராதனை ஒளி வளர்த்து
தாளிட்ட கதவுக்குள் சிறையிட்டு
சிதைக்கிறாய் சிலையிருத்தி என்னை
சிரிக்கிறேன் நான் நீ வடித்த கோயிலில்
அல்லா என்றும் யேசு என்றும்
ஈசன் என்றும் புத்தன் என்றும்
இன்னும் எத்தனையோ வடிவங்களில்
உள்ளக் கோயிலை தூய்மையாக்கு
இல்லார்க்கு ஈர்ந்து கொடு
பூசைக்குகந்த புஸ்பங்களாய்
ஆட் கொள்வேன் உமை ஆராதனை வேளை
நான் தேடும் ஆலயம் வெண் இதயமே.
03.
வாடகை கூடு
----------------------
வாடகை கூடு தான்டா சாமி – அட
வாழ்ந்துதான் பார்த்தேன் சின்னச்சாமி
இதயம் துடித்ததடா சில நாள்
இன்னும் உயிரோடு வாழ்கிறேன் அதனால்
கருவறை கோயிலில் வைத்தவளோ
காலன் அளைத்தே கண் துயின்றாள்
கருணை நிழல் தந்தவனோ
இனத்தீ அலையிலே தகனமுற்றான்
இளப்பதெல்லாம் இளந்துவிட்டு
இருக்குதையா இன்னும் உசிரு
புத்தபகவானே உன் போதனை வீணாச்சே
வெள்ளரச மரத்திலே வேதாளம் ஆடுதிங்கே
தாய் மண்ணை ஏடாக்கி அகரம் எழுதியவன் நான்
தாயக விடிவிற்கே தமிழ் பால் குடித்து வந்தேன்
இனத் தீ சங்காரம் இன்னும்தான் ஓயவில்லை
கனலான ஈழமே நதியாக நான் வாறேன்
நஞ்சு மாலை கழுத்தணிந்து
கந்தகத்தை வண்டி கட்டி
வாடகை கூட்டை
தாய் நாட்டுக்கே தந்துவிட்டேன்
அண்ணனை போலொரு ஆண்டவன் இல்லையடா
உரம் தந்து வரம் தந்து நிழல் தந்த சாமியவன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-01-01