வானம் நிராகரித்த
என் வாழ்வு ஏற்றுக்கொண்ட
நிலா மகளே..
தொலைவில் இருந்துகொண்டு
வானவீதியில் உலாவருகின்றாய்
என் வாழ்வின் விதியிலும்
குறுக்கே வருகின்றாய்
இடைஞ்சல்கள் இல்லாத
புதிய செருகல் நீ
இடைச்செருகல் நீ. .
புற்களில் உறங்கிடும் பனித்துளிகள்
உன்தன் அழகை காட்டுவதுபோல்
என்தன் உதிர்ந்த முடிகளிலும்
நீ நிறைந்து இருக்கின்றாய்
கவிக்கு இசைவான
கனவில் இதமான
கரைந்துபோகாத வண்ணம் நீ
கடலின் மடியிலும்
நீ உறங்கிக்கொள்கின்றாய்
வானின் மையத்திலும்
பள்ளி கொள்கின்றாய்
எப்படி அது சாத்தியமாகின்றது ?
ஏனெனில்
என்தன் உள்ளத்திலும் நீதானே
நிரப்பியிருக்கின்றாய் உன்னை
கனவு வந்து தொல்லை தர
கவி எழுதவந்தேன் - உன்
கண்கள் கண்டபின்னாலே
வா£¢த்தை தொலைத்து நிற்கின்றேன்
நிலவின் உள்ளேயும் நிலவை காண்பது
உன்னில்தானே. . ஏனெனில் நீ
அமாவாசைக்கு வந்த
அற்புத நிலா
உனக்குள் அடுக்கடுக்காய்
பௌர்ணமி நிலாக்கூட்டம்
குயிலின் குரலோசை
உன்னிடம் இரந்ததா ?
சுருதி மாறாமல்
சற்றும் இளகாமல்
அப்படியே அச்சாகின்றதே
உன்னை எப்படி வர்ணித்துக்கொள்வது
கம்பனாகவா இல்லை வைரமுத்தாகவா
என்னை மாற்றிக்கொள்வது
ம்கூம். .
உன்னை வர்ணிக்க கவிஞன் இல்லை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01