மீண்டும் பிறப்போம்
----------------------------------
மரணக் காட்சிகள் மறுபடியும் மறுபடியும்;
பிணக் காடுகளாய்
மனதில் விரிகின்றன
நரம்புகளின் வீம்பும்
விரக்தியும்
மாறி மாறிப் பாய்ந்து
நினைவின் கதியால்
துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன
மிரண்டு விழிக்கின்ற குழந்தைகளின்
இளஞ்சிவப்பும் தோய்ந்து
கண்ணீர்த் துளிகளாகி
முற்றிலும் உலகை
மூடித் ததுப்புகிறது கருநீலம்
வானத்தில் தொங்கும் நட்சத்திரங்கள்
என்றுமே கண்டிராத ஒரு மாபெரும் பறவைபோல்
மிதப்பதைப் பார்க்கிறேன்
தோலைக் கிழித்து
அலகுகளால் குருதியை உறுஞ்சும்
ஆசுவாசமான காற்றோடு அளைகின்றேன்
இன அழிப்பின் அந்த மரண ஓலங்கள்
என்னை உலுக்கி அசைப்பதை உணர்கின்றேன்
உறுப்புக்கள் சிதைந்து
செயலிழந்து ஆசைவின்றி ஆழ்ந்து
அழுகுவதைப் பார்த்து
இறப்பு என்ற
பிரக்ஞைக் குறிப்பு மட்டும்
எப்படி இன்னும்
இறக்காமல் இருக்கிறது என்று எண்ணுகின்றேன்
உண்மை
உலகத்தில் இரகசியமாகவே உலவுகிறது…
நம்பிக்கை…
ஒடுக்கப்படுபவர்கள்
ஓங்கி எழுவார்கள்…
உயிர்பறிக்கும் உடமைகள் எல்லாம்
சுட்டுப் பொசுங்கட்டும்!
உறுதி வாய்ந்த சூரியன் மெல்லெழுந்து
வசந்த பருவத்தின் புதுமையிலே
கத கதப்பைப் பொழிவான்
உலகத் தமிழர்களின்
பரவசக் கணங்கள் விரைவில் மலரட்டும்!
உலகத் தமிழர்களே!
உயிரிழந்த உறவுகளால் நிலை குலைய வேண்டாம்
கடுமையான உழைப்பினால் விளைவதே மன
எழுச்சி என்பதை உணர்ந்திடுவோம்!
நம்மால் முடியும்
பீனிக் பறவைகள்போல்
திரும்பவும்
உருவெடுத்து வாழ்வோம்!
23.5.2009
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-31