நான் வீழ்வேனென நினைத்தாயோ
-------------------------------------------
ஓயாமற்பல கைகளெனை
ஓங்கியோங்கி அடித்தவாறே
இருக்கின்றன
சமயம் பார்த்தெனையடிப்பதற்கெனக்
காத்திருக்கின்றன
ஓராயிரம் சோடிக் கைகள்
உறுதியான வார்த்தைகள் சொல்கிறேன்
இக்கைகளுடையோரின் காதுகளில்
இவை உறைக்கட்டும்…
எனையடிக்கும்
ஒவ்வொரு கைக்கும்
ஒரு வலி நிச்சயம்!
அடித்துக்கொண்டேயிருங்கள்
கைகளோயுமட்டும்!
வலி உங்களிடமும்
வலிமை என்னிடமும்
ஏறிக்கொண்டேயிருக்கிறது
மறவாதீர்கள்!
எனை ஏளனப்பார்வை பார்க்கும்
அதிருஷ்டதேவதை மைந்தர்களே…
உங்கள் விழிகள் அவிந்துபோகும்
பிரகாசத்துடன் நானொளிரும் நாட்கள்
நெருங்கிக்கொண்டிருக்கின்றன
எச்சரிக்கையோடிருங்கள்
எதிர்காலகுருடர்களே!
என் நெஞ்சத்திலெரியும் நெருப்பில்
என் வெற்றிகளை
நான் வார்த்தெடுக்கும் வெப்பத்தில் –
எனை நேசிக்கமறுத்த மனங்கள்
கருகிப்பொசுங்கும் துர்நாற்றம் –
என் நாசிகளுக்கு மட்டும் நறுமணம்.
- ஜதி
[20081010]
http://jathiyin-pakkangal.blogspot.com
- ஜதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-11-04