உணர்வலைகள்
மனமெனும்
கடற்கரையில்
ஓயாமல் அடித்தது
ஓங்காரமான
உணர்வலைகள்
கன்னி அவளைக்
கண்டதும்
கண்களில் எழுந்து
அடித்ததொரு
காதல் அலையே !
அழகாக கண்ணாடிக்
கூட்டினில்
அடுக்கிய
தின்பண்டங்களைக்
கண்டதும்
அடித்ததங்கே
பசியலையே !
ஆலய வாசலினிலே
கால்கள்
பதிந்தவுடன்
மனமென்னும் இருள்
வீட்டில்
ஒளியேற்றி
அடித்ததொரு
அருளலையே !
அன்னை , தந்தை
ஞாபகங்கள்
நெஞ்சினிலே
நிறைந்திடுகையில்
துயர் பொங்க
கண்களிலே அணை
கட்டும் நீரதனால்
உயர்ந்ததொரு
அன்பலையே !
ஆசிரியர் பள்ளியிலே
அழகாக
உன்னத எதிர்காலத்திற்கு
உதவியாய்
புகட்டிய புனித அலை
அறிவலையே !
இத்தனை அலைகளையும்
தாங்கிய இதயமெனும்
கடற்கரையோ
இன்றுவரை
பலருக்கும் புரியாத
ஓர் புதிரலையே !
-சத்தி சக்திதாசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01