கறுத்த மச்சான் கள்ளச் சிரிப்போடி
-- கண்ணப்பு நடராஜ்
நேசம் கொண்ட நெய் நிலத்து
நெல் மணிக்கு நீர் கொடுக்க
நீள் வரம்பு நீண்டு நிறைந்திருக்க
காற்றடிக்கக் காகம் பறக்க
கனத்த பனம் பழம் மொத்தன மோத
போகம் பெரும் போகம்
செல்லமாய் சிரி பெண்ணே
செவத்தப் பச்சை சேர்ந்திடிப்போம்
சேதி சொல்ல செவியைக் கொடு
செவ்விளநீர் கோதிக் கிடக்கு
பச்சைச் செம்பட்டான் பழுக்கப் புடுங்கிப் போடு
வயலுக்குள் காலைக் குளிர்
காலைக் குளிர் கூசுது கதிர்
தளிர் பட்டு வெடிக்குது மொட்டு
வயலுக்குள் வாலைக் குமரி
செல்லமாய்ச் சிரி செவத்தப் பெண்ணே..
யாழ் நிலமெல்லாம் வாழ்த்த வாயெடுக்க
கட்டுவன் மண்ணிலொரு அடுப்புப் பிடியடி
பொய்யர் புளுகரின்
வாய்க்கு வையடி நெருப்பு
ஒனறே குலமடி ஓலையை வையடி
அக்கா தங்கைச்சிக்கு
நல்ல தமிழ்ச் சொல்லைச் சொல்லிக் கொடடி
காகம் கரையுது
கட்டுவன் மண்ணிலொரு அடுப்புப் பிடியடி
கூரைக்கு மேலே கூவுற கோழியைக் கூப்பிடு கூப்பிடு..
வானம் சிரிக்குதடி வையகம் வெளிக்குதடி
ஒன்றே தேவன் உலகிற்கு ஒரு வெளிச்சம்
உத்தமர் பெயரை உச்சரி தினமே..
காங்கேசன் கடல் நுரையோடி
கறுத்த மச்சான் கள்ளச் சிரிப்போடி
செல்லமாய்ச் சிரி செவத்தப் பெண்ணே
செவத்தப் பச்சை சேர்ந்திடிப்போம்
விருந்துக்கு வறுத்த பயறு
கொழுத்த கொழுக்கட்டை பிடித்தெடு
காகம் கரையுது
கட்டுவன் களி மண்ணிலொரு அடுப்புப் பிடி
விருந்து வருகுது பகை ஓடுது..
தோட்டம் திருத்தியது நாமடி அதில்
நோட்டம் விடுவது யாரடி?
உந்த மண்ணில் உறைப்பது எங்கள் வேர்வையடி
எந்த மனிதன் பறிப்பான் எங்கள் சோற்றை?
கறுத்த மச்சான் கள்ளச் சிரிப்போடி
நாளை சரித்திரச் சாட்ச்சிகளடி நாம்.
---------------------------
ஆசிரியர் கண்ணப்பு நடராஜ்
தொகுப்பு: வாழுகின்ற வாலிபங்கள்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-03-27