அமைதி பார்த்த உன் முகத்தில்
அள்ளித் தெளித்த சோகங்கள்
அகத்தை மறைத்தாலும்.....
அழகுக் கண்ணில் துயரங்கள்.
மயிலே உன் சிறகை ஒடித்தவர் யார்...?
குயிலே உன் குரலை உடைத்தவர் யார்..?
மௌனத்தின் மடியில் உன் முகம் புதைத்ததேன்..?
மலரினும் மென்மை என்றுன் பலத்தை எரித்ததாலா..?
தேன் நீ ! என்று சொல்லிச் சொல்லியே ...
உனைத் தேளாய்க் கொட்டினாலும்...
மான் நீயென வர்ணனை செய்ததால் மருண்டு நின்றாயோ..?
விளக்கினை எடுத்து வை. வெளிச்சம் உன் வாழ்வில் என்பார்.
விட்டில் பூச்சியாய் நினைத்துனை விழுத்திடும்....
வேதனை பார்த்தாயா?
மலராய் இருந்து கசங்கியே...நீயும்...
மண்ணுக்குள் வீழ்வாயோ?
மானாய்இருந்து நரிகளின் வாயிலே ...
இரையாகி மாள்வாயோ?
புயலாய் எழுந்து புரட்சிப் பூக்கள் தூவிடப்பறப்பாயா?
புலியாய் எழுந்து புதுயுகம் படைத்திடும்...
புதுமைகள் மறந்தாயா?
விட்டில் பூச்சியாய் தினம் வீணாய்ப் போகும்உன்
வாழ்வும் ஒரு வாழ்வா?
கட்டிலும்தொட்டிலும் வாழ்க்கையல்ல... இனி
கண்களைத் திறப்பாயா?.
பாரதி ஜேர்மனி.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01