வாழ்க்கையை வாழ முடியுமா?

-- ஆ. மணவழகன்

பயணத்தில்
பக்கத்து இருக்கையாளரிடம் - நட்பாய்
புன்னகையை உதிர்க்க முடியுமா?

தாய் தோளில் சாய்ந்து
தன்னுலகம் இதுவென
கண்ணுறங்கும் குழந்தை,
மன்பதையில் முதல் அதிசயம்...
மனதில் வியக்க முடியுமா?

பூத்துக் குலுங்கும் மலர்
இப்புவியில் மற்றுமோர் அதிசயம்..
புரிந்து பூரிக்க முடியுமா?

ஆடும் மயிலல்ல...
அண்டங் காக்கையையும்
அழகென ரசிக்க முடியுமா?

பௌர்ணமி நிலவல்ல...
அமாவாசை இரவையும்
ஆழ்ந்து அனுபவிக்க முடியுமா?

இன்ப நிலையல்ல...
துன்பச் வழலிலும்
சிரிக்க முடியுமா?

இருக்கும் இருப்பல்ல...
இல்லாத நிலையிலும்
இயன்றதைக் கொடுக்க முடியுமா?

காதலும் காமமும்
கருத்தில் வேறல்ல...
கண்டு தெளிந்திட முடியுமா?

எது நடக்கிறதோ
அதை அதுவாக
அப்போதே வாழ்ந்துகாட்ட முடியுமா?

நேற்றைத் துறந்து
நாளை மறந்து
இன்றில் திளைக்க முடியுமா?

மழைச் சாரலிலும்
மாலை வெய்யிலிலும்
உடலோடு மனதாலும் நனைய முடியுமா?

தளிரில் மட்டுமல்ல
சருகிலும் தத்துவமுண்டு,
படிக்க முடியுமா?

இளமைக்கு மட்டுமல்ல
முதுமைக்கும் அழகுண்டு
கலையோடு காணமுடியுமா?

முயன்று பார்!
முடியும் என்றால்...
நீ
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!

manavazhahan

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-05-24 00:00
Share with others