இருண்டவர்கள் நாம்
அறியாத வயதில் கால்
தடுக்கிவீழ்ந்து முத்தமிட்ட நாட்கள்
அறிந்த வயதில் குனிவதா நான் என
அகங்காரம் கொண்ட நாட்கள்
வீழ்ந்தாலும் மீசையில் மண் ஓட்டுவதில்லை என
வீறாப்பு பேசித்திரிந்த நாட்கள்
எல்லாமே காற்றோடு காற்றாய் கரைந்தே போய்விட்டது.
இனவாதபோரினால் மண் தன் இனத்தை தொலைக்கின்றது
கப்பலேறும்போதே எம் கனவுகளும் ஏறிவிட்டன
அன்னிய மண்ணல்ல அயல் மண்தான்
புரியாத மொழி. . புரிந்த மொழிக்கு பூட்டு
அனுபவித்த வேதனைகள் அளவில்லை
கால் பதிக்கும்போதே அந்த மண்
என்னை கிண்டலாய் ஒரு தரம்
வீழ்த்திப்பார்த்தது. . மகனே
முத்தமிட்டுக்கொள் என்னை
நீ முக்குளிக்கப்போவது
இம் மண்ணில்தான் என்பதுபோல
நாட்கள் மின்சார ரெயில்போல் வேகமாய் நகர்ந்தோடியது
அவற்றிடமும் இறக்கைகளா
இப்படி பறக்கின்றதே
நாட்களை மாதங்கள் ஆக்கிரமிக்க
மாதங்களை வருடங்கள் பலாத்காரம் செய்துகொண்டன
இரண்டு ஆண்டுகள் நாணலுமல்ல ஆலுமல்ல
இரண்டும்கெட்டான் வாழ்க்கை வாழ்ந்தேன்
பிறக்கின்றபோதே தமிழன்
சிறைவாசம் எத்தனை நாட்கள் என
குறித்துக்கொண்டே பிறக்கின்றான்
எனக்கும் குறித்திருந்தது புரியாமல் இருந்துவிட்டேன்
தமிழன் எல்லாம் பயங்கரவாதி
மருண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்
என்பதுபோல் நாம்
இருண்டிருந்தோம் அவன் மருண்டிருந்தான்
பேயாகதோன்றி பிடிபட்டு அடிபட்டோம்
இன்று
அந்த வேதனைகள்
கொஞ்சம் கொஞ்சமாய் உருவமெடுக்கின்றன
உட்காயங்கள் உயிர்கேட்கின்றன
இன்னும் எத்தனை நாட்கள்தான் வாழ்வோ
என்னைப்போல் எத்தனை ஜீவன்களோ
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-12-17