ஒன்று சொல்வேன்
-- சக்தி சக்திதாசன்
நெஞ்சினில் உனக்கு
கனப்பது என்ன ?
அன்புச்சுமையோ ?
நேசத்தைக் கொடுத்து
பாசத்தில் திளைத்து
பாவம் !
பாவி என பெயர் கேட்டு
பரிதவிக்கும் தோழனே !
ஒன்று சொல்வேன் கேளாய் !
ரணமான உள்ளத்தில் இன்றும் பாச
ரதம் ஓட்டும் உன்னெஞ்சம்
நானறிவேன் கலங்காதே !
உண்மையைத் தான் சொன்னாய்
உறவைத்தான் மதித்தாய் !
கேட்பவன் மனதை
சந்தேகத் திரை கொண்டு
மூடி விட்டான் !
தவறு உன்னதல்ல
குருட்டுக் கண்களால்
ரசிக்கப்படாத ஓவியம் நீ !
தோழா !
ஒன்று சொல்வேன் கேளாய் !
ஓசையற்ற உன் இதய
ஓலத்தை நானறிவேன்
சிலநேரம் உன் காலம் முடிந்து விடும்
சந்தேகம் அந்நேரம் விலகி விடும்
சதிகாரன் நீயல்ல என
சத்தியமாய் யாபேர்க்கும் புரிந்துவிடும்
அப்போது வீசும் தென்றலிலே
அன்புள்ளம் கொண்டவன் உன்
அழியாத நினைவுகள் கலந்திருக்கும்
அது வரை நண்பா !
ஒன்று சொல்வேன் கேளாய் !
உனை அறிந்த
ஒருவனாய் நானுண்டு கலங்காதே !
