01.
எச்சங்கள்
--------------
முகம் மறைத்தபடி கைதாகும்
அழகிகளின்
விடுதிகளில் எல்லாம்
புறவாசல் திறந்தே இருக்கின்றது
முன்வாசலில் உயிர்த்தெழுபவர்கள்
இயேசு வருவதற்குள்
கல்லெறிகின்றார்கள்
02.
கண்ணாடி பெட்டியை உடைக்கும் கண்ணீர்கள்
--------------------------------------------------------------
புன்னகையோடு வரவேற்கின்ற விமான பணிப்பெண்கள் ...
முன் இருக்கையிலிருந்து சிரிக்கின்ற குழந்தை...
பக்கத்து இருக்கை பயணிகள் ...
இப்படி சோகத்தை
யாரிடமுமே கடத்திவிடாமல்
இயல்பாய் இருப்பதாய் நடிக்கும் அந்தப் பயணத்தில்,
நான்
மரணத்தின் வலி சுமந்து..
கண்ணாடி பெட்டியை உடைக்கும்
கண்ணீர்கள் சேகரித்து செல்கிறேனென....
தெரிந்திருந்தால்
நிச்சயமாய் அறிவித்திருக்க மாட்டார்கள்
Have a pleasant journey
என்று...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-03-23