தூற்றி உயர்வதுவும் தொல்லுலகில் ஆகாதே!..கதைப்பொருளாய் ஆகுபவர்..!.. இனிக் கனவு பார்க்கிலேன்!
01.
தூற்றி உயர்வதுவும் தொல்லுலகில் ஆகாதே!
-----------------------------------------------
தமிழுக்கே உயிரென்று தண்டவாளம் மேல்படுத்தோர்
உமிழ்ந்திட்ட தெல்லாமும் ஒருமொழிமேல் விடமன்றோ?
அமிழ்தென்றே கூறியவர் அதைப்பாட மொழியாக்க
உமிழ்ந்தாரோ ஒருசொல்லும்? ஊர்,ஏய்ப்பே எல்லாமும்!
வேற்று மொழிபடித்து வெளிநாட்டு வேலையையே
போற்றி அவர்தொடரப் போவதுவும் அதனாலே!
தூற்றி அதனால்தான் தூயதமிழ்ப் பெயர்சொல்லார்!
சேற்றில் இறக்கிவிட்டச் செம்மல்களை நினையுங்கள்!
தூற்றி உயர்வதுவும் தொல்லுலகில் ஆகாதே!
02.
கதைப்பொருளாய் ஆகுபவர்..!
---------------------------------------------
மாலுக்கு மருமகனை மனத்துள்ளே நினைத்தவர்கள்
பாலுக்கும் ‘பார்லிக்கும்’ பைத்தியமாய் ஆவாரோ?
வேலுக்கும் மயிலுக்கும் வேதனையைச் சொல்பவர்கள்
காலுக்குத் தள்ளாட்டம் களைப்பால்தான் வேறில்லை!
தோலுக்கும் சதைகளுக்கும் தொண்டடிமை யாகிடுவோர்
காலுக்கும் நோயிற்கும் கதைப்பொருளாய் ஆகாரோ?
03.
இனிக் கனவு பார்க்கிலேன்!
------------------------------------
மழையாக வந்துநான் மனத்துளே இறங்குவேன்
--மண்ணென ஏன்விழுந்தாய்?
விளையாடும் தென்றலாய் கிளையாட்டி வருகிறேன்
--வேரொடும் ஏன்சரிந்தாய்?
குளிரூட்டும் மலருடன் கொடியெனப் படருவேன்;
--குடைசாய்ந்து கருகினாய்,ஏன்?
தெளிவான எண்ணமும் திடமான நெஞ்சமும்
--தெரியாது சென்றமா னே!
கோடையில் மழையெனக் கொட்டுவாய் என்றுநான்
--கொண்டதும் பகற்கன வே!
மேடையில் மாலையாய் மேல்விழு வாயென
--மிக,நினைத் ததும்கன வே!
ஓடையில் உன்னொடும் உருண்டதாய் என்னுளே
--உணர்ந்த்தும் பொய்க்கன வே!
பாடையில் மாலையாய் வந்து,நீ விழுவதாய்ப்
--பார்க்கிலேன் இனிக்கன வே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-08-29