எங்கள் தேசம் இந்திய தேசம்!
--- நா.முத்து நிலவன் --
(NCERTவெளியிட்டுள்ள 'ஹிந்த் தேஷ்கீ நிவாஷி' எனும் இந்திப் பாடலின் 'இசைபெயர்ப்பு' )
--பல்லவி--
எங்கள் தேசம் இந்திய தேசம்
வாழ்க வாழ்க வாழ்கவே!
இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள்
எல்லாரும் சகோதரர்கள்!
--சரணங்கள்--
வேறு வேறு வண்ணப் பூக்கள்
சேர்ந்த வாச மாலை நாங்கள்!
வண்ணம் வேறு வேறென் றாலும்
வாசம் நெஞ்சில் ஒன்றுதான்!
--1(எங்கள் தேசம்...
சிந்து கங்கை பிரம்ம புத்ரா
கிருஷ்ணா காவேரி
சென்று சேரும் கடலில் என்றும்
நீரின் தன்மை ஒன்றுதான்!
--2(எங்கள் தேசம்...
பேசும் மொழியும் வாழும் இடமும்
வேறு வேறு ஆனால் என்ன?
பாச உணர்வும் பண்பும் அன்பும்
தேசம் முழுதும் ஒன்றுதான்!
--3(எங்கள் தேசம்...
இமயத் தலையில் பனிப்பூ மேகம்
குமரி அலையில் கொலுசுகள் நாதம்
குஜரத் வங்கத் தோளில் மோதும்
கொஞ்சும் தாயின் ஒற்றுமை கீதம்!
--4(எங்கள் தேசம்...
(இந்தப் பாடல், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., தமிழ் இலக்கிய வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ள கவிஞரின் "புதிய மரபுகள்" எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை ம.தி.தா. தேவாங்கா அரசுக் கலைக்கல்லூரி மாணவர்களால் பாடப்பட்டு, அனைத்துக்கல்லூரிப் பாடல்
போட்டியில் முதல் பரிசு பெற்று, மதுரை வானொலியின் தேசபக்திப் பாடல் வரிசையில் அடிக்கடி இசைக்கப்பட்டு வருகிறது)
-------------------------------------
வறண்டது காவிரி மட்டுமா?
- நா.முத்து நிலவன்.
வறண்டது காவிரி மட்டுமா? - மக்கள்
வாழ்க்கை நெறியும்,பண் பாடும்கிழிந்ததே ஒட்டுமா?
இருண்டது போலவும் தோணுதே! -அட
ஈராயிரத் தாண்டு, பாரம்பரியமும் நாணுதே! -1
எங்கெங்கு காணினும் வழ்ச்சியா! - அதில்
ஏழை நிலைமையை மூடி மறைத்திடும் வீழ்ச்சியா!
அங்கங்கும் 'ஒளிர்கிற' காட்சியா! -அவை
அப்பாவி மக்களின் அம்மணத்தை விற்ற சாட்சியா! -2
அறிவியல் வளர்ந்ததே போதுமா? - அவை
அடிமட்ட ஏழையை அப்படியே விடல் நீதமா?
பொறியியல் வளர்ந்தென்ன லாபம்? - ஒரு
போக்கிலா மாந்தர்க்குப் புகலிடமில்லையே பாவம்! -3
‘பாவேந்தன் பாரதி தாச! - உன்
பாட்டு வழிஎங்கள் நாட்டுவழி’ எனப் பேச -பல
நாவேந்தர் எம்மிடம் உண்டு!- எனில்
நாவேறு! செயல்வேறு என்பதே எம்மனோர் தொண்டு! -4
‘மலைவாழைக் கல்வி’யை உண்டோம்! - அறிவு
மட்டும் வளர்ந்தது, நாட்டையே காடாகக் கொண்டோம்!
விலைபேசி வாங்கினோம் வம்பை - உள்ள
வேற்றுமை யைஊதிப் பெரிதாக்கி விடுகிறோம் அம்பை! -5
கல்வியில் லாததோர் பெண்ணை - நீ
களர்நில மேயெனக் கவிபுனைந் தாய்,தஞ்சை மண்ணை
புல்விளை யாததோர் புதராய் - நாங்கள்
போட்டுவைத் தோம்,பெண்ணைப் போற்றிவைத் தோம்ஒருபுதிராய்! -6
‘உலகமே உண்ண உண்’ என்றாய்! - 'இந்த
உலகையே நானெடுத்(து) உண்பேன் தனியாக' என்றார்,
கலகமே நடத்திய போதும் -அதைக்
'காவல் பணி'யெனக் காட்டுவதே எங்கள் வேதம்! -7
வறண்டது காவிரி மட்டுமா? - இல்லை
வளத்தமிழ் நாட்டினில் பண்பாடும் கிட்டுமா?
இருண்டது போலவும் தோணுதே! - இதை
எப்படியும்,இனி மாற்றிடவே வழிகாணுவோம்! -8
=====
Nandri,vaNakkam.
Naa.Muthu Nilavan,
Pudukkottai-Tamil Naadu.
