வர வர வார்த்தைகள் மீதே....
வர வர வார்த்தைகள் மீதே எனக்கு
நம்பிக்கை அற்றுப்போச்சு
நான் சொல்ல
மற்றவன் வேறொன்றாய் புரிந்துகொள்ள
விளக்கம், மறுவிளக்கம்
விளக்கத்திற்கு விளக்கமெனப்
புதராய் மண்டி புற்றாய் வளரும்
வார்த்தைகள்
தூங்குகிறவன் உடம்பில்
வெளிச்சத்தால் தட்டி எழுப்பியதுபோல
வீணாகிப் போச்சு எல்லாம்.
"என் ப்ரிய நண்பனே"
என்பதின் பொருள்
"நீ எனக்கு அதிகம் தேவைப்படுகிறாய்"
என்பதாய் இருப்பின்
வார்த்தைகள் ஏன் இன்னும்
வழக்கொழிந்து போகவில்லை
மீன்கள்
கண்ணாடித் தொட்டிக்குள் துப்பும்
காற்றுக் குமிழிகளாய் வார்த்தைகள்...
பஸ்ஸில், பள்ளியில்
பார்லிமெண்டில்
படுக்கையறையிலும்...
வெறுமனே உடைந்து வீணாய்க் கரையும்....
வர வர வார்த்தைகள் மீதே எனக்கு
நம்பிக்கை அற்றுப்போச்சு
- இந்திரன்
நன்றி : உரையாடல் கவிதை அனுபவம்
- இந்திரன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-10