பம்பரம்
கவி ஆக்கம்: அகரம் “அமுதா”
ஒற்றைக் காலில் நின்றபடி
உன்னை என்னை பார்த்தபடி
சற்றே காற்றை கிழித்தபடி
சுற்றும் பம்பரம் சொல்வதென்ன?
நிலையே இல்லா இவ்வாழ்வில்
நிலைத்து வாழ வேண்டுமென்று
நில்லா துழைத்தல் வேண்டுமென்று
நிற்கும் பம்பரம் சொல்கிறது!
ஊனம் உடலில் இல்லையென்றும்
உள்ளத் தில்தான் உள்ளதென்றும்
காணும் பேரைக் கூப்பிட்டு
கனிவுடன் பம்பரம் சொல்கிறது!
வட்டத் துள்ளதை சிறைவிடுத்து
வாழ்வளித்திடும் தன்னைபோல்
இட்டமுடனே இல்லார்க்கு
இயன்றது செய்திட இயம்பிடுது!
தலைக்கனம் கொண்டு ஆடுவதால்
தாழ்வே வந்து சேருமென்று
தலையை ஆட்டித் தக்கபடி
தன்மையாய் பம்பரம் சொல்கிறது!
தன்னைச் சுற்றும் சாட்டடைக்கே
தன்னை வழங்கும் பம்பரம்போல்
உன்னை சார்ந்த உறவுக்கு
உன்னை ஈந்திடு என்கிறது!
சொந்தக் காலில் நிற்பதுதான்
சுகத்திற் சிறந்த சுகமென்றும்
அந்தப் பம்பரம் சொல்கிறது
ஆழகாய் நிமிர்ந்து நிற்கிறது!
கவி ஆக்கம்: அகரம் “அமுதா”
தொடர்பு:006592468200
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-22